About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 27 December 2023

108 திவ்ய தேசங்கள் - 019 - திருநாகை 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

019. திருநாகை (நாகப்பட்டினம்)
பத்தொண்பதாவது திவ்ய க்ஷேத்ரம்

ஸ்ரீ ஸௌந்தர்ய ராஜப் பெருமாள் திருக்கோயில்

ஸ்ரீ ஸௌந்தர்யவல்லி தாயார் ஸமேத ஸ்ரீ ஸௌந்தர்ய ராஜன் பெருமாள் 
திருவடிகளே சரணம்||

  • பெருமாள் மூலவர்: ஸௌந்தர்ய ராஜன்
  • பெருமாள் உற்சவர்: நீலமேகம்
  • தாயார் மூலவர்: ஸௌந்தர்ய வல்லி
  • தாயார் உற்சவர்: கஜலட்சுமி
  • திருமுக மண்டலம் திசை: கிழக்கு 
  • திருக்கோலம்: நின்ற 
  • புஷ்கரிணி/தீர்த்தம்: ஸார
  • விமானம்: ஸௌந்தர்ய
  • ஸ்தல விருக்ஷம்: மாமரம்
  • ப்ரத்யக்ஷம்: நாகராஜன், கலியன், ப்ரம்ஹாதிகள்
  • ஆகமம்: பாஞ்சராத்ரம்
  • ஸம்ப்ரதாயம்: தென் கலை
  • மங்களாஸாஸநம்: 1 ஆழ்வார்
  • பாசுரங்கள்: 10

--------------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி


ஸ்தல புராணம்

தசாவதாரங்களை விளக்கக்கூடிய செம்பு தகட்டாலான மாலை பெருமாளின் இடையை அலங்கரிப்பதை பார்க்க புண்ணியம் செய்திருக்க வேண்டும். ஆதிசேஷனால் உண்டாக்கப்பட்ட சார புஷ்கரிணியில் நீராடி பெருமாளை வழிபட்டால் அவர்கள் சூரிய மண்டலத்தை அடைவார்கள் என்பது ஐதீகம். இங்குள்ள அஷ்டபுஜ துர்க்கையும் சக்தி வாய்ந்தவள். திருமங்கை ஆழ்வார் இத்தல பெருமாளின் அழகில் மயங்கிய நிலையில் ஒண்பது பாசுரங்களை பாடி விட்டு பத்தாவது பாடலில் தான் இத்தலத்தின் பெயரை குறிப்பிடுகிறார். கண்டன், சுகண்டன் என்ற இரு அந்தண சகோதரர்கள் நிறைய கொடும் செயல் புரிந்து வந்தார்கள். ஒரு நாள் இவர்கள் சார புஷ்கரிணியில் நீராடினார்கள். உடனே அவர்கள் பாவம் நீங்கி வைகுண்டம் சென்றார்கள்.  இவர்களது சிற்பங்களை பெருமாள் சன்னதியில் வைத்துள்ளார்கள்.

உத்தான பாத மகாராஜனின் குமாரன் துருவன். சிறுவனான இவன் நாரதர் மூலம் இத்தலத்தின் பெருமையை அறிந்தான். உலகம் முழுவதும் தனக்கே அடிமையாக வேண்டும் என்று பெருமாளை குறித்து தவம் செய்தான். இவனது தவத்தை கலைக்க தேவர்கள் இடைஞ்சல் செய்தனர். இருப்பினும் தவத்தை வெற்றிகரமாக முடித்த துருவன் முன்பு பெருமாள் கருடன் மீது அமர்ந்து பேரழகு பொருந்தியவராக தரிசனம் தந்தார். பெருமாளின் பேரழகில் மயங்கிய துருவன் தான் கேட்க வந்த வரத்தை மறந்தான். இறைவனது பேரழகே போதும். இதில் தான் உண்மையான சுகம் இருக்கிறது. அந்த பேரழகை எப்போதும் தரிசிக்கும் பாக்கியத்தை தர வேண்டும் என பெருமாளிடம் கேட்டான். பெருமாளும் தனது ஸௌந்தர்யமான திருக்கோலத்தை துருவனுக்கு காட்டி அவன் தவமிருந்த தலத்திலேயே தங்கினார். அழகான இவர் "ஸௌந்தர்ய ராஜப் பெருமாள்' என்று அழைக்கப்படுகிறார். 

நரசிம்மர் இங்கு எட்டு கரத்துடன் அஷ்டபுஜ நரசிம்மராக அருள்பாலிக்கிறார். ஒரு கை பிரகலாதனை ஆசிர்வதிப்பது போலவும், ஒரு கை அபய முத்திரையையும் காட்டுகிறது. மற்ற கைகள் இரண்யனை வதம் செய்கின்றன. பிள்ளைப் பெருமாள் ஐயங்கார், திருக்குருகைப் பெருமான் கவிராயர், முத்துச்சாமி தீட்சிதர் ஆகியோரின் பாடல்கள் இப்பெருமாளின் பேரழகைப் பாடுகின்றன. நாகங்களுக்கெல்லாம் தலைவனான ஆதிசேஷன் இத்தலத்தில் ஒரு தீர்த்தம் உண்டாக்கி அதற்கு "சார புஷ்கரணி' என்று பெயரிட்டு அதன் கரையில் அமர்ந்து பெருமாள் குறித்து தவமிருந்தார். பெருமாளும் மகிழ்ந்து தனது படுக்கையாக ஏற்றுக்கொள்வதாக இத்தலத்தில் அருள்புரிந்தார். நாகம் (ஆதிசேஷன்) பெருமாளை ஆராதித்ததால் அவரது பெயராலேயே இவ்வூர் நாகப்பட்டினம் ஆனது.  

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்  

No comments:

Post a Comment