About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 20 December 2023

திவ்ய ப்ரபந்தம் - 67 - பெரியாழ்வார் திருமொழி - 1.5.4

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 67 - அசுரர்களை அழித்தவனே!
பெரியாழ்வார் திருமொழி 
முதலாம் பத்து - ஐந்தாம் திருமொழி - நான்காம் பாசுரம்

வானவர் தாம் மகிழ வன் சகடமுருள* 
வஞ்ச முலைப் பேயின் நஞ்சமது உண்டவனே!* 
கானக வல் விளவின் காய் உதிரக் கருதிக்* 
கன்றது கொண்டெறியும் கரு நிற என் கன்றே!* 
தேனுகனும் முரனும் திண் திறல் வெந்நரகன்* 
என்பவர் தாம் மடியச் செரு அதிரச் செல்லும்* 
ஆனை! எனக்கொரு கால் ஆடுக செங்கீரை* 
ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே|

  • வானவர் தாம் - தேவர்கள்
  • மகிழ - மகிழும் படியாகவும்
  • வல் சகடம் - சக்கர வடிவில் வந்த வலிமை மிக்க சகடாஸுரன்
  • உருள - உருண்டு தூள் தூளாக நொறுங்கிப் போகும் படியாகவும்
  • வஞ்சம் - வஞ்சக எண்ணம்  உடையளான
  • பேயின் - பூதனையினுடைய
  • முலை - முலை மேல் தடவிக் கிடந்த
  • நஞ்சு - விஷத்தை
  • அமுது உண்டவனே - அம்ருதத்தை அமுது செய்யுமா போலே அமுது செய்தருளினவனே!
  • கானகம் - காட்டிலுள்ள 
  • வல் - வலிமை பொருந்திய
  • விளவின் - விளா மரத்தினுடைய
  • காய் -  காய்கள்
  • உதிர - உதிரும் படி
  • கருதி - திருவுள்ளத்தில் கொண்டு
  • கன்று அது கொண்டு - பசுங் கன்றின் உருவில் உருமாறி வந்த வத்சாசுரன் என்னும் அசுரனை கையில் கொண்டு
  • எறியும் - விளவின் மேல் எறிந்தவனாய்
  • கருநிறம் - மை வண்ண தேகம் கொண்ட என் கரிய நிற  
  • என் கன்றே - என் கன்னுக் குட்டியே! 
  • தேனுகனும் - தேனுகாஸுரனும் 
  • முரனும் - முராஸுரனும்
  • திண்திறல் - திண்மையான வலிமை உடைய
  • வெம் - கொடுமையானவனான
  • நிரகன் - நிரகாஸுரனும்
  • என்பவர் தாம் - போன்ற அனைவரும் 
  • மடிய - மாளும் படியாக
  • செரு - யுத்தத்திலே
  • அதிர - மிடுக்கை உடையனாய் 
  • செல்லும் - எழுந்தருள்பவனான
  • ஆனை - ஆண் யானை போன்ற கண்ணனே!
  • எனக்கு - எனக்காக
  • ஒருகால் - ஒரு முறை
  • செங்கீரை ஆடுக - செங்கீரை ஆடியருள வேணும்
  • ஆயர்கள் - இடையர்களுக்காக 
  • போர் ஏறே - போர் செய்ய, ரிஷபம் போலே நின்ற கண்ணனே! 
  • ஆடுக ஆடுகவே - ஆடிக் காட்டுவாயாக

வானுலகத்து தேவர்கள் மகிழும்படி, தீய எண்ணம் கொண்டு சக்கர வடிவில் வந்த சகடாசுரனை தூள் தூளாக நொறுங்கிப் போகும் வண்ணம் உன் பிஞ்சுக் கால்களால் உருட்டி உதைத்து அழித்தாய்; வஞ்சக எண்ணம் கொண்டு உனக்குத் தாயமுது கொடுப்பது போல் நஞ்சமுது கொடுக்கத் துணிந்த பூதனை என்னும் அரக்கியின் உயிரைக் குடித்தவனே!, காட்டில் இருந்த வலிமை மிக்க விளா மரத்தினுடைய காய்கள் உதிரக் கல் எறிவது போல், பசுங் கன்றின் உருவில் உருமாறி வந்த வத்சாசுரன் என்னும் அசுரனை தூக்கி மரத்தின் மேல் எறிந்து, விழச் செய்து, கொன்ற மை வண்ண தேகம் கொண்ட என் கரிய நிறக் கன்னுக் குட்டியே! தேனுகாசுரன், நரகாசுரனின் அண்ணனான, ஐந்து தலைகளைக் கொண்ட முராசுரன் மற்றும் வலிமையும் துணிவும் மிகுந்த சினம் எனும் செந்தீயைத் தன்னிடத்தே கொண்ட நரகாசுரன் மற்றும் பல அசுரர்களை எல்லாம் கொன்று வானோர்களையும் விண்ணோர்களையும் காப்பாற்றிய, எதிரிகளுக்கு மரண பயத்தைத் தந்து நடுக்கம்  கொள்ள, அதிரச் செய்யும் வலிமை மிக்க ஆண் யானை போன்றவனே, ஆயர்களின் காளையே , பசுக்களின் ரக்ஷகனே, எனக்காக ஒருமுறை செங்கீரை ஆடி விடு என்கிறாள் யசோதை!

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment