||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஆத்ம தேவன் - 2
ஸ்கந்தம் 01
ஸாதுவிடமிருந்து பழத்தைப் பெற்றுக் கொண்ட ஆத்ம தேவனுக்கு ஸந்தோஷம் தாங்கவில்லை. ஓட்டமும் நடையுமாக வீட்டிற்கு வந்தார். பழத்தை மனைவியிடம் கொடுத்து,
“நம் குறையெல்லாம் தீர்ந்தாச்சு. இந்தப் பழத்தை நீயே சாப்பிடு. குழந்தை பிறக்கும்னு அனுக்ரஹம் பண்ணி ஒரு ஸாது கொடுத்தார். “
அவளுக்கு எரிச்சலாக வந்தது. இருந்தாலும் அடக்கிக்கொண்டு, பழத்தை வாங்கி ஸ்வாமி இடத்தில் வைத்தாள். குழந்தை பிறந்தால் அழகு போய் விடும் என்பதே அவளது பெரும் கவலை. மேலும் இரவில் குழந்தை அழும். உறக்கம் கெடும். இருக்கும் வரை நன்றாக அனுபவித்து விட்டு ப் போய் விட வேண்டும். குழந்தை எதற்கு?
ஆனால் அதை கணவரிடம் சொல்ல தயக்கமாய் இருந்தது. ஒருவேளை அந்த ஸாதுவின் ப்ரசாதத்தால் குழந்தை வந்து விட்டால் என்ன செய்வது என்று யோசித்தாள்.
கணவனிடம் சென்று, “நமக்கு நல்லபடியாகக் குழந்தை பிறக்கணும்னு வேண்டிக்கிட்டு தீர்த்த யாத்திரை போய் வாங்க. நான் என் அக்காவைக் கூப்பிட்டு உதவிக்கு வெச்சுக்கறேன்“ என்றாள்.
ஆத்ம தேவனும் தீர்த்த யாத்திரைக்கு புறப்பட்டார். குழந்தை நல்ல குணங்களோடும், மஹாத்மாகவும் விளங்க வேண்டும் என்பதே அவரது பிரார்த்தனை.
அவர் போனதும் துந்துலி தன் சகோதரியை அழைத்தாள்.
அவளிடம் தன் பிரச்சினையைச் சொன்னதும், அவளோ, “துந்துலி, எனக்கு ஏற்கனவே ஐந்து குழந்தைங்க இருக்கு. இப்ப வேற மறுபடி உண்டாயிருக்கேன். என் வீட்டிலோ வறுமை. குழந்தைகளை வளர்க்க முடியல. நீ கொஞ்சம் பணம் கொடுத்தா என் வயத்தில இருக்கற குழந்தையை பெத்து உனக்கே தரேன். கொஞ்ச நாள் உன் கூடவே இருந்து வளர்த்தும் கொடுக்கறேன்.“ என்றாள்.
துந்துலிக்கு தன் வயிறு பெரிதாகும் என்று நினைத்தாலே கஷ்டமாக இருந்தது. எனவே, தமக்கையோடு உடன்பட்டாள்.
“சரிக்கா, இந்தப் பழத்தை என்ன பண்றது? “
“கொண்டா“ என்று அதை வாங்கி கழுநீர்த் தொட்டியில் போட்டாள் அக்காள்.
சில மாதங்களில் அக்காவுக்கு குழந்தை பிறந்தது. ஆனால், ஆச்சரியம் பாருங்கள், அவர்கள் வீட்டிலிருந்த பசு மாடு அன்றே ஒரு மனிதக் குழந்தையை ஈன்றெடுத்தது. ஆனால் அதன் காதுகள் மாட்டின் காதுகள் போல் இருந்தன.
திடீரென்று பசு மாட்டிற்கு மனிதக் குழந்தை பிறந்ததும் திகைத்துப் போனார்கள் சகோதரிகள்.
ஓரிரு நாள்களில் ஆத்ம தேவன் திரும்பி வந்து விட, துந்துலி தன் சகோதரியின் குழந்தையை தன் குழந்தை என்று சொன்னாள்.
ஆனால் அந்தக் குழந்தை களையின்றி விகாரமாய் இருந்தது. பசு மாட்டிற்குப் பிறந்த குழந்தையோ, பார்த்தவுடனேயே மஹாத்மா என்று சொல்லும் படியான ஸாமுத்ரிகா லக்ஷணங்களுடன் விளங்கியது.
பசு மாட்டுற்கு மனிதக் குழந்தை எப்படிப் பிறந்தது என்று அவருக்கு விளங்கவேயில்லை.
தன் குழந்தைக்கு துந்துகாரி என்றும், பசு ஈன்றெடுத்த குழந்தைக்கு கோகர்ணன் என்றும் பெயரிட்டார்.
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக குழந்தைகள் வளர்ந்தன. துந்துகாரி மஹா துஷ்ட ஸ்வபாவம் கொண்டவனாய் இருந்தான். ஸாதுவின் ப்ரசாதமான கோகர்ணன் எல்லா சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்து தேஜஸ்வியாக இருந்தான். இயல்பாகவே ஞானியாகவும் இருந்தான். துந்துகாரி வளர வளர கெட்ட பழக்கங்களும் வளர்ந்தன. ஒரு நாள் ஆத்ம தேவனிடம் பணம் கேட்டு தந்தை என்றும் பாராமல் அவரை ஓங்கி ஒரு அறை விட, அவர் வாசலில் வந்து விழுந்தார். வலியால் துடித்த அவரை திண்ணையில் அமர்ந்து ஜபம் செய்து கொண்டிருந்த கோகர்ணன் பார்த்தான்.
அவனிடம், “என் பிள்ளை அடிச்சுட்டான்“ என்றதும், கலகலவென்று சிரித்தான் கோகர்ணன்.
“அப்பா, இன்னும் உங்களுக்கு அஞ்ஞானம் விடலியா? அடிக்கறான். அவனை என் பிள்ளைங்கறீங்க. இவன் கர்மா செய்தா நீங்க நரக வாசத்திலேர்ந்து தப்பிக்க போறீங்க? அன்னிக்கே அந்த ஸாது சொன்னார் ஸன்யாஸே ஸர்வதா சுகம்னு. பகவானை தேடுங்கப்பா. இவ்வளவு கஷ்டப்பட்டப்றமும் கூட இந்த ஸம்ஸாரம் இனிக்கறதா?“ என்று கேட்டான்.
ஆத்ம தேவன் அந்த ஸாதுவே, குருவாக கோகர்ணனின் உருவில் வந்தாரோ என்று நினைத்தான். அக்கணமே வீட்டைத் துறந்து கிளம்பினான். தனக்கு ஆதரவாய் இருந்த ஆத்ம தேவன் கிளம்பியதும் கோகர்ணனும் தீர்த்த யாத்திரை கிளம்பினார்.
துந்துகாரி பணத்திற்காக வழிப்பறி, கொள்ளை ஆகியவற்றில் ஈடுபட்டான். தட்டிக் கேட்ட தாயான துந்துலியை அடித்தே கொன்று விட்டான். பின்னர், சில பெண்களை அழைத்து வந்து உல்லாஸ வாழ்க்கை நடத்தத் துவங்கினான். அவர்களை சந்தோஷப்படுத்த அவன் ஏராளமான பொருளைக் கொள்ளை அடிக்க, அந்தப் பெண்களுக்கு ராஜ தண்டனை வருமோ என்று பயமேற்பட்டது. அவர்கள் பொருள்கள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு ஒரு நாள் இரவு துந்துகாரியின் தலையில் கல்லைப் போட்டுக் கொன்று விட்டு ஓடி விட்டனர்.
துந்துகாரி தான் செய்த பாவங்களின் விளைவால் துர்மரணம் ஏற்பட்டு, பித்ரு லோகத்தை அடைய முடியாமல், ப்ரும்ம ராக்ஷஸாக மாறி அந்த வீட்டிலேயே இருக்கத் துவங்கினான்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment