ஸ்ரீ:
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
திவ்ய ப்ரபந்தம் – 47 - தேவர்கள் தந்த அரை ஞாண்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - மூன்றாம் திருமொழி - நான்காம் பாசுரம்
சங்கின் வலம் புரியும்*
சேவடிக் கிண்கிணியும்*
அங்கைச் சரி வளையும்*
நாணும் அரைத் தொடரும்*
அங்கண் விசும்பில்*
அமரர்கள் போத்தந்தார்*
செங்கண் கரு முகிலே! தாலேலோ*
தேவகி சிங்கமே! தாலேலோ|
- சங்கின் - சங்குகளில் சிறந்த
- வலம் புரியும் - வலம்புரிச் சங்கையும்
- சே அடி - சிவந்த திருவடிகளில் சாத்தத் தகுந்த
- கிண்கிணியும் - சதங்கையையும்
- அம் கை - அழகிய கைகளுக்கு உரிய
- சரி வளையும்- கை வளையல்களையும்
- நாணும் - திருமார்வில் பொன்னரை நாணையும்
- அரை தொடரும் - அரையில்அரை ஞாணும்
- அம் கண் - அழகியதாய் விசாலமான
- விசும்பில் - ஸ்வர்க்கத்திலுள்ள
- அமரர்கள் - தேவர்கள்
- போத்தந்தார் - அனுப்பினார்கள்
- செம் கண் - சிவந்த கண்களை உடைய
- கருமுகிலே - காள மேகம் போன்ற கருத்த திருமேனி அழகனே! கண்ணனே!
- தாலேலோ! - கண்ணுறங்கு!
- தேவகி - தேவகியின் வயிற்றிற் பிறந்த
- சிங்கமே - சிங்கக் குட்டியே!
- தாலேலோ! - கண்ணுறங்கு!
விரிந்து பரந்த அழகான தேவலோகத்தில் உள்ள தேவர்கள், கண்ணனுக்கு சிறந்ததான வலம்புரிச் சங்கையும், உயர்ந்ததான திருவடிகளில் அணிய சதங்கைகளும், அழகான கைகளுக்கும், தோள்களுக்கும் அணிவதற்கு வளையல்களும், இடுப்பில் கட்ட பொன்னாலான நாணான் கயிறும், பதக்கத்தையும் அனுப்பி இருந்தார்கள். சிவந்த கண்களை உடையவனாயும், கருத்த மேகம் போல் காட்சி அளிப்பவனுமான கண்ணனே! கண்ணுறங்கு, தேவகியின் வயிற்றில் தோன்றிய சிங்கக் குட்டியே கண்ணுறங்கு.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment