||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
நம்பிக்கையூட்டும் ஸத்குருவின் வாக்கு
ஸ்கந்தம் 02
ஸ்ரீ சுகாசார்யார் பரீக்ஷித் கேட்ட கேள்வியினால் மிகவும் மகிழ்ந்து சொல்லலானார்.
"அரசனே! உன் கேள்வி மிகவும் சிறப்பானது. அனைவர்க்கும் நன்மை பயப்பது. ஞானிகள் கொண்டாடும் கேள்வி. அனைவரும் அறிய வேண்டிய சிறந்த விஷயங்களைக் கேட்டிருக்கிறாய்.
மனிதர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளம். அவர்களது அருமையான ஆயுள், இரவில் இன்புறுவதிலும், உறங்குவதிலும் வீணாகிறது. பகலில் பொருள் ஈட்டுதலிலும், குடும்பத்தைக் காப்பாற்றுவதிலும், கேளிக்கைகளிலும் வீணாகிறது.
மனிதன் இவ்வுடல், உறவுகள் எல்லாம் பொய்யென்று அறிந்தே இருக்கிறான். எவ்வளவு மரணங்களைக் கண் முன் கண்டாலும், அது தனக்கும் வரும் என்று சிந்திப்பதில்லை.
முக்தியை விரும்புபவன், அனைத்திலும் ஆன்மாவாக விளங்கும் பகவானான ஸ்ரீ க்ருஷ்ணனது திருவிளையாடல்களை செவியாரப் பருகி, வாயாரப் பாடி, மனதார நினைத்தல் வேண்டும்.
ஞானத்தினாலோ, பக்தியினாலோ, யோகத்தினாலோ, தர்மங்களைக் கடைப் பிடிப்பதாலோ வேறு சாதனைகளாலோ என்ன பயன் எனில், அது அவனுக்கு மரண காலத்தில் பகவானது நினைவைத் தர வெண்டும்.
ஏராளமான விதிகளையும், விரதங்களையும், அநுஷ்டானங்களையும் கடைப்பிடிக்கும் முனிவர்களும் கூட, பகவானின் கதைகளையும், கல்யாண குணங்களையும் கேட்பதில் மிக்க ஈடுபாடு கொள்கிறார்கள். எனில், மாந்தர்களுக்கு வேறு கதி என்ன இருக்கிறது?
நான் உனக்குச் சொல்லப் போகும் பாகவத புராணத்தை மஹாபாரத யுத்த முடிவில் நான் என் தந்தையான வியாஸரிடம் கற்றேன். நிர்குண ப்ரும்மத்தில் ஈடுபட்ட மனத்தை உடையவனாகினும் என்னை கண்ணனின் கதைகள் மிகவும் ஈர்த்தன.
நீ ஏற்கனவே க்ருஷ்ணனிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ளாய். இதைக் கேட்பதால் உனக்கு பகவானின் திருவடித் தாமரைகளில் நிஷ்காம்யமான (எதையும் எதிர்நோக்காத) பக்தி ஏற்படும்.
தனக்கு நன்மையைத் தேடிக் கொள்வதில் சோம்பேறித்தனம் கொள்பவனின் நீண்ட ஆயுள் விரைவில் கழியும். ஆனால், பொறுமையுடன் தன் ஆன்ம நலம் பற்றிச் சிந்திப்பவனின் சில மணித்துளிகளும் மிகவும் மேலானவை.
இக்ஷ்வாகு வம்சத்தில் கட்வாங்கன் என்று ஒரு அரசன் இருந்தார். அவர் மிகுந்த பராக்ரமத்துடன் விளங்கினார். தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி அசுரர்களோடு போர் புரிந்து தேவர்களுக்கு வெற்றிக் கனியைக் கொடுத்தார். அதனால் மகிழ்ச்சி அடைந்த தேவர்கள், "முனிவரே, வேண்டிய வரம் கேளுங்கள்" என்றனர்.
கீழே பூலோகத்தைப் பார்த்தார். தேவலோகத்திற்கும் பூமிக்கும் காலக் கணக்கு வேறென்பதால், பூமியில் பல்லாயிரம் வருடங்கள் ஓடி விட்டன. அவரது மனைவி மக்களோ சுற்றத்தாரோ யாரும் இல்லை. அவரது பரம்பரையில் வேறு ஒருவர் அரச பீடத்தில் இருந்தார்.
எனவே தன் அரண்மனைக்குச் செல்ல விரும்பவில்லை. "முக்தி வேண்டும்" என்று கேட்டார்.
தேவர்கள் திகைத்தனர்.
"முக்தி கொடுக்கும் அதிகாரம் எங்களுக்கு இல்லை. நாங்களும் முக்திக்கு ஆசைப்படுபவர்களே. ஸ்ரீமன் நாராயணன் ஒருவரே முக்தி வழங்கும் தெய்வம். வேறு வரம் கேளுங்கள்" என்றான் தேவேந்திரன்.
கட்வாங்கர் சற்று யோசித்து, "எனில், எனக்கு இன்னும் எவ்வளவு ஆயுள் மீதி இருக்கிறது என்று சொல்ல முடியுமா?"
"அது முடியும் முனிவரே. தங்களுக்கு இன்னும் ஒரு முஹூர்த்த காலமே ஆயுள் உள்ளது" என்று சொன்னான்.
கட்வாங்கர் உடனேயே பத்மாசனத்தில் அமர்ந்து மனத்தை ஒரு நிலைப் படுத்தி, பற்றுக்கள் அனைத்தையும் துறந்து ஸ்ரீமன் நாராயணனின் திருவடியில் மனத்தை நிறுத்தினார். அக்கணமே சரீரத்தைத் துறந்து முக்தி யடைந்தார்.
பரீக்ஷித்தே, உனக்கு ஏழு நாள்கள் அவகாசம் இருக்கிறது. அதுவரை நிச்சயம் காலன் வரப்போவது இல்லை. எனவே, நீ தாராளமாக உனக்கான நன்மையை அடைந்து விட முடியும்" என்று அவனை உற்சாகப்படுத்தும் விதமாகச் சொன்னார்.
ஏழு நாள்களை மிகக் குறைவு என்று எண்ணி இருந்த பரீக்ஷித்திற்கு (நமக்கும்) குருவின் நம்பிக்கை ஊட்டும் பேச்சு பெரு மகிழ்ச்சியைத் தந்தது.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment