||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
009 மூன்றெழுத்துச் சொன்னேனோ க்ஷத்ர பந்துவைப் போலே|
ஸ்ரீ விஷ்ணு தர்மத்தில் 97வது அத்தியாயத்தில் இந்த க்ஷத்ர பந்து கதை வருகிறது. க்ஷத்ர பந்து என்றால் க்ஷத்ரியர்களுக்குள் மிக தாழ்ந்தவன். பிராமண பந்து என்றால் பிராமணர்களுக்குள் மிக தாழ்ந்தவன். விஷ்வரதா என்னும் மன்னனுக்கு க்ஷத்ர பந்து என்னும் மகன் இருந்தான். பிறரைக் கேலி செய்வதும், மற்றவர்களுக்கு இடைஞ்சல் செய்வதுமே அவனது பிறவி குணமாய் இருந்து வந்தது. இளவரசன் வளர வளர, அவனது சேட்டைகளும் வளர்ந்து வந்தன. மகன் மீது கொண்ட அன்பால், மன்னன் இளவரசனை கண்டிக்காமல் விட, க்ஷத்ர பந்துவின் செயல்கள் அதிகமாயின. வழிபோக்கர்கள் அனைவரையும் அடித்து துன்புறுத்தி உயிரை போக்குவதே இவன் வேலை. அவன் தனது கொடுமையான செயல்களால் தாய், தந்தை, மக்கள், மித்திரர் அனைவராலும் கைவிடப் பட்டான். அவன் இங்கிருந்தால் சரியாய் வராது என்று எண்ணிய ஊர்காரர்கள், அவனை ஊரை விட்டு துரத்தினர். உயிருக்கு பயந்து காட்டிற்குள் ஓடிய க்ஷத்ர பந்து, அங்கு சென்றும் தன் சேட்டைகளை நிறுத்திக் கொள்ளவில்லை.
காட்டில் வசிக்கும் மக்களிடமும், காட்டினை கடக்கும் வழிப் போக்கர்களிடமும் தன் சேட்டைகளை தொடர்ந்தான். மேலும், அங்கு வரும் முனிவர்களுக்கு தொல்லைகள் கொடுத்தும், அவர்கள் நடத்தும் யாகத்தில் இடையூறுகள் செய்தும் கானகத்தில் கவலையின்றி அலைந்துத் திரிந்து கொண்டிருந்தான்.
ஒரு நாள் (என்னவோ எம்பெருமானின் சங்கல்பத்தாலே) ஒரு ரிஷி கடும் வெயிலில் வழி மறந்து அந்த காட்டு மார்கத்தில் வந்து விட்டார். மிகவும் வயசானவர், அவரை க்ஷத்ர பந்து பார்த்து விட்டான். அவர் பரிதாப நிலை கண்டு, அவர் மீது இரக்கம் மிகுந்ததால் க்ஷத்ர பந்து அவரிடம் "முனிவரே, நீங்கள் வழி தவறி வந்து விட்டீர்கள். களைப்புடன் வேறு இருக்கறீர்கள். அருகில் உள்ள குளத்தில் தண்ணீர் அருந்துங்கள். நீங்கள் போக வேண்டிய சரியான வழியும் இது தான்" என அவருக்கு வழியைக் காட்டி விட்டு, ஒரு குளத்தையும் காட்டினான். தாகம் தாங்காமல் ஒரு குளத்தில் தண்ணீர் எடுக்க போன முனிவர் குளத்தருகில் போன போது, கால்கள் வழுக்கி, குளத்தில் விழுந்து விட்டார். அதை பார்த்த க்ஷத்ர பந்து, குளத்தினுள் குதித்து காப்பாற்றியதுடன், அவரை எழுப்பி தூக்கி விட்டு அவருக்குக் கிழங்குகளை உண்ணக் குடுத்து, கை கால்களையும் பிடித்து விட்டு அசுவாச படுத்தினான்.
ஏன் இந்த வழியில் வந்தீர்? காட்டு மார்க்கம் உம்ம வழி இல்லையே என்று ரிஷியை பார்த்து க்ஷத்ர பந்து கேட்க, ரிஷி இவனை பார்த்து, "நீ யார் பிள்ளாய்? நீ ஏன் இங்கு ஒரு மாதிரி வடிவத்தோடு இருக்கிறாய்?" என்று கேட்கிறார். அதற்கு க்ஷத்ர பந்து பதில் சொல்கிறான். "ஐயா, நான் சூரிய வம்சத்தில் விஸ்வநாதன் என்பவருக்கு மகனாகத் தோன்றியவன். நான் ரொம்ப அபசாரம் பட்டிருக்கிறேன். தேவையில்லாத அனைத்து வேலைகளையும் பண்ணியிருக்கிறேன். இங்கிருந்து மீண்டு வருவதற்கு வழியும் தெரியவில்லை” என்று தான் செய்த கொடுமையான செயல்களையும் கூறினான். ரிஷிக்கு கொஞ்சம் கைங்கர்யம் பண்ணி அவரோடு சில நிமிடங்கள் பேசியதால் இவனுக்கும் கொஞ்சம் சாத்வீக குணம் வந்திருக்கு. அதனால் தானே இப்படி பேச முடியும்? நிச்சயமா தீயவர்கள் தாங்கள் பண்ணுவது தப்பு என்று ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள். இவன் மனதில் தவறு என்று பட்டிருக்கிறது என்றால் அது சாதுவான ரிஷியோடு சம்பந்தத்தினால் தான் மட்டுமே தான் இப்படி பேச முடியும்.
அதைக் கேட்ட முனிவரும், அவனை கொடுமையான செயல்களை விட்டொழிக்கச் சொன்னார். "ஐயா, காமம், குரோதம், லோபம், மோகம் என்ற தீய குணங்களுக்கு ஆளான நான் எப்படி அவற்றை விட்டொழிப்பேன்" என்றான் க்ஷத்ர பந்து. அவனை எப்படியும் திருத்திட வேண்டும் என முனிவர், "இடைவிடாது கோவிந்த நாமத்தைச் சொல்லிக் கொண்டிரு" என்றார். “அது என்ன, எப்படி” என்று கேட்டான் க்ஷத்ர பந்து. அதற்கு ரிஷி சொன்னார், "ஒரு மூணு எழுத்து சொல்கிறேன், நீ அதை திருப்பி சொல்கிறாயா?" என்று கேட்டார். "மூணே எழுத்தா? சொல்கிறேனே" என்றான் க்ஷத்ர பந்து. அவர் அர்த்தம் எதுவும் சொல்லாமல் வெறும் “கோவிந்த" என்று மட்டும் சொல்லி கொண்டே இரு. உனக்கு தானே நல்லது நடக்கும்" என்று ரிஷி சொல்லி கொடுத்து விட்டு புறப்பட்டு போனார். க்ஷத்ர பந்துவும் அதை திரும்ப திரும்ப கோவிந்த கோவிந்த கோவிந்த என்று சொல்லி கொண்டே இருந்தான். அதன் அருளால் அவன் ஒருநாள் இயற்கை எய்தி, மோக்ஷம் அடைந்தான். அனைவரையும் கொடுமை படுத்தி கொன்று தகாத செயல்களை செய்து கொண்டிருந்தவன், இந்த மூன்றெழுத்தை உச்சரித்துக் கொண்டே இருந்ததால் மோக்ஷத்தை பெற்றான். மீண்டும் நல்குடியில் பிறந்தான்.
திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, “இப்படி க்ஷத்ர பந்து சொன்ன மூன்றெழுத்து என் வாயில் ஒரு நாளும் வந்ததில்லையே! நான் எத்தனை அபசாரம் பண்ணி இருந்தாலும் கோவிந்த நாமத்தை சொல்லி கொண்டு இருந்தால் விலகி விடும் என்ற ஞானம் கூட எனக்கு இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment