||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
திவ்ய ப்ரபந்தம் - 96 - பக்தி மிக்க மக்களைப் பெறுவர்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - ஏழாம் திருமொழி - பதினொன்றாம் பாசுரம்
ஆயர் குலத்தினில் வந்து தோன்றிய*
அஞ்சன வண்ணன் தன்னைத்*
தாயர் மகிழ ஒன்னார் தளரத்*
தளர் நடை நடந்ததனை*
வேயர் புகழ் விட்டுசித்தன்*
சீரால் விரித்தன உரைக்க வல்லார்*
மாயன் மணிவண்ணன் தாள் பணியும்*
மக்களைப் பெறுவர்களே! (2)
- ஆயர் குலத்தினில் - இடையர் குலத்தில்
- வந்து தோன்றிய - வந்து அவதரித்த
- அஞ்சன வண்ணன் - மை போன்ற கரு நிறம் உடையவனான கண்ணன்
- தன்னை - தன்னைக் கண்டு
- தாயர் - தாய்மார்கள்
- மகிழ - மனம் மகிழவும்
- ஒன்னார் - விரோதிகள்
- தளர - வருத்தமடையவும்
- தளர்நடை நடந்ததனை - தளர்நடை நடந்ததை
- வேயர் - வேயர் குடியிலிருப்பவர் எல்லாராலும்
- புகழ் - புகழப் பெற்ற
- விட்டுசித்தன் - பெரியாழ்வார்
- சீரால் - சிறப்பாக
- விரித்தன - விவரித்துச் சொன்ன பாசுரங்களை
- உரைக்க வல்லார் - சொல்ல வல்லவர்கள்
- மாயன் - ஆச்சர்யமான குணங்கள உடையவனும்
- மணி - நீல மணி போன்ற
- வண்ணன் - நிறமுடையனுமான எம்பெருமானுடைய
- தாள் - திருவடிகளை
- பணியும் - வணங்க வல்ல
- மக்களை - பிள்ளைகளைப்
- பெறுவார்கள் - பெறுவார்கள்
எதிரிகளை ஒடுக்கவும், தாய்மார்களை மகிழ்விக்கவும் இடையர் குலத்தில் உதித்த மை போன்ற திருமேனியை உடைய எம்பெருமான் கண்ணன் தளர் நடை நடந்ததை வேயர் குலப் புகழோன் விஷ்ணு சித்தன் (பெரியாழ்வார்) விவரித்து உரைத்த இப்பாசுரங்களை கூற வல்லவர்கள் மாயன் மணி வண்ணனின் திருவடிகளை வணங்கவல்ல பிள்ளைகளைப் பெற்று இன்புறுவர்கள்.
குறிப்பு: மாயன்: ஆச்சர்யமான செயல்களைப் புரிபவன், திருமால் மணிவண்ணன்: நீல ரத்தினம் போன்ற நிறமுடையவன்.
அடிவரவு: தொடர் செக்கர் மின்னு* கன்னல் முன்னல் ஒரு கால்* படர் பக்கம் வெண் திரை* ஆயர் - பொன்
||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment