||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
035 இரு மன்னர் பெற்றேனோ வால்மீகியைப் போலே|
வால்மீகி முனிவர் இந்தியாவின் பழம்பெரும் இதிகாசங்களில் ஒன்றான, இராமாயணம் எனும் இதிகாசத்தை இயற்றியவர் ஆவார்.
இலங்கையில் இருந்து சீதையை மீட்டு, வனவாசம் முடிந்து அயோத்தி திரும்பிய ஸ்ரீ ராமர், அயோத்தி மன்னராக தரும நெறி வழுவாது பல ஆண்டுகள் ராஜ்ய பரிபாலனம் செய்து வந்தார். அயோத்தியே மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்தது. ஒரு நாள், நகர்வலம் வந்த காவலாளி, அங்கே ஒரு வீட்டில் உள்ளவர்கள் ராமரைப் பற்றி பேசுவதைக் கேட்டார். சலவை தொழில் செய்யும் குடும்பத் தலைவன் அங்கே சீதா தேவியைப் பற்றி தவறான விவாதம் நடந்து கொண்டிருப்பதை அறிந்து, ஸ்ரீ ராமரிடம் கூறினார். அந்த வார்த்தைகள் ராமனுடைய நெஞ்சில் முள் போல் குத்தியது. தர்மத்திற்கு எடுத்துக் காட்டாக வாழ்ந்து வந்த நாம் இப்படி ஒரு விஷயத்தை எண்ணிப் பார்க்கவில்லையே என்றெண்ணி, மக்களின் நலனுக்காகவும், தர்மத்திற்காகவும் கர்ப்பிணியான தன் சீதையைக் காட்டில் கொண்டு போய் விட்டு வர லட்சுமணரைப் பணித்தார்.
கங்கை ஆறு பாயும் பித்தூரில் வால்மீகி ஆசிரமம் அமைந்துள்ளது. அதன் அருகே சீதா தேவியை காட்டில் விட்டு விட்டு, லக்ஷ்மணர் அயோத்தி திரும்ப, தாங்க முடியாத துயரத்துடன் வந்த சீதா தேவிக்கு வால்மீகி அடைக்கலம் குடுத்தார். சீதா தேவிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர். அக்குழந்தைகளை கையில் வாங்கிக் கொண்டார் வால்மீகி. தன் தர்ப்பைப் புல்லின் மேல் பாகமான குசம் என்ற பெயரை ஒரு குழந்தைக்கும், கீழ் பாகமான இலவம் என்ற பெயரை ஒரு குழந்தைக்கும் பெயரிட்டார்.
அவர்கள் வால்மீகியின் ஆசிரமத்திலேயே வளர்ந்தனர். ராமாயணத்தை வால்மீகி முதல் முதலில் கற்றுக் கொடுத்தது லவ மற்றும் குசனுக்கு மட்டுமே! நற்பண்புடனும், நற்குணங்களுடனும், அறிவில் சிறந்தவர்களாகவும், ஆயுதங்களை கையாள்வதில் நன்கு தேர்ச்சி பெற்றவர்களாகவும் லவ குசனை வால்மீகி வளர்த்தார். ராமாயணத்தை அவர்களுக்குச் சொல்லி ஊரெல்லாம் அதை பாட வைத்தார்.
ஸ்ரீராமன் அசுவமேத யாகம் செய்தார். பரதன் ஒருநாள் இரு சிறுவர்களையும் அவரிடம் அழைத்து வந்தான். அவர்கள் பாடிய ராமாயணத்தை ஸ்ரீராமனேக் கேட்டார். இதற்குக் காரணமானவர் வால்மீகி.
திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, "ஸ்ரீராமனின் இரு குழந்தைகளை வளர்க்கும் பெரும் பேறினைப் பெற்றவர் வால்மீகி. அப்படிப்பட்ட பேறு எனக்குக் கிடைக்கவில்லையே!!” ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment