About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 20 December 2023

லீலை கண்ணன் கதைகள் - 77

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

கிருஷ்ணர் சத்யபாமாவின் திருமணம்|

கிருஷ்ணருடன் வந்த நண்பர்கள் குகைக்கு வெளியே பன்னிரண்டு நாட்கள் காத்திருந்தார்கள். ஆனால் கிருஷ்ணர் வராமல் போகவே வருத்தத்தோடு வீடு திரும்பினார்கள். கிருஷ்ணரின் குடும்பத்தினர் கிருஷ்ணருக்கு என்ன ஆயிற்றோ என்று நடுங்கினார்கள். கிருஷ்ணர் நலமாகத் திரும்பி வர வேண்டும் என்று துர்க்கா தேவியை வேண்டிக் கொண்டார்கள். அப்பொழுது கிருஷ்ணர் ஜாம்பவதியுடன் வீடு திரும்பினார். அவரைக் கண்டு எல்லோரும் எல்லையற்ற ஆனந்தம் அடைந்தார்கள். அவருடைய புது மனைவியையும் அவர் தம் கழுத்தில் அணிந்திருந்த ஸ்யமந்தக மணியையும் கண்டு அவர்கள் பூரிப்பு அடைந்தார்கள்.


அந்த மணியைக் கிருஷ்ணர் தாம் வைத்துக் கொள்ள விரும்பவில்லை. சத்ராஜித்தை அரசவைக்கு வர வழைத்து, அந்த மணி எப்படி தமக்கு கிடைத்தது என்ற விவரத்தைச் சொல்லி, அதைச் சத்ராஜித்திடம் கொடுத்தார். சத்ராஜித், மிக்க அவமானம் காரணமாக, ஸ்யமந்தக மணியைத் தன் தலையைக் குனிந்து கொண்டு கிருஷ்ணரிடமிருந்து வாங்கிக் கொண்டார். தாம் செய்த தவற்றை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டே அவர் வீடு திரும்பினர்.

கிருஷ்ணருக்கு நன்றியை எப்படித் தெரிவிப்பது என்று சத்ராஜித் யோசித்தார். அவரோடு நட்பாக இருக்க வேண்டும் என்று நினைத்தார். தமது மகள் சத்யபாமாவைக் கிருஷ்ணருக்குத் திருமணம் செய்து கொடுப்பது என்றும், அப்பொழுது ஸ்யமந்தக மணியைக் கிருஷ்ணருக்குக் கொடுப்பதென்றும் தீர்மானித்தார். ஆனால், சத்யபாமாவை ஏற்றுக் கொண்ட கிருஷ்ணர், அந்த மணியை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார். "சூரிய பகவான் கொடுத்த அதைத் தாங்கள் வைத்துக் கொள்வது சரி தான், அந்த மணியினால் எங்களுக்குப் பின்பு அனுகூலம் கிடைக்கும், சத்யபாமா தங்களின் ஒரே குழந்தையாதலால், தங்களுக்குப் பிறகு அந்த மணி சத்யபாமாவுக்குத் தானே கிடைக்க போகிறது?" என்றார்.

கிருஷ்ணர் தனக்குக் கணவனாகக் கிடைத்ததைப் பற்றி நினைத்து சத்தியபாமா மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment