||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
திவ்ய ப்ரபந்தம் - 103 - சுக்கிரன் கண்ணைத் துரும்பால் கிளறியவன்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - எட்டாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
மிக்க பெரும் புகழ்* மாவலி வேள் வியிற்*
தக்கது இது அன்று என்று* தானம் விலக்கிய*
சுக்கிரன் கண்ணைத்* துரும்பாற் கிளறிய*
சக்கரக் கையனே! அச்சோ அச்சோ*
சங்கம் இடத்தானே! அச்சோ அச்சோ!
- மிக்க பெரும் புகழ் - ஔதார்யத்தால் மிகுந்த கீர்த்தியை உடைய
- மா வலி - மஹா பலி செய்த
- வேள்வியில் - யாகத்திலே வாமநனாய்ச் சென்ற உனக்கு அந்த மஹாபலி நீ கேட்டதைக் கொடுக்க முயன்ற அளவிலே
- இது - நீ கொடுக்கிற தானம்
- தக்கது அன்று - தகுதியானதன்று
- என்று - என்று முறையிட்டு
- தானம் - பூமி தானத்தை அவன் தத்தம் பண்ணும் போது நீர் விழ வொட்டாமல்
- விலக்கிய - விலக்க முயன்ற
- சுக்கிரன் - பூச்சி வடிவு கொண்ட சுக்கிராச்சாரியனுடைய
- கண்ணை - ஒரு கண்ணை
- துரும்பால் - உன் கையிலணிந்திருந்த தர்ப்ப பவித்ரத்தின் நுனியால்
- கிளறிய - கலக்கின
- சக்கரம் கையனே - சக்ராயுதம் ஏந்திய கையை உடையவனே!
- அச்சோ அச்சோ - என்னை அணைத்துக் கொள்ள வேண்டும்!
- சங்கம் - பாஞ்ச சன்னியம் எனும் சங்கை
- இடத்தானே - இடக்கையில் ஏந்தினவனே!
- அச்சோ அச்சோ - என்னை அணைத்துக் கொள்ள மாட்டானோ!
பெரும் புகழ் வாய்ந்த மஹாபலி சக்கிரவர்த்தி செய்த யாகத்தில் அன்று வாமனனாய் நீ சென்று மூவடி மண் கேட்க, அவனும் தானமாகக் கொடுக்க முன்வந்து ஜலத்தை தாரை வார்க்கும் சமயம், அவனுடைய ஆசார்யன் சுக்கிரன் இந்த தானம் தகுந்ததல்ல எனக் கருதி ஜல பாத்திரத்தின் துவாரத்தில் சூட்சுமமாய் நுழைந்து அதை அடைத்துவிட, நீயோ கையில் அணிந்திருந்த தர்ப்பையால், அடைப்பை எடுப்பது போல், சுக்கிரனுடைய கண்ணை குத்திக் கெடுத்தாய். சக்கராயுதத்தை வலக்கையில் ஏந்தியவனே! என்னை அணைத்துக் கொள்ள ஓடி வர வேண்டும். இடக்கையில் பாஞ்சஜன்யத்தை ஏந்தியவனே! அணைத்துக் கொள்ள வர வேண்டும்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment