About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Saturday, 2 March 2024

ஸ்ரீமத் பாகவத புராணம் - 61

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

விதுர மைத்ரேய ஸம்வாதம் - 6

ஸ்கந்தம் 03

மைத்ரேயர் தொடர்ந்தார். அந்த ஊழிநீரில் தாமரைத் தண்டு போன்ற வெளுத்த பெருத்த திருமேனியுடைய ஆதிசேஷப் படுக்கையில் தனி ஒருவராகப் படுத்திருக்கும் ஸ்ரீ மன் நாராயணனைக் கண்டார் ப்ரும்மா. ஆதிசேஷனின் பதினாயிரம் முடிகளும் பகவானுக்குக் குடை பிடித்தது போல் இருந்தன. அதன் முடிகளில் ஒளிரும் ரத்தினங்கள் நாற்புறமும் உள்ள இருளை நீக்கி எங்கும் ஒளிமயமாக்கின.


ஸ்ரீ மன் நாராயணனது நீருண்ட மேகம் போன்ற திருமேனி மரகத மலையின் ஒளியை மங்கச் செய்வது. இடுப்பில் விளங்கும் பொன்னாடை மாலை நேர சூரிய கிரணங்களைத் தாங்கும் மேகம்போல் இருந்தது. தலையில் விளங்கும் கிரீடம் மரகத மலைக்குப் பொற்சிகரங்கள் போலிருந்தது. அவரது திருமார்பில் விளங்கும் வனமாலையோ மரகதமலையில் உள்ள செடி, கொடிகள், அருவிகள், ரத்தினங்களின் அழகை விஞ்சுவதாக இருந்தது. மூன்று உலகங்களையும் தன்னுள் கொண்ட ஸ்ரீ மன் நாராயணனின் திருமேனியின் நீள அகலங்களை வர்ணிக்க இயலாது‌. திருமேனியெங்கும் அணிகலன்கள். பீதாம்பரம், ஆடை, அணிகலன்களால் இவருக்கு அழகு சேரவில்லை. இவரது திருமேனியால் தான் அவற்றிற்கு அழகு.

தங்கள் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டி பற்பல வழிகளில் தொழுதேத்தும் தன் பக்தர்கள் காண்பதற்காக திருவடியைச் சற்றே உயர்த்தி வைத்துக் கொண்டிருக்கிறார். தாமரை இதழ் போன்ற மெல்லிய விரல் நகங்களின் அழகு நிலவை வெட்கமுறச் செய்வது. உயர்ந்த அழகிய மூக்கு, வில் போன்ற வளைந்த புருவங்கள், காதுகளில் அழகு மிளிரும் மகர குண்டலங்கள், கொவ்வைப் பழம் போன்ற சிவந்த அதரங்கள், அடியார்களின் துன்பம் துடைக்கும் புன்னகை, இவ்வாறான திருமுக மண்டலத்தால் தன் அடியார்களை மகிழச் செய்கிறார். இடுப்பில் கதம்ப மலரின் கேசரங்கள் போல் மஞ்சள் நிறப்பொன்னாடை, அதன் மேல் அரைஞாண், மார்பில் ஸ்ரீ வத்ஸம் என்ற மரு. கழுத்தில் விலை மதிப்பில்லா முத்துச் சரங்கள், என்னே அழகு!

அடுத்ததாக பகவானை சந்தன மரத்திற்கும் மலைக்கும் ஒப்பிட்டு வர்ணிக்கிறார் ஸ்ரீ சுகர்.

பகவானின் கழுத்தில் வனமாலை. வேதங்கள் பகவானைத் துதிப்பதுபோல் வனமாலையில் மொய்க்கும் வண்டுகள் இனிதே ரீங்காரம் செய்து பாடுகின்றன. ஆகவே வனமாலை அவரது புகழின் இருப்பிடமாகிறது. வனமாலையின் அம்சமாகத் தோன்றிய தொண்டரடிப்பொடி ஆழ்வாரும் புஷ்ப கைங்கர்யம் செய்தார். தான் குடியிருக்கும் பகவானின் அதே உருவில் ஈடுபட்டு பூலோக வைகுண்டம் வந்து அரங்கன் சேவையில் ஈடுபடுகிறார். அவர் பாடிய திருமாலையில் ஒரு பாடலான பச்சை மாமலை போல் மேனி, மேற்கண்ட பாகவத ஸ்லோகங்களின் மொழி பெயர்ப்போ எனும் அள்விற்கு, ஒத்துப் போகின்றன. அவர் வனமாலையாய்த் தவழ்ந்த அதே பகவானை பூலோக வைகுண்டத்தில் கண்டு வர்ணித்திருக்கிறார். இறைவனின் காட்சி மறைந்ததும், ப்ரும்மா ரஜோ குணம் நிரம்பியவராகி உலகைப் படைக்க விரும்பினார்.

ப்ரளய ஜலம், ஆகாயம், வாயு, தாமரை மலர், தான் ஆகிய இவை ஐந்தே விஷயங்கள்தான் அவருக்குத் தெரிந்தன. இவற்றை வைத்துக் கொண்டு எப்படி படைப்புத் தொழிலை நிகழ்த்துவது என்று அவருக்குப் புரியவில்லை. அதனால் தன் தோற்றத்திற்குக் காரணமான பகவானை ஒன்றுபட்ட மனத்துடன் மீண்டும் தியானிக்கத் துவங்கினார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment