||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
திவ்ய ப்ரபந்தம் - 70 - நப்பின்னை நாதனே!
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - ஐந்தாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
துப்புடை ஆயர்கள் தம் சொல் வழுவாதொரு கால்*
தூய கருங்குழல் நற் தோகை மயிலனைய*
நப்பினை தன் திறமா நல் விடை ஏழவிய*
நல்ல திறலுடைய நாதனும் ஆனவனே!*
தப்பின பிள்ளைகளைத் தன மிகு சோதி புகத்*
தனியொரு தேர் கடவித் தாயொடு கூட்டிய*
என் அப்ப! எனக்கொரு கால் ஆடுக செங்கீரை*
ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே|
- துப்பு உடை - நெஞ்சில் கடினத் தன்மை உடையரான
- ஆயர்கள் தம் - இடையர்களுடைய
- சொல் - வார்த்தையை
- வழுவாது - தப்பாமல்
- ஒரு கால் - ஒரு காலத்திலே
- தூய - அழகியதாய்
- கரு - கருமை நிற
- குழல் - கூந்தலை உடையவளான
- நல் தோகை - நல்ல தோகையை உடைய
- மயில் அனைய - மயில் போன்ற சாயலை உடையவளான
- நப்பின்னை தன் திறமா - நப்பின்னைப் பிராட்டிக்காக
- நல் - கொடிய
- விடைஏழ் - ஏழு முரட்டுக் காளைகளை
- அவிய - அழியும் படி செய்த
- நல்ல திறல் உடைய - நன்றான மிடுக்கை (திறமை) உடையனாய்
- நாதன் ஆனவனே - இடையர்களின் ஸ்வாமியானவனே!
- தப்பின - பிறந்தவுடன் இறந்து போன
- பிள்ளைகளை - வைதிகரின் நான்கு பிள்ளைகளையும்
- தன் - தன்னுடைய
- மிகு சோதி - தேஜோ ரூபமான பரம பதத்திலே
- புக - செல்வதற்காக
- தனி - தனியே
- ஒரு - ஒப்பற்ற
- தேர் - தேரை
- கடலி - நடத்தி
- தாயொடு கூட்டிய - உயிருடன் தாயிடம் சேர்ப்பித்த
- என் அப்ப - என் அப்பனே!
- எனக்கு - எனக்காக
- ஒருகால் - ஒரு முறை
- செங்கீரை ஆடுக - செங்கீரை ஆடியருள வேணும்
- ஆயர்கள் - இடையர்களுக்காக
- போர் ஏறே - போர் செய்ய, ரிஷபம் போலே நின்ற கண்ணனே!
- ஆடுக ஆடுகவே - ஆடிக் காட்டுவாயாக
கடும் நெஞ்சை உடைய இடையர்களின் வார்த்தைக்கு இணங்க மென்மையான திருமேனி உடையவனும், பராகிரமசாலியானவனும், ஆயர்களின் தலைவனுமான, கண்ணன் ஒரு சமயம் ஏழு முரட்டுக் காளைகளை அடக்கி, கருத்த கூந்தல் உடையவளும், மயில் தோகையைப் போன்றவளுமான நப்பின்னை பிராட்டியை மணந்து கொண்டான். பின்னர், ஒரு பிராமணனின் நாலு இறந்த பிள்ளைகளையும், தனியே ஒரு தேரில் பரமபதம் போய், அங்கிருந்து அவர்களை மீட்டு அவர்கள் தாயுடன் சேர்த்தான். ஆயர்களின் காளையே , பசுக்களின் ரக்ஷகனே, ஒரு செங்கீரை ஆடிவிடு என்கிறாள் யசோதை!
||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment