About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 9 August 2023

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - பத்தாவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

010 முதலடியைப் பெற்றேனோ அஹலிகையைப் போலே|

முதலடி என்றால் ஜனகனின் மிதிலாபுரிக்கு நுழைவதற்கு முதல் அடி. பிரம்மனால் படைக்கப்பட்ட பேரழகி அகல்யா. கௌதம முனிவரின் தர்ம பத்தினி. 

தினமும் விடியற்காலை சேவல் கூவியதும், கௌதமர் நதியில் நீராட சென்று விடுவது வழக்கம். இதை அறிந்த இந்திரன், ஒருநாள், விடிவதற்கு முன் சேவல் போலக் கூவி விடிந்தாற் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினான். கௌதமரும், வழக்கம் போல நீராடச் சென்று விட்டார். அவர் இல்லாத அந்நேரத்தில் இந்திரன், கௌதமரின் உருவத்தில் குடிலுக்குள் சென்று அகல்யையைப் புணர்ந்தான். 


ஏதோ சந்தேகம் ஏற்பட கௌதமர் வீடு திரும்பினார். அங்கு இருவரையும் ஒன்றாகக் கண்டு கோபம் மேலிட அகல்யாவைக் கல்லாகப் போகுமாறு சபித்தார். இந்திரனுக்கும், அவன் எதை அடைய வேண்டும் என ஆசைப்பட்டானோ, அது ஆயிரமாக அவனது உடல் முழுதும் வரட்டும் என சபிக்கிறார். இருவரும், சாப விமோசனம் கேட்டு வேண்ட, இந்திரன் உடலில் அவை ஆயிரம் கண்களாக மாறட்டும் என விமோசனம் கொடுத்தார். அகலிகைக்கோ, "ராமர் இதன் வழியாக போகும் போது அவருடைய திருவடி பட்டு உன் சாபம் தீரும்" என்று விமோசனமும் சொல்கிறார். 


அவருடைய சாபத்தினால் அஹலிகை ஒரு கல்லாக கிடந்து இருக்கிறாள். மிதிலாபுரிக்குள் ராமரும் பின் லக்ஷ்மணரும் விஸ்வாமித்ரருடன் நுழைய போகிறார்கள். அதற்கு முன்னாலேயே கௌதம முனிவருடைய ஆசிரமம் இருக்கிறது. அதன் வழியாக தான் ராமர் மிதிலாபுரிக்கு செல்ல வேண்டும். அப்படி ராமர் அதன் வழியாக போய்க் கொண்டிருந்த போது, அங்கிருந்த கல்லின் மீது ராமருடைய திருவடி பட்டது. கல்லும் பெண்ணாக மாறிற்று. அஹலிகையின் சாபமும் தீர்ந்து விமோசனம் கிடைத்தது.


திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, “அஹலிகை மீது ராமரின் திருவடி பட்டது போல எனக்கு நடக்கவில்லையே! அஹலிகையை போலே ராமருடைய திருவடியை நான் பற்றவில்லையே! உலகத்துக்கே முதல்வனான சர்வேஸ்வரன் ஸ்ரீ எம்பெருமான். அவனுடைய திருவடி படும் பாக்கியத்தை நான் பெற்றேனோ? இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment