||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
திவ்ய ப்ரபந்தம் - 71 - ஏழ் உலகுக்கும் நாயகனே!
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - ஐந்தாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
உன்னையும் ஒக்கலையில் கொண்டு தமில் மருவி*
உன்னொடு தங்கள் கருத்தாயின செய்து வரும்*
கன்னியரும் மகிழ கண்டவர் கண் குளிர*
கற்றவர் தெற்றி வர பெற்ற எனக்கருளி*
மன்னு குறுங்குடியாய்! வெள்ளறையாய்!*
மதில் சூழ் சோலை மலைக்கரசே! கண்ணபுரத்தமுதே!*
என் அவலம் களைவாய்! ஆடுக செங்கீரை*
ஏழுலகும் உடையாய்! ஆடுக ஆடுகவே| (2)
- உன்னையும் - மகோ உதாரனான உன்னை
- ஒக்கலையில் - இடுப்பிலே
- கொண்டு - எடுத்துக் கொண்டு
- தம் இல் மருவி - தங்கள் வீடுகளில் கொண்டு போய்
- உன்னொடு தங்கள் - உன்னோடு தங்களுடைய
- கருத்து - நினைவுக்குத் தக்கபடி (அறிந்தபடி) களித்து
- ஆயின செய்து வரும் - பின் மறுடியும் கொண்டு வரும்
- கன்னியரும் - இளம் பெண்களும்
- மகிழ - இச் செங்கீரையைக் கண்டு ஸந்தோஷிக்கும் படியாகவும்
- கண்டவர் கண் - மற்றும் பார்த்தவர்களுடைய கண்கள்
- குளிர - குளிரும் படியாகவும்
- கற்றவர் - கவி சொல்லக் கற்றவர்கள்
- தெற்றிவர - பிள்ளைக் கவிகள் தொடுத்து வரும் படியாகவும்
- பெற்ற - உன்னை மகனாகப் பெற்ற
- எனக்கு அருளி - எனக்கு அன்பு கூர்ந்து
- மன்னு - பிரளய காலத்திலும் அழியாத
- குறுங்குடியாய்! - திருக்குறுங்குடியில் இருப்பவனே!
- வெள்ளறையாய்! - திருவெள்ளறையில் இருப்பவனே!
- மதிள் சூழ் - மதிள்களால் சூழப்பட்ட
- சோலை மலைக்கு - திருமாலிருஞ்சோலை மலைக்கு
- அரசே! - அதிபதி ஆனவனே!
- கண்ணபுரத்து - திருக்கண்ணபுரத்திலே நிற்கிற
- அமுதே! - அம்ருதம் போன்றவனே!
- என் அவலம் - என் துன்பத்தை
- களைவாய்! - நீக்குபவனே!
- ஆடுக செங்கீரை - செங்கீரை ஆடி அருள வேணும்
- ஏழ் உலகும் - ஸப்த லோகங்களுக்கும்
- உடையாய் - ஸ்வாமியானவனே!
- ஆடுக ஆடுகவே - ஆடிக் காட்டுவாயாக
அழியாதிருக்கும் திருக்குறுங்குடியில் எழுந்தருளியும், திருவெள்ளறையில் வர்த்தித்தும், மதிளால் சூழப்பட்ட திருமாலிருஞ்சோலைக்கு அதிபதியாகவும், திருக்கண்ண புரத்தில் அமுதாக நின்றும் இருப்பவனே, என் துன்பத்தை போக்குகிறவனே, உன்னை இளம்பெண்கள் தங்கள் இடுப்பில் வைத்துக் கொண்டு வீடு வீடாகச் சென்று கொஞ்சுவதால், அவர்களுக்குப் பிடித்தாற் போலும், சாமான்யர்கள் கண்குளிரவும், கவிகளைப் பாட வைக்கும் படியும், எனக்கு கிருபை பண்ணி என் பிள்ளையாகிய நீ செங்கீரை ஆடவேண்டும். ஏழு உலகங்களுக்கும் நாயகனே, நீ ஆட வேண்டும்!
||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment