||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
விதுர மைத்ரேய ஸம்வாதம் - 11
ஸ்கந்தம் 03
வராக அவதாரம் - 1
எவ்வளவு விஷயங்களைப் படைத்திருந்தபோதும், ஜீவன்களின் படைப்பு, பெருகவே இல்லை. மிகுந்த ஆயாசத்துடன் ப்ரும்மா தன் உடலை விட்டார். அவரது சரீரம் நான்கு திக்குகளாலும் ஆகர்ஷிக்கப்பட்டு புகை மூட்டமாயிற்று. புதிய சரீரம் கொண்ட அவர், தன் செய்கையில் பிழைகள் உள்ளதா என்று ஆராய்ந்தார். ஒன்றும் புரியாமல் பகவானை சிந்தனை செய்யத் துவங்கினார். அப்போது அவரிடமிருந்து ஆண், பெண் என்று இரண்டு உடல்கள் ஏற்பட்டன. 'க' எனில் ப்ரும்ம தேவர். அதிலிருந்து உண்டானது காயம். அவ்வாறு பிரிந்ததில் ஆண் உருவம் ஸ்வயம்புவ மனு என்று பெயர் பெற்று முதல் மனுவாயிற்று. பெண் பகுதி சதரூபா என்ற பெயரில் ஸ்வாயம்புவ மனுவின் ராணியானார்.
அது முதல் ஆண், பெண் உடலுறவால் ப்ரஜைகள் தோன்றலாயினர். சக்ரவர்த்தியான ஸ்வாயம்புவமனுவிற்கும், சதரூபைக்கும் ஐந்து குழந்தைகள் பிறந்தனர். அவர்கள் ப்ரியவ்ரதன், உத்தானபாதன் என்ற இரு ஆண் குழந்தைகளும், ஆகூதி, தேவஹூதி, ப்ரஸூதி ஆகிய மூன்று பெண் குழந்தைகளும் ஆவார்கள்.
ஸ்வாயம்புவ மனு ஆகூதியை ருசி என்பவருக்கும், தேவஹூதியை கர்தமருக்கும், ப்ரஸூதியை தக்ஷனுக்கும் திருமணம் செய்துகொடுத்தார். அவர்களது சந்ததியால் இவ்வுலகம் நிறைந்தது.
விதுரர் கேட்டார். "ரிஷியே, பகவானின் சரண கமலங்களைத் தனது இதயத் தாமரையில் வைத்து வழிபடும் அடியார்களின் குணங்களைக் கேட்பதே கற்ற கல்வியின் பயன் என்று சான்றோர்கள் கூறுகின்றனர். எனவே, அந்த ஸ்வாயம்புவ மனுவின் சரித்திரத்தைக் கூறுங்கள்" என்றார்.
இவ்வார்த்தைகளால் மைத்ரேயர் மகிழ்ச்சியால் மேனிசிலிர்த்தார். பின்னர் கூறத் துவங்கினார்.
ஸ்வாயம்புவ மனு சதரூபையுடன் வந்து ப்ரும்மாவிடம் கூறினார். பகவானே, நீங்களே படைப்பு அத்தனைக்கும் காரணம். நாங்கள் தங்களுக்குச் செய்ய வேண்டிய சேவை என்ன என்று கூறியருளுங்கள் என்றார்.
ப்ரும்மா, பெற்றோரின் கட்டளையை விநயத்துடனும் ஈடுபாட்டுடனும் தன் திறமைக்கேற்பச் செய்வதே தனயனின் முதற் கடைமை. நீ சத ரூபையுடன் இல்லறம் நடத்தி குழந்தைகளைத் தோற்றுவித்து, அறநெறி வழுவாமல் இவ்வுலகைக் காத்து வா. பரம புருஷனை வேள்விகளால் ஆராதனம் செய். என்றார்.
மனு மீண்டும் கேட்டார். "தாங்கள் கூறியபடி செய்து பகவானை மகிழ்விக்கிறேன். ஆனால், நானும் என் மக்களும் வசிக்க ஒரு இடம் காட்டுங்கள். அனைத்து ஜீவராசிகளுக்கும் இருப்பிடமான பூமி ப்ரளய நீரில் மூழ்கி விட்டது. அதை மேலே கொண்டு வர முயற்சி செய்ய வேண்டும்" என்றார். ப்ரும்மா பூமியை எவ்வாறு மேலே கொண்டு வருவது என்று யோசனையில் ஆழ்ந்தார்.
வழி எதுவும் புலப்படாததால் எந்த பகவானின் ஹ்ருதயத்தில் இருந்து நான் படைக்கப்பட்டேனோ, எவர் இவ்வுலகைப் படைக்கச் சொல்லி என்னை நியமித்திருக்கிறாரோ அந்த பகவானே இதற்கும் வழி காட்டட்டும் என்று நினைத்து, , பகவானை மனத்தால் துதித்தார்.
அப்போது, மிகவும் ஆச்சரியமாக, ப்ரும்மாவின் மூக்குத் துவாரத்திலிருந்து கட்டை விரல் அளவுள்ள ஒரு வெண்மை நிற வராகம் வெளி வந்தது. அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஆகாயத்தில் ஒரு யோஜனை தூரத்திற்கு வளர்ந்தது.
மரீசி முதலிய அந்தணர்கள், ஸனகாதி முனிவர்கள், மனு, ப்ரும்மா அனைவரும் பெருகிய வராக உருவத்தைக் கண்டு யாராயிருக்கும் என்று தீவிரமாகச் சிந்தித்தனர். இந்த ப்ராணி யார்? எதற்காக வந்தது? என்றெல்லாம் யோசித்தனர்.
ப்ரும்மாவின் முகத்திலிருந்தே வேதங்கள் தோன்றின. அவ்ரது முகத்திலிருந்து தோன்றிய வராகமும் வேத ஸ்வரூபமான இறைவனே.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment