||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
திவ்ய ப்ரபந்தம் - 39 - தேவகி மகனின் திருப்புருவங்கள்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - இரண்டாம் திருமொழி - பதினேழாம் பாசுரம்
பருவம் நிரம்பாமே*
பாரெல்லாம் உய்யத்*
திருவின் வடிவொக்கும்*
தேவகி பெற்ற*
உருவு கரிய*
ஒளி மணி வண்ணன்*
புருவம் இருந்தவா காணீரே*
பூண் முலையீர்! வந்து காணீரே|
- பருவம் - வயது
- நிரம்பாமே - முதிருவதற்கு முன்னமே
- பார் எல்லாம் - பூமியிலுள்ளவர் அனைவரும்
- உய்ய - துன்பங்களிலிருந்து விடுபடுவதற்காக
- திருவின் வடிவு ஒக்கும் - பிராட்டியின் வடிவழகை ஒத்த
- தேவகி - தேவகிப் பிராட்டியாலே
- பெற்ற - பெறப் பட்டவனான
- உருவு கரிய - உருவால் கறுத்தவனான
- ஒளி - பிரகாசமான
- மணி - மணி போன்ற
- வண்ணன் - நிறத்தை உடையவனான கண்ணபிரானுடைய
- புருவம் இருந்தவா காணீரே - புருவம் இருக்கின்ற அழகினை வந்து பாருங்கள்!
- பூண் முலையீர் - மார்புக்கு ஆபரணம் அணிந்த பெண்களே!
- வந்து காணீரே - வந்து பாருங்கள்!
பருவம் நிரம்பாத இளம் வயதிலேயே கொடியவர்களை அழித்து உலக உயிர்கள் அனைத்தும், உலகத்திலுள்ள துன்பங்களிலிருந்து விடுபடுவதற்காக, திருமகளைப் போன்ற அழகான தேவகி அன்னையின் திருவயிற்றில் மகனாகப் பிறந்த, கரிய உருவத்தில் நீலமணி ஒத்த வண்ணம் உடைய இந்த மழலைச் செல்வத்தின் கூர்மையான கண் புருவம் இருக்கின்ற அழகினை வந்து பாருங்கள். இந்த நீலமணி வண்ணனின், கரிய புருவம் எத்தனை அழகாய் அமைந்திருக்கிறது என்று வந்து பாருங்கள் என்று மார்பில் அழகிய அணிகலன் அணிந்துள்ள பெண்களை , அழைக்கிறாள் யசோதை.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment