||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
கௌரவர்களுக்கு அக்ருரரின் அறிவுரை|
அஸ்தினாபுரத்தில் அவர் பெரியவர்களான பீஷ்மர், திருதராஷ்டிரர், விதுரர், குந்திதேவி ஆகியோரைப் பார்த்தார். அவர்களுடன் பேசி அங்குள்ள நிலைமையை நன்கு அறிந்து கொண்டார். துரியோதனன் எப்படி பாண்டவர்களைக் கண்டு பொறாமைப்படுகிறான் என்றும், எப்படிப் பல வழிகளில் அவர்களைத் துன்புறுத்துகிறான் என்றும் விதுரரிடமிருந்து தெரிந்து கொண்டார்.
குந்தியும் அக்ருரை வந்து பார்த்து, மதுராவில் உள்ள தன் உறவினர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று விசாரித்தாள். அவர்களுடைய புகழ் இவள் காதுக்கும் எட்டியிருந்தது. அவள் உள்ளூறத் தன் மக்களுக்குப் பாதுகாப்பு தர விரும்பினாள். புலிகளுக்கிடையில் சிக்குண்ட பெண்மானைப் போல அவள் வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தாள். ஏனெனில் பாண்டவர்களைக் கொல்லுவதற்குத் துரியோதனன் திட்டமிட்டுக் கொண்டேயிருந்தான். அவளுடைய கணவர் பாண்டு இறந்த பிறகு, அவளுடைய ஒரே கவலை தன் மக்களைக் காப்பாற்றுவது மட்டும் தான். ஒரு நாள் கிருஷ்ணன் வந்து தங்களைக் காப்பாற்றுவான் என்று அவள் எதிர்பார்த்துக் கொண்டேயிருந்தாள்.
அஸ்தினாபுர நிலைமையை நன்கு தெரிந்து கொண்ட பின்னர், அக்ருரர் மதுரா திரும்ப நினைத்தார். விடை பெற்றுக் கொள்வதற்காக அக்ருரர் திருதராஷ்டிரனைச் சந்தித்தார், அப்பொழுது அவர் திருதராஷ்டிரனுக்கு ஒரு புத்திமதி கூறினார்---
"அன்புள்ள அரசரே! தாங்கள் நியாயமின்றிப் பாண்டவர்களின் அரசைப் பிடுங்கி வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். தாங்கள் தர்மத்திலிருந்து விலகி விட்டீர்கள். பாண்டவர்களை நல்ல முறையில் தாங்கள் நடத்தவில்லை. தாங்கள் இப்படியே நடந்துக் கொண்டால், பாண்டவர்களுக்கும் தாங்கள் பிள்ளைகளுக்குமிடையே நிச்சயமாகச் சண்டை ஏற்படும். பாண்டவர்கள் தர்மத்தின் வழி செல்பவர்கள் ஆதலால், அவர்கள் தாம் வெற்றி பெறுவார்கள், உங்கள் பிள்ளைகள் கொல்லப்படுவார்கள்" என்று சொன்னார்.
இப்படி அக்ருரர் தீர்க்கதரிசனம் கூறிவிட்டு மதுரா திரும்பினார். அங்குள்ள உண்மையான நிலையைப் பற்றியும் திருதராஷ்டிரனின் கெட்ட எண்ணங்களைப் பற்றியும் கிருஷ்ணனிடம் விளக்கமாகக் கூறினார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment