||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
052 இங்கு இல்லை என்றேனோ ததிபாண்டனைப் போலே|
கண்ணன் மீது அன்பு மிக்கவன் ததிபாண்டன். ஆயர்பாடியில் தயிர் விற்பவன். கண்ணன் அவ்வப்போது இவனிடம் குறும்புகள் செய்வது வழக்கம்.
கன்றுகள், தாய்ப்பசுவிடமிருந்து அதிகம் பாலைக் குடித்து உடம்பைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது என அதன் வாயைக் கட்டி வைத்திருப்பார்கள். அதற்கு ததிபாண்டன் காவல். கண்ணன் அவ்வப்போது அவனுக்குத் தின்பண்டங்களைக் கொடுத்து அவனை வெளியே அனுப்பிவிட்டு பாலைக் குடித்து விடுவான்.
ஒருமுறை, என்றும் போல், வெண்ணை திருடி கண்ணன் மாட்டிக்கொள்ள, கோபியர்கள் துரத்தி வருகிறார்கள். கண்ணனும் அவன் நண்பர்களும் போக்கு காட்டி தெருக்களில் முத்துக்களாய் சிதறி ஓட, கண்ணன் ததிபாண்டனின் இல்லத்திற்குள் நுழைகிறான். ததிபாண்டன் ஆயர்பாடியில் தயிர்விற்கும் ஒரு இடையர்குலத்தைச் சேர்ந்தவன். ததிபாண்டனின் வீட்டில் பெரிய பெரிய தாழிகளில் தயிர் ஊற்றி வைக்கப்பட்டிருக்கும். காலையில் அனைத்தையும் விற்றுவிட்டு மாலையில் காலி பானைகளை அலம்பி வைத்திருப்பார். அப்படி ஒரு பெரிய காலியான தயிர் தாழிக்குள் கண்ணன் மறைந்து கொள்கிறான்.
இதனை ததிபாண்டன் பார்த்து விடுகிறார். கிடைத்த வாய்ப்பை நழுவ விடலாமா? ததிபாண்டன் ஓடி சென்று அந்த தாழியை மூடி, அதன் மேல் அமர்ந்து கொள்கிறார். கண்ணனை எல்லா இடத்திலும் தேடி கலைத்த கோபியர்கள், ததிபாண்டனை நோக்கி “கண்ணன் இங்கே வந்தானா?” என்கின்றனர்.
“இல்லையே!”- என்கிறார் ததிபாண்டன், சற்றும் யோசிக்காமல்.
கோபியர்கள் போன பின்பும் ததிபாண்டன் தாழியின் மேலிருந்து இறங்கவில்லை. உள்ளே கிருஷ்ணனுக்கு மூச்சு முட்டுகிறது. தனது புல்லாங்குழலால் தட் தட் என்ற பானை மூடியில் தட்டி மூடியை திறக்க சொல்லுகிறான்.
“உன்னை வெளியில் கொண்டுவர வேண்டுமென்றால் ஒரு நிபந்தனை. நீ எனக்கு மோட்சம் கொடுக்க வேண்டும்”- என்கிறார் ததிபாண்டன்.
“மோட்சம் கேட்கும் முறையா இது?? நான் ஏதோ ஆடு மாடு மேய்ப்பேன். குழலூதுவேன். வெண்ணை திருடி உண்பேன். வேறு எனக்கு என்ன தெரியும்?”- என்று ஸ்ரீகிருஷ்ணர் சிரிக்கிறார்.
“பூதனையை, சடகாசுரனை, கேசியை கொன்றவன் நீ. காளிங்க நர்த்தனம் ஆடியவன். கோவர்தனத்தைக் குடையாக பிடித்தவன். உன்னை நான் அறிவேன் கண்ணா! மோட்சம் கொடுப்பேன் என்று உறுதியளித்தால் மட்டுமே வெளியில் விடுவேன்.”- என்கிறார் ததிபாண்டன் உறுதியாக.
கண்ணனை அறிதல் என்பது மிக முக்கியமல்லவா?
சிரித்த கண்ணன் உடனே நிஷ்டையில் ஆழ்ந்தான். வைகுந்தத்திலிருந்து தேரும் தேவரும் வந்தனர். ததிபாண்டனை மட்டுமல்ல கண்ணன் ஒளிந்த தாழியையும் சேர்த்து வைகுந்தம் கொண்டு போனார்கள். வைகுண்டம் போனால் இப்போதும் அந்தப் பானையையும் பார்க்கலாம் என்பது ஸ்ரீவைஷ்ணவர்களின் நம்பிக்கை.
திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, " இப்படியாக ததிபாண்டன் போல், கண்ணனை தாழிக்குள் மறைத்து, அவனைக் காக்க எம்பெருமானின் நன்மைக்காக நான் போய் கூறினேனா? இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.
ஹரி ஓம்||
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment