||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
கிருஷ்ணர் இந்திரப்பிரஸ்தம் வருதல்|
பாண்டவர்கள் தலைநகரான இந்திரப்பிரஸ்தம் செல்லக் கிருஷ்ணர் ஏற்பாடுகள் செய்தார், தாருகனைத் தமது இரதத்தைத் தயார் செய்யும்படிச் சொன்னார். ஒரு பெரிய கூட்டம் அவரோடு சென்றது. நீண்ட பிரயாணத்திற்க்குப் பிறகு, கிருஷ்ணர் இந்திரப்பிரஸ்தத்தின் எல்லையை அடைந்தார். கிருஷ்ணர் வந்துவிட்டார் என்ற செய்தி யுதிஷ்டிரரை எட்டியது.
உடனே அவர் தம் சகோதரர்களுடனும் ஆசாரியர்களுடனும், வேதப் பிராமணர்கள் உரக்க வேதம் ஓதினார்கள். கிருஷ்ணர் இரதத்திலிருந்து கீழே இறங்கினர். கண்களில் கண்ணீர் மல்க, யுதிஷ்டிரர் அவரைத் திரும்பத் திரும்ப அணைத்துக் கொண்டார்.
யுதிஷ்டிரரைக் கண்டு கிருஷ்ணரும் பெருமகிழ்ச்சியுற்றார். என்ன துன்பங்கள் வந்தாலும் தர்மத்தைக் கைவிடாத தம் அத்தை பிள்ளைகளிடம் அவருக்குத் தனி அன்பு இருந்தது. யுதிஷ்டிரரும் பீமனும் கிருஷ்ணருக்கு மூத்தவர்கள். ஆகவே, விதிப்படி, கிருஷ்ணர் இவர்கள் பாதங்களைத் தொட்டு வணங்கினார். தம் ஒத்த வயதினனான அர்ஜுனனை அவர் தழுவிக் கொண்டார். இளையவர்களான நகுலனும் சகாதேவனும் கிருஷ்ணனுடைய பாதங்களைத் தொட்டு வணங்கினர். கிருஷ்ணர் அவர்கைத் தூக்கி நிறுத்தி அன்பு மொழிகளைப் பேசினார்.
ஊரே விழாக்கோலம் பூண்டிருந்தது. தெருக்கள் அலங்கரிக்கப் பட்டு, வழியெல்லாம் பன்னீர் தெளிக்கப்பட்டிருந்தது. எல்லா இடங்களிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக நின்று கொண்டு கிருஷ்ணரைக் கோலாகலமாக வரவேற்றார்கள்; வணங்கினார்கள். கிருஷ்ணர் முதலில் குந்தியின் இருப்பிடத்திற்குச் சென்று அவளை நமஸ்கரித்தார். தாயன்புடன் குந்தி இருப்பிடத்திற்குச் சென்று அவரை அணைத்துக் கொண்டாள். கண்களில் கண்ணீர் வழிய, அவரை ஆசிர்வதித்தாள். யாரை யார் ஆசிர்வதிப்பது? வயதானவர்கள் இளையவர்களை ஆசிர்வதிக்க வேண்டும் என்ற ஒரு நியதியை ஒட்டித்தான் குந்தி கிருஷ்ணரை ஆசிர்வதித்தாள்.
கிருஷ்ணர் பிறகு திரௌபதியைப் பார்த்தார். அவள் இவரை வணங்கியதோடு, இவருடன் வந்திருந்த இவருடைய பத்தினிகளையும், குந்தியின் உத்தரவின் பேரில் தக்க முறையில் பூஜித்தாள். பிறகு கிருஷ்ணரும் அவருடைய பரிவாரங்களும் அரண்மனையில் அவர்கள் தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்திற்குச் சென்றார். அங்கே பல நாட்கள் கிருஷ்ணர் பாண்டவர்களுடன் இன்பமான நாட்களைக் கழித்தார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment