About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Tuesday, 26 September 2023

திவ்ய ப்ரபந்தம் - 37 - பெரியாழ்வார் திருமொழி - 1.2.15

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

திவ்ய ப்ரபந்தம் - 37 - முகத்தின் அழகு
பெரியாழ்வார் திருமொழி 
முதலாம் பத்து - இரண்டாம் திருமொழி - பதிநைந்தாம் பாசுரம்

நோக்கி யசோதை* 
நுணுக்கிய மஞ்சளால்* 
நாக்கு வழித்து* 
நீராட்டும் இந் நம்பிக்கு*
வாக்கும் நயனமும்* 
வாயும் முறுவலும்* 
மூக்கும் இருந்தவா காணீரே* 
மொய் குழலீர்! வந்து காணீரே|

  • நோக்கி - திருமேனியின் மென்மைக்குத் தக்கப்படி பார்த்து ஆராய்ந்து
  • அசோதை - யசோதைப் பிராட்டி
  • நுணுக்கிய - அரைத்த
  • மஞ்சளால் - பசு மஞ்சள் விழுதால்
  • நாக்கு வழித்து - நாக்கு வழித்து விட்டு பிறகு
  • நீராட்டும் - ஸ்நாநம் செய்விக்கப் பெறுகின்ற 
  • இந்நம்பிக்கு - இக்கண்ணபிரானின்
  • வாக்கும் - திருவாக்கும் 
  • நயனமும் - திருக்கண்களும் 
  • வாயும் - வாயும்
  • முறுவலும் - புன்சிரிப்பும் 
  • மூக்கும் - மூக்கும்
  • இருந்தவா காணீரே - இருக்கும் அழகை வந்து பாருங்கள்!
  • மொய் குழலீர் – அடர்த்தியான கூந்தலை உடைய பெண்களே! 
  • வந்து காணீரே வந்து பாருங்கள்! 

யசோதை அன்னை, நல்ல மஞ்சள் எதுவென்று திருமேனியின் மென்மைக்குத் தக்கப்படி தேடி தேடிப் பார்த்து, அதை, சிறுகுழந்தையான கண்ணனின் சிறுநாவினை வழிப்பதற்கு ஏற்ற அளவுடையதாய் சிறியதாய் நுணுக்கி, இலகுவாய் வழித்து, பதமாய் பையவாட்டிய நீரால் குளிப்பாட்டும் இந்த தலைவனுக்கு, தத்தித் தத்திப் பேசும் மழலை மொழியும், கருணை மழைப் பொழியும் கார்முகில் வண்ணனின் திவ்யமான செங்காந்தள் கண்களும், வசீகரப் புன்சிரிப்புடன் கூடின பவளவாயும், நவமணியும் மின்னுகின்ற எட்பூ நாசியும், இப்படி ஒவ்வொன்றும் மாயக் கண்ணன், கார்முகில் வண்ணன் முகத்தில் அழகாய், அமைப்புடன் இருக்கின்ற முறையை வந்து பாருங்கள். இருளைப் போன்று கரிய, மிகவும் அடர்த்தியான கூந்தலைக் கொண்ட பெண்களே, வந்து சர்வ இலட்சணங்களும் அமைந்திருக்கும், இந்த கருணா மூர்த்தி வசீகரனின் முக அழகை வந்து பாருங்கள் என்று அழைக்கிறாள் யசோதை.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment