||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
விராட் புருஷன்
ஸ்கந்தம் 02
“ஹே பரீக்ஷித், மனத்தில் திடம் கொண்டு, அனைத்தையும் துறந்து வெளிக் கிளம்பி, ப்ரும்மச்சர்ய விரதத்தை மேற்கொள்ள வேண்டும். புண்ய நதிகளில் நீராடி, தனியிடம் சென்று ப்ராணாயாமத்தினால் மூச்சை அடக்கி, ப்ரணவ ஜபம் செய்ய வேண்டும்.
ஐம்புலன்களையும் அடக்கி, மனத்தை பகவானின் மேனி அழகில் செலுத்த வேண்டும். பகவானையே இடையறாது தியானிக்க வேண்டும். பகவானின் ஒவ்வொரு அங்கமாகத் தியானித்து வேறு விஷயங்களில் மனம் திரும்பாதவாறு பகவானிடம் மனத்தை ஒருமைப் படுத்த வேண்டும். மனம் ஓய்வடையும் இடமே பகவானின் இருப்பிடம். இவ்வாறு தியானம் செய்யும் போது ரஜோ குணத்தாலும், தமோ குணத்தாலும் ஏற்படும் மன மயக்கங்களை தைரியமாக யோக தாரணை அதாவது மீண்டும் மீண்டும் பகவானின் ஸ்வரூபத்தில் மனத்தை செலுத்தி ஜெயிக்க வேண்டும்.”
பரிக்ஷித் கேட்டான், “எவ்வாறு தியானம் செய்தால் மன மாசுகள் அழியும்?”
“புலன்களை அடக்கி, பகவானின் உருவத்தில் மனத்தை நிறுத்த வேண்டும். முக்காலங்களில் நிகழும் அனைத்துமே பகவானின் திருவுருவத்தில் அடங்கும்” என்று சொல்லி வைராஜன் என்னும் விராட் ஸ்வரூபத்தை வர்ணிக்கிறார் ஸ்ரீ சுகர்.
ப்ரபஞ்சத்தைத் தோற்றுவித்த விராட் புருஷரான பகவானுக்கு பாதாள லோகமே உள்ளங் கால்கள். ரஸா தலம் பாதங்கள், மஹா தலம் கணுக் கால்கள், தலாதலம் முன்னங் கால்கள், சுதலம் முழங்கால்கள், அதலமும், விதலமும் இரண்டு தொடைகள், பூதலம் இடுப்பு, ஆகாயமே தொப்புள், நக்ஷத்ர லோகமே திருமார்பு, மஹர் லோகமே கழுத்து, ஜனோ லோகமே திருமுகம், தபோ லோகமே நெற்றி, இவரது ஆயிரக் கணக்கான தலைகளே ஸத்ய லோகம், இந்த்ராதி தேவர்களே கைகள், திசைகளே காதுகள், ஒலியே கேட்கும் திறன், அஸ்வினி தேவர்களே சுவாச த்வாரங்கள், மணமே முகரும் சக்தி, ஒளிரும் அக்னி வாய், அந்தரிக்ஷ உலகமே கண்கள், சூரியன் பார்க்கும் திறன், இரவு பகல் இரண்டும் கண் இமைகள், ப்ரும்ம லோகம் புருவங்கள், நீர் இரு கன்னங்கள், சுவை உணர்வே நாக்கு, வேதங்களே ப்ரும் மரந்திரம் (உச்சந் தலை), யம தர்ம ராஜனே தெற்றிப் பற்கள், மற்ற பற்றுக்களே பற்கள், மாயையே புன்னகை, கடைக்கண் பார்வையே ஸ்ருஷ்டி, நதிகளே நாடிகள், மரங்கள் ரோமங்கள், வாயு மூச்சுக் காற்று, நடையே கால கதி, ஸத்வ ரஜஸ் தமஸ் ஆகிய முக்குணங்களே லீலைகள், மேகங்களே கேசங்கள், ஸந்தியா காலமே ஆடை, மூல ப்ரக்ருதியே ஹ்ருதயம், சந்திரனே மனம், அனைத்துமாக விளங்கும் பகவானுக்கு மஹத் தத்வமே அறிவுத் திறன்.
இவ்வாறு ஏராளமான விவரங்களை விளக்கமாகச் சொல்லி, இவரை தியானித்து தாரணை செய்தல் வேண்டும். இவரே அனைத்தும். இவரைத் தவிர வேறொன்றும் இல்லை. எனவே, எதைக் கண்டாலும் அதை பகவானின் அங்கம் என்றே பார்ப்பது சுலபமான ஸ்தூல உருவ தியானம். இவ்வாறு ப்ரும்ம தேவர் பகவானை தியானம் செய்து பகவானை மகிழ்வித்து, படைக்கும் திறனான அறிவைப் பெற்று முன்பு இருந்தது போலவே, ஒவ்வொரு ப்ரளயத்திற்குப் பின்னும் உலகைப் படைக்கிறார்.” என்றார் ஸ்ரீ சுகர்.
பார்க்கும் பொருள்களில் எல்லாம் பகவானை நினைவு படுத்திக் கொள்வதற்கு வைராஜ புருஷனின் தியானம் மிகவும் உதவி செய்யும்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment