About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Monday, 18 March 2024

ஸ்ரீமத் பாகவத புராணம் - 69

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

விதுர மைத்ரேய ஸம்வாதம் - 14

ஸ்கந்தம் 03

சுழலும் தாமரை

காதலியின் தொடர்புடைய சிறு பொருளைக் கண்டாலும் காதலர் மனம் துள்ளுவது போல், பகவானின் தொடர்புடைய சிறு பொருளைக் கண்டாலும் பக்தர் மனம் எழும்பிக் குதிக்கும். வைகுந்த வாசலை அடைந்து விட்ட ஸனகாதியரின் மன நிலையை எப்படிச் சொல்வது? அங்கிருக்கும் எந்த அற்புதப் பொருளின் மீதும் அவர்களது கவனம் செல்லவில்லை. ஓட்டமும் நடையுமாக, ஆனந்தக் கண்ணீரோடு, ஒருவரையொருவர் பிடித்துக் கொண்டு ஆறு வாயில்களைக் கடந்து விட்டனர். ஏழாவது வாயில் அருகே வந்தாயிற்று. 


ரத்தினங்கள் பதித்த தகதகக்கும் தங்க வாயில். ஆச்சு! இதோ இன்னும் இரண்டு நிமிடத்தில். இந்த வாசலைத் தாண்டினதும் பகவத் தரிசனம். ஆஹா! நினைக்கும் போதே மேனி சிலிர்த்தது. ஒரே ஓட்டம், தாண்டப் போனால், சட்டென்று குறுக்கே தங்கப் பிரம்புகள். ஒன்றும் புரியவில்லை. மீண்டும் போக முயற்சித்தால் மறுபடி தடுக்கப்பட்டனர். ஐந்து வயது பாலகர் உருவத்தில் இருப்பவர்கள், திகம்பரர்கள், பரம பக்தர்கள், ஆர்வத்தினால், எதையும் கவனியாதவர்கள், எங்கும் எதிலும் ஒரே விஷயத்தையே காண்பவர்கள், தங்கு தடையின்றி எல்லா இடங்களுக்கும் செல்பவர்கள், தாங்கள் தடுக்கப் படுகிறோம் என்றதும் சட்டென்று சினம் வந்து விட்டது. யாரென்று நிமிர்ந்து பார்த்தால், நெடி துயர்ந்த பெரிய உருவங்கள், பகவானை ஒத்த திருமேனி, விலை உயர்ந்த ஆபரணங்கள், குண்டலங்கள், கிரீடங்கள், கையில் கதை. நீலமேனியர்கள், நான்கு திருக்கரங்கள், கழுத்தில் தவழும் வனமாலை. கண்கள் சிவந்து, சற்றே சினந்து காணப்பட்டனர். ஸனகாதியர் அவ்வாறு தடுக்கப்பட வேண்டியவர்கள் அல்லர். பகவத் தரிசனத்திற்கு வந்த இடையூறு கண்டு ஒரே ஒரு கணம் சினந்ததில், வார்த்தைகள் சீற்றமாய் வந்து விழுந்தன.

பகவானிடம் பயன் கருதாது பக்தி செய்பவர்க்கே வைகுந்த வாசம்‌ கிட்டும். அவர்களிடம் தீய குணங்களே இராது.  அப்படி இருக்க உங்களுக்கு இறைவனைச் சந்திக்க வருபவரைத் தடுக்கும் புத்தி எவ்வாறு ஏற்பட்டது? நீங்கள் உண்மையான பகவத் பக்தர்களாக இருப்பின் எங்கள் மீது சந்தேகம் வந்து தடுத்திருக்க மாட்டீர். பகவானைச் சேர்ந்தவர்கள் அனைவரிடமும் அவனையே காண்கின்றனர். நீங்கள் எங்களை வேறாகப் பார்ப்பதாலேயே தடுத்தீர். பார்ஷதர்களாயினும் உண்மைப் பொருளை உணராது நிற்கிறீர். வேற்றுமை எண்ணம் இருப்பதால், வைகுந்தத்தை விடுத்து காம, க்ரோத, லோப மோஹம் நிறைந்த அசுரப் பிறவிகளாகக் கடவீர்கள். இது உங்களுக்கு நன்மையே பயக்கும். இது வரை எந்த அஸ்திர, சஸ்திரத்தாலும் தடுக்க முடியாத அந்த பகவத் பார்ஷதர்கள் சாபத்தைக் கேட்டு நடுநடுங்கிப் போனார்கள். சட்டென்று அவர்களது பாதங்களில் வீழ்ந்தனர்.

ஐயன்மீர்! எங்கள் தவற்றுக்கு ஏற்ற தண்டனை தான் இது. பகவானின் கருத்தை அறியாது தடுத்து விட்டோம். எங்கள் பாவங்கள் தாங்கள் தந்த தண்டனையால் தீரட்டும். எங்கள் மீது சற்றே பரிதாபம் கொண்டு, ஒரே ஒரு க்ருபை செய்யுங்கள். நாங்கள் எந்த லோகத்தில் எவ்வளவு கீழ்த்தரமான பிறவி உற்றாலும், இறைவனின் நினைவு எங்களை விட்டு அகலாமல் இருக்க வேண்டும்.

இவ்வளவையும் அறிந்த கபட நாடக ஸூத்ரதாரியான பகவான் திருமகளுடன் அங்கு வந்தார்.

அவர் வரும் முன்னரே திருவடிக் கமலங்களில் திருமகள் அர்ச்சனை செய்த துளஸியின் கந்தம் முன்னறிவிப்பு செய்ய, புளகாங்கிதம்‌ அடைந்து மூர்ச்சை அடைந்தனர் முனிவர்கள். பின்னர் மூர்ச்சை தெளிந்து, இது வரை இதயத் தாமரையில் கண்டு கொண்டிருந்த பகவான் இப்போது ஸனகாதியரின் கண்களுக்கு விருந்தாக எதிரே. 

பார்ஷதர்கள் வெண் கொற்றக் குடை பிடிக்க, ராஜ ஹம்ஸத்தின் இறக்கைகள் போல இருமருங்கும் சாமரங்கள் வீச, வெண் கொற்றக் குடையின் முத்துக்கள், சந்திரனிலிருந்து அமுதம் சொட்டுவது போல் காற்றில் இங்குமங்கும் அசைய. 

என்னே ஒரு காட்சி!!

நீலத்திருமேனி, மார்பில் தங்க ரேகையாய் ஒளிரும் திருமகள், அழகிய உருண்ட இடுப்பில் பீதாம்பரம், அரையில் கனக மேகலை, வண்டுகள்‌ சூழ்ந்து பாடும் வனமாலை, திருக்கைகளில் கங்கணங்கள், மின்னொளியை விஞ்சும் மகர குண்டலங்கள், அதை விஞ்சும் பளபளக்கும் கன்னங்கள், எடுப்பான அழகிய நாசி, கண்ணைப் பறிக்கும் அழகிய திருமுக மண்டலம், அழகிய முத்து மாலைகள், மார்பில் கௌஸ்துப மணி, அவரது ஒளியால் வைகுந்தம் மேலும் அழகுபெறுகிறது. ஒரு கையை கருடனின் தோளில் ஊன்றிக் கொண்டு, மறு கையால் தாமரை மலரைச் சுழற்றிக் கொண்டு வருகிறார். போதுமென்றே தோன்றாமல் பார்க்கத் தூண்டும் திருமேனியழகு. சட்டென்று தலை தாழ்த்தி வணங்கினார்கள் ஸனகாதியர்.

அதென்ன? தாமரைப் பூவைச் சுழற்றுவது?

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment