||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
நாரதரின் வருகை|
வந்தவர் பேசிக் கொண்டிருக்கும் போதே நாரதர் அங்கே வந்து சேர்ந்தார். கையில் தம்புராவுடன் அவர் நாராயணனைப் பற்றி பாடிக்கொண்டே வந்தார். கிருஷ்ணர் அவரைத் தகுந்த மரியாதையுடன் வரவேற்றார்.
பிறகு அவரைப் பார்த்து, 'மூன்று உலகங்களும் நலமாக இருக்கின்றன என்று நம்புகிறேன். மூன்று உலகங்களிலும் சஞ்சரிக்கும் தங்களால் எங்களுக்கு நன்மையே ஏற்பட்டுள்ளது. ஏனெனில் இந்த மூன்று உலகங்களைப் பற்றிய செய்திகளைத் தங்களிடமிருந்து எங்களால் தெரிந்துக் கொள்ள முடிகிறது. உங்களுக்குத் தெரியாதது ஒன்றும் இந்த மூன்று உலகங்களிலும் கிடையாது" என்று சொன்னார்.
நாரதர் சொன்னார், "கிருஷ்ணா! நீங்கள் சாதாரண மனிதனைப் போலத் தோற்றமளித்தாலும், நீங்கள் யார் என்பதை நான் அறிவேன். உலகில் நடப்பது ஒன்றும் தங்களுக்குத் தெரியாதது போலப் பேசுகிறேர்களே! அது எனக்குச் சிரிப்பைத் தான் உண்டாக்கிறது. இந்த உலகில் மட்டுமல்ல, மூன்று உலகங்களிலும் என்ன நடக்கிறது என்பது தங்களுக்குத் தெரியும். இருந்தும் தாங்கள் கேட்டதனால் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல விரும்புகிறேன்.
"குந்தியின் மகன் யுதிஷ்டிரர் ராஜசூயயாகம் செய்ய விரும்புகிறார். யாகத்திற்குப் பிறகு ஒரு சிறந்த புருஷரை ஆராதனை செய்ய வேண்டும். அதற்குத் தங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். இதற்குத் தாங்கள் சம்மதம் தெரிவிக்க வேண்டும்" என்று வேண்டினார். நாரதரின் வார்த்தைகளைக் கேட்ட கிருஷ்ணர் தாம் ஒரு தர்மசங்கடத்தில் மாட்டிக்கொண்டிருப்பதை உணர்ந்தார்.
இரண்டு காரியங்கள் அவரை முன்னோக்கி இருந்தன. சுற்றிலும் பார்த்தபோது ஜராசந்தனோடு சண்டையிட்டு, அந்த அரசர்களை விடுதலை செய்ய, யாதவர்கள் துடித்துக் கொண்டிருந்தார்கள் என்று பட்டது. ஆனால், யுதிஷ்டிரர் தமது ராஜசூய யாகத்திற்காக விடுத்த அழைப்பை ஏற்று, அங்கே செல்ல வேண்டும் என்று கிருஷ்ணர் நினைத்தார்.
உடனே அவர் தம் விசாலமான கண்களால் தம் நண்பர் உத்தவரைப் பார்த்தார். "அன்புள்ள நண்பரே! தாங்கள் தாம் புத்தியில் சிறந்தவர்; எது சரி என்று வழி சொல்லக்கூடியவர். ஆகவே தாங்கள் என்ன செய்யச் சொல்லுகிறீர்களோ, அதன்படி நடப்பேன்" என்று சொன்னார்.
கிருஷ்ணரால் ஒரு கஷ்டமான காரியம் கொடுக்கப்பட்ட உத்தவர் அடக்கத்துடன் எழுந்து நின்று, "கிருஷ்ணா! எனக்கு இந்த இரண்டு காரியங்களும் முக்கியம் வாய்ந்தவை, இரண்டும் உடனே கவனிக்கப்பட வேண்டியவை என்று தோன்றுகிறது. தங்களுடைய அத்தை மகனான யுதிஷ்டிரர் தமது ராஜசூய யாகத்தில் தாங்கள் இருக்கவேண்டும்மென்று விரும்புகிறார். ஆனால் சிறைப்பட்ட அரசர்களை நினைத்தாலோ, ஒவ்வொரு நாளும் அவர்களுக்குச் சித்திரவதையாக இருப்பதுடன் தாங்கள் தாம் அவைகளைக் காப்பாற்ற முடியும். உலகிலுள்ள எல்லா அரசர்களுக்கும் சவால் விடுத்து, அவர்களை வென்ற அரசன்தான் ராஜசூய யாகம் நடத்த முடியும். அதனால் யுதிஷ்டிரர் ஜராசந்தனுக்கும் சவால் விடுத்து, அவனையும் தோற்கடிக்க வேண்டும்.
அதனால் நீங்கள் யுதிஷ்டிரரிடம் சென்று, ஜராசந்தனுக்குச் சவால் விடுக்கும் படி அவரைக் கேட்டுக் கொள்ளுங்கள். இதனால் இரண்டு காரியங்களும் ஒரே சமயத்தில் செய்து முடிக்க முடியும். ஜராசந்தன் பத்தாயிரம் யானை பலம் உள்ளவன் என்று கேள்வியுற்றிருக்கிறேன். அதனால் அவனைக் கொள்வது எளிதல்ல. அதனால் யாராவது அவனோடு மல்யுத்தம் செய்து தான் அவனைக் கொல்ல வேண்டும். இதைச் செய்யக் கூடியவன், யுதிஷ்டிரரின் தம்பியான பீமன் ஒருவன்தான். தன்னோடு மல்யுத்தம் செய்யும் படி பீமன் ஜராசந்தனுக்குச் சவால் விடுத்தால், ஜராசந்தன் க்ஷத்ரியனானதால் மறுக்க மாட்டான். பீமன் நிச்சயமாக அவனைக் கொன்று விடுவான்" என்று சொன்னார்.
உத்தவர் சொன்ன சரியான ஆலோசனையை நாரதர் உட்பட எல்லோரும் ஆமோதித்தார்கள். உடனே கிருஷ்ணர் கிரி விரஜத்திலிருந்து வந்த தூதரைப் பார்த்து, "அவர்கள் எல்லோரும் சீக்கிரமே விடுவிக்கப்படுவார்கள் என்று சிறைப்பட்ட அரசர்களிடம் சொல்லுங்கள்" என்று சொல்லியனுப்பினார்.
அவரும் கிரிவிரஜம் திரும்பி இந்த நல்ல செய்தியை அரசர்களுக்குச் சொன்னார். நாரதரும், தம் வந்த காரியம் முடிந்தது என்று சந்தோஷப்பட்டுக் கொண்டே, நாராயணனைத் துதித்துக் கொண்டே திரும்பினார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment