||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
சாந்தீபனி முனிவரிடம் சிட்சை|
க்ஷத்ரியப் பிள்ளைகளுக்கு செய்யப்பட வேண்டிய முறைப்படி வசுதேவர் கிருஷ்ணனையும் பலராமனையும் முப்புரி நூல் (பூணூல்) போட வைத்தார். யாதவர்களின் குருவான கர்கர் என்ற மகரிஷி அந்த சடங்கை நடத்தி அவர்களுக்கு காயத்ரி மந்திரம் உபதேசித்தார்.பிறகு இருவரும் மிக்க அடக்கத்துடன் சாந்தீபனி முனிவரை அடைந்து, சாஸ்தரங்களை கற்று கொள்வதற்காக, அங்கே குரு குல வாசம் செய்ய விரும்புவதாக சொன்னார்கள். அவர்களுடைய நன்னடத்தையைக் கண்டு மகிழ்ந்து, அவர்களை சாந்தீபனி முனிவர் தம் சீடர்களாக ஏற்றுக் கொண்டார்.
எல்லா வேதங்களையும் உபநிஷதங்களையும் அவர்களுக்கு சொல்லிக் கொடுத்தார். அவர்களுக்கு வில் வித்தை, சில அஸ்திரங்களுக்கு உள்ள மந்திரங்கள் எல்லாவற்றையும் சொல்லி கொடுத்தார். அவர்களுக்கு மனதை ஒரு முகப் படுத்தி விஷயங்களைக் கிரகிக்கும் சக்தி இருந்ததனால் அறுபத்து நான்கு கலைகளையும் வெகு சீக்கிரம் கற்றுக் கொண்டு விட்டார்கள்.
பிறகு அவர்கள் குருவை பார்த்து, தங்களிடமிருந்து எதாவது குருதட்சணை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று வேண்டினார்கள். சாந்தீபனி முனிவருக்கு வேறு என்ன செய்ய வேண்டும்? அவருக்கு ஒரே ஒரு மகன் தான் பிறந்தான். ஒரு நாள் அவன் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த போது, தண்ணீரில் இறங்கி, மூழ்கி இறந்து விட்டான். தமது மகனைத் தமக்கு மீட்டுக் கொடுக்க முடியுமா என்று சாந்தீபனி முனிவர் கிருஷ்ணனைக் கேட்டார்.
கிருஷ்ணனும் பலராமனும் ஓர் இரதத்தில் ஏறி கடற்கரைக்குச் சென்றதும், அந்தக் குழந்தையைத் திருப்பித் கொடுக்கும் படி சமுத்திர ராஜனைக் கேட்டார்கள். சமுத்திர ராஜன் அவர்கள் முன்னால் தோன்றினான். கிருஷ்ணன் அவனைப் பார்த்து, “பல வருடங்களுக்கு முன்னர், உன்னுடைய அலைகள் சாந்தீபனி முனிவரின் சிறு மகனை விழுங்கி விட்டன. தயவு செய்து அவனை திருப்பிக் கொடு. குருவுக்கும் குரு பத்தினிக்கும் அவர்களுடைய குழந்தையை மீட்டுக் கொண்டு வருவோம் என்று வாக்களித்து இருக்கிறோம்” என்று சொன்னான். அதற்குச் சமுத்திர ராஜன், 'கிருஷ்ணா! அந்தச் சிறுவனைக் கொண்டு சென்றது நானல்ல. கடலில் பஞ்சசனன் என்ற ஓர் அசுரன் இருக்கிறான். அவன் பெரிய சங்கு உருவம் கொண்டு, எல்லோரையும் விழுங்கி விடுகிறான்' என்று சொன்னான். உடனே கடலில் குதித்து, ஆழத்திற்குச் சென்று பஞ்சசனைப் பிடித்து அவனை அங்கயே கொன்றான் கிருஷ்ணன். ஆனால் குருவின் மகனை அங்கே காணவில்லை, ஒரு பெரிய சங்கு தான் கிடந்தது. அதை எடுத்துக் கொண்டு அவன் தண்ணீருக்கு வெளியே வந்தான். அங்கிருந்து அவர்கள் இருவரும் யம ராஜனின் இருப்பிடமான சம்யமனீ என்னும் இடத்திற்குச் சென்றார்கள். கிருஷ்ணன் பாஞ்சசன்யம் என்று அழைக்கப்பட்ட அந்தச் சங்கை ஊதினான். பஞ்சசனன் என்பவனிடமிருந்து எடுக்கப்பட்டதால் அதற்குப் பாஞ்சசன்யம் என்ற பெயர் வந்தது.
சங்க நாதத்தைக் கேட்டதும் யமராஜன் ஓ டிவந்து, கிருஷ்ணனைத் தக்க மரியாதையுடன் வரவேற்றார். தான் குருவின் மகனின் உயிரை திரும்பி கொடுக்கும்படி கிருஷ்ணன் அவரைக் கேட்டான். யமராஜன் உடனே சம்மதித்து, சிறுவனைக் கிருஷ்ணனிடம் திருப்பிக் கொடுத்தார். கிருஷ்ணனும் பலராமனும் சிறுவனை சாந்தீபனி முனிவரிடம் அழைத்துச் சென்றனர். இன்னும் என்ன செய்ய வேண்டும் குருவே என்று அவரிடம் கேட்டனர். சாந்தீபனி முனிவர், “நீங்கள் மிகவும் நல்ல முறையில் குருதட்சணை செலுத்தி விட்டீர்கள், எனக்கு வேறு என்ன வேண்டும்? நீங்கள் உங்கள் பெற்றோரிடம் திரும்பி செல்லலாம்” என்றார். குரு உத்தரவு கொடுத்தும், இருவரும் தங்கள் இரதத்தில் மதுராநகரம் விரைந்தார்கள்.
பல நாட்களாக இவர்களைப் பிரிந்திருந்த மதுராவாசிகள் இவர்களைக் கண்டதும் மிகுந்த ஆனந்தம் அடைந்தனர்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment