About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Tuesday, 26 September 2023

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - ஐம்பதாவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

050 இனியது என்று வைத்தேனோ சபரியைப் போலே|

சபரி ஒரு வேடுவ குலப் பெண். (வேடர்களில் தேன், அரக்கு போன்ற பொருட்களைச் சேகரித்து விற்கும் பிரிவினரைச் சபரர் என்பர்). அவள் காட்டில் மிருகங்களை அடித்துச் சாப்பிடுபவள். ஒரு நாள் அவளுக்கு நல்ல பசி, யாராவது வர மாட்டார்களா அடித்துச் சாப்பிடலாம் என்று காத்துக் கொண்டு இருக்கும் போது மதங்க முனிவரின் சிஷ்யர்கள் குளித்து விட்டு வேதம் ஓதிக் கொண்டு சபரி இருக்கும் இடத்தை நோக்கி வந்தார்கள். அவர்கள் ஓதிய வேத ஒலியில் மயங்கி உருகினாள் சபரி. அவளுக்குள் ஒரு பரவசம் ஏற்பட்டது.


தினமும் அந்த இடத்தில் உட்கார்ந்து சிஷ்ய குழந்தைகள் வரும் காட்சியை மறைவாகக் கண்டு களிப்பது அவளுக்கு ஆனந்தம். இந்தக் குழந்தைகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது.

குழந்தைகள் போகும் பாதையில் உள்ள முள், கற்களை எல்லாம் சுத்தம் செய்து, தண்ணீர் தெளித்து அழகிய பூக்களால் கோலம் போட்டு வைத்தாள். இதைத் தினமும் கவனித்த குழந்தைகள் தங்களின் குரு மதங்க முனிவரிடம் ஓடிச் சென்று “குருவே! தினமும் யாரோ நாங்கள் நடக்கும் வழியைச் சுத்தம் செய்து வைக்கிறார்கள்” என்றார்கள். மதங்க முனிவர் “யார் என்று கண்டு பிடித்து அழைத்துக் கொண்டு வாருங்கள்” என்கிறார்.


குழந்தைகள் அன்று சீக்கிரமே சென்று ஒரு மரத்துக்குப் பின் ஒளிந்து கொண்டு பார்த்தார்கள். அங்கே சபரி சுத்தம் செய்து, தண்ணீர் தெளித்தாள். குழந்தைகள் ”எங்கள் குரு உங்களைக் கூப்பிடுகிறார்” என்று சபரியை அழைத்துக் கொண்டு போனார்கள். சபரி மதங்க முனிவரைப் பார்த்தவுடன் அவரின் காலில் விழுந்து வணங்குகிறாள்.

முனிவர் அவளுக்கு ஆசி வழங்கி “இந்த ஆசிரமத்திலேயே தங்கி இங்கே ஏதாவது வேலை செய்து கொண்டு இரு” என்கிறார். அவளும் ஆசிரமத்தைச் சுத்தம் செய்வது. தோட்டம் அமைத்துப் பூச்செடி வளர்ப்பது. முனிவர்களுக்கும், அவருடைய சீடர்களுக்கும் பழங்களைப் பறித்துக் கொடுப்பது என்ற சிறு சிறு வேலைகளைச் செய்து அங்கேயே தங்கினாள். முனிவர்களும், சீடர்களும் சாப்பிட்ட பிறகு மீதம் இருப்பதைத் தான் சாப்பிடுவாள். நாட்கள் செல்ல செல்ல, சபரியைத் தமது முதன்மை சிஷ்யையாக அங்கீகரித்தார் மதங்கர். இப்படியே பல காலம் கழிந்தது.

மதங்க முனிவருக்கு வயதாகி கடைசிக் காலம் நெருங்கச் சிஷ்யர்களிடம் “நான் மோட்ச கதியை அடையப் போகிறேன். உங்களுக்கு என்ன தேவையோ கேளுங்கள்” என்றார். சிஷ்ய குழந்தைகள் அவர்களுக்கு என்ன என்ன மந்திரங்கள் தேவையோ அதை உபதேசமாகப் பெற்றுக் கொண்டார்கள். இதை எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த சபரியிடம் “இங்கே வா” என்று அன்புடன் அழைத்தார் முனிவர்.


சபரி பணிவுடன் முனிவர் அருகில் சென்றாள். மதங்கர் இல்லா உலகம் தனக்கும் வேண்டாம். எனவே தன்னையும் அழைத்து செல்லுமாறு சபரி வேண்டினார். முனிவர் சபரியிடம்” ‘ராம’ என்று சொல்லு” என்றார். சபரியும் ‘ராம’ என்று சொல்லி விட்டு ’ராம’ என்பதற்கு என்ன பொருள்?” என்று கேட்டாள். முனிவர் ‘ராம’ என்ற சொல்லையே தினமும் தியானம் செய்து கொண்டு இரு, இதன் அர்த்தமே உன்னைத் தேடி வரும். அப்படி உன்னைத் தேடி வரும் போது நீ அவருக்கு எல்லா பணிவிடைகளையும் செய்ய வேண்டும் என்று சொல்லி விட்டு முனிவர் மோட்சம் அடைந்தார்.

வருடங்கள் பல சென்றன. எந்த எதிர்பார்ப்பும் இன்றி, குருவின் வார்த்தைக்கு மதிப்பளித்து, அவரது வாக்கில் பூரண நம்பிக்கை வைத்து காலம் செல்வதைப் பற்றி துளியும் சிந்திக்காமல், தினமும் காலை எழுந்து குளித்து விட்டு, தன் குருவைத் தியானித்து விட்டு, குருவின் சீடர்களுக்குப் பணிவிடை செய்து விட்டு, குரு உபதேசித்த ‘ராம’ மந்திரத்தை வாழ்நாள் முழுவதும் ஓதிக் கொண்டிருந்தார். சபரி தனது குருநாதரின் கட்டளைப்படி தவவாழ்க்கை மேற்கொண்டு ஸ்ரீ இராமனின் வரவை எதிர்ப்பார்த்து காத்திருந்தார். 

ஒவ்வொரு நாளும் ராமனின் வருகையை எதிர்பார்த்திருந்த முதியவரான சபரி, அனுதினமும் காலை, தனது கைத்தடியுடன் ஆஷ்ரமம் நீங்கி, காட்டினுள்ளே சென்று, ராமர் வந்தால் அவரை உபசரிக்க எந்த மரத்தின் பழம் இனிக்கிறது சோதித்து பார்த்து என்று அதை எல்லாம் பறித்து வருவார். அவற்றைக் கடித்துச் சுவைத்துப் பார்ப்பார். இனிய சுவையுடைய கனிகளை மட்டும் ராமனுக்கு என்று தனியே எடுத்து வெய்யில் காய வைத்து வைப்பார். தனது கூடை நிரம்பியவுடன், ஆஷ்ரமம் சேர்ந்து, ஸ்ரீ இராமனின் வருகைக்காக வாசலில் அமர்ந்து விடுவார்.  

ஒரு நாள் ஆசிரமத்துக் குழந்தைகள் ‘பாட்டி பாட்டி யாரோ இரண்டு பேர் வில்லும் கையுமாக வருகிறார்கள்” என்று சொல்லச் சபரி விரைந்து சென்று பார்த்த போது அங்கே ராமரும், லக்ஷ்மணரும் வில்லுடன் காட்சி கொடுத்தார்கள்.

குரு சொன்னது நினைவுக்கு வந்தது. உடனே அவர்களை வரவேற்று, கைகளைக் கூப்பி வணங்கி, கீழே விழுந்து ராமரின் திருவடிகளை இருக்கையாலும் இறுகப் பற்றிக் கொண்டாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர் பெருகி ஓடியது.

”ராமா! நான் தவம் செய்த வார்த்தையை இப்போது நேராகப் பார்க்கிறேன். பல்லாண்டுகளாக மேற்கொண்டிருந்த தவத்தின் பயன் என்னை வந்தடைந்தது. ராமரின் திருவடிகளில் தண்ணீரால் அலம்பி விட்டாள். அலம்பி ஓடும் திருவடி பட்ட தண்ணீரை தன் தலையிலும் உடலிலும் எடுத்துப் பூசுக் கொண்டாள். அதைப் பருகினாள். நறுமணமுள்ள மலர்களால் அர்ச்சித்தாள்.

“ராமா என் குருவிற்குக் கூடக் கிடைக்காத உன் தரிசனம் எனக்குக் கிடைத்தது. நானோ ஒரு பெண், நல்லறிவு இல்லாதவள், தாழ்ந்த ஜாதியில் பிறந்தவள், நீயோ முனிவர்களாலும் அறிய முடியாதவள். உன் அடியார் அடியார் என்றபடி நூறாவது தொண்டனுக்குக் கூடக் கைங்கரியம் செய்யும் உரிமை எனக்கு இல்லை!” என்று ஆனந்தக் கண்ணீர் விட்டாள்.

ராமர் சபரியை அன்புடன் பார்த்து “சபரி என்னை ஒருவன் அடைவதற்கு ஆண்மையோ பெண்மையோ, உயர் ஜாதிப் பிறப்போ, பெயரோ, பிரம்மச்சரியம், இல்லறம், வானப்ஸ்தம், சன்னியாசி என்று எதுவும் கிடையாது. என்னிடம் உண்மையான பற்றும் பக்தியும் தேவை. அந்தப் பக்தி ஏற்படுவதற்குக் காரணம் நல்ல குருவின் சம்பந்தம் முக்கிய காரணம் என்று சொல்லிவிட்டு “சபரி! குருவிற்குச் செய்ய வேண்டிய கைங்கரியத்தை ஒழுங்காகச் செய்கிறாயா?“ என்று ராமர் விசாரித்தார்.

உடனே சபரி “ராமா! என் குரு நீ வந்தால் உபசரிக்கச் சொன்னார். இதோ நான் உனக்காக அன்புடன் சேமித்து வைத்த பழங்களை நீ ஏற்க வேண்டும்” என்று கை நிறையப் பழங்களை எடுத்து ராமருக்கு நீட்டினாள்.

சபரியால் கடித்துச் சுவைத்துப் பார்த்து, தனக்கென்று வைத்திருந்த இனிய கனிகளை ராமர் உண்டு மகிழ்ந்தார். லக்ஷ்மணனுக்கும் கொடுத்தார். இதைத் தவிர சபரிக்கு வேறு என்ன வேண்டும். அவளுக்கு அதுவே இனியதானது. சபரி உன் கையால் கொடுத்த பழங்கள் இனிய சுவையாக இருக்கிறது என்றார். அதற்குச் சபரி ”இதற்குக் காரணம் நான் இல்லை. என் குரு தான்! அவர் அருளால் உன் திருவடி அருளைப் பெற்றேன். அவர் அருளால் நான் செய்த தவம் சித்தியடைந்தது. அவர் அருளால் பிறவிப் பயன் பெற்றேன். அவர் அருளால் மோட்சமும் எனக்குக் கிடைக்கப் போகிறது. நான் கைங்கரியம் செய்த குரு நீ இங்கே வரும் சமயம் உங்களை வரவேற்று உபசரித்து வழியனுப்பி விட்டு என்னையும் மோட்சம் பெறுவாயாக என்று கட்டளையிட்டார். அதனால் நீ வருவதற்குக் காத்துக் கொண்டு இருந்தேன்” என்று சொல்லிவிட்டு.

சபரி ஆர்வமாக ”ராமா என்னுடன் வா உனக்கு என் குரு மதங்க முனிவரின் ஆசிரமத்தைச் சுற்றிக் காட்டுகிறேன்” என்றாள். ராமர் சபரியின் பின் சென்றார். சபரி “இங்கே தான் குரு தினமும் பகவத் தியானம் செய்வார், இதோ இந்த இடத்தில் தான் காயத்திரி மந்திரத்தை ஜபிப்பார், இங்கே யாக ஹோமங்களைச் செய்வார். அங்கே மரத்துக்குப் பக்கம் தான் அவர் நீராடிய இடம், இது அவரின் மரவுரிகள்” என்று எதையும் விட்டு வைக்காமல் ராமரிடம் காண்பித்து தன் குருவின் மேன்மையைக் கூறினாள் சபரி. இதை எல்லாம் கேட்ட ராமர் உள்ளன்போடு ”நீ விருப்பபட்டதை பெறுவாயாக” என்று சொன்னார். சபரி ராமரை வணங்கினாள். தீ வளர்த்து அதில் இறங்கி தன் குருவின் திருவடியை அடைந்தாள்.

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, "சபரியைப் போல் இனிய பழங்களை மட்டுமே பெருமாளுக்கு ஈந்தேனோ? இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment