||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
திவ்ய ப்ரபந்தம் - 100 - கூனியின் கூனை நிமிர்த்தியவன்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - எட்டாம் திருமொழி - நான்காம் பாசுரம்
நாறிய சாந்தம்* நமக்கு இறை நல்கு என்னத்*
தேறி அவளும்* திருவுடம்பில் பூச*
ஊறிய கூனினை* உள்ளே ஒடுங்க*
அன்று ஏற உருவினாய்! அச்சோ அச்சோ*
எம்பெருமான்! வாராய் அச்சோ அச்சோ!
- நாறிய - நல்ல வாசனை வீசுகின்ற
- சாந்தம் - சந்தனத்தை
- நமக்கு - எங்களுக்கு
- இறை - கொஞ்சம்
- நல்கு என்ன - கொடு என்று நீ கூனியைக் கேட்க
- அவளும் - அந்தக் கூனியும் இவர்கட்குக் கொடுத்தால் நம்மைக் கம்ஸன் தண்டிப்பனோ?’ என்று அஞ்சாமல்
- தேறி - மனம் தெளிந்து
- திரு உடம்பில் - உனது திருமேனியிலே
- பூச - சாத்த
- ஊறிய - பல ஆண்டுகளாய் இருந்த
- கூனினை - அவளுடைய கூனை
- உள்ளே - அவள் சரீரத்திற்குள்ளே
- ஒடுங்க - அடங்கும்படி
- அன்று - அக் காலத்திலே
- ஏற - நிமிர்த்து
- உருவினாய் - கைகளால் உருவினவனே!
- அச்சோ! அச்சோ! — என்னை அணைத்துக் கொள்ள வேண்டும்
- எம்பெருமான்! வந்து - எங்கள் குலத்துக்கு ஸ்வாமியான எம்பெருமானே! வந்து
- அச்சோ! அச்சோ! — என்னை அணைத்துக் கொள்ள மாட்டானோ!
ஒரு சமயம் பலராமனுடன் நீ சென்று கொண்டிருக்க, கூனியை சந்திக்க நேரிடுகையில், நறு மணம் வீசும் சந்தனத்தை அவள் கம்சனுக்காக எடுத்துச் செல்வதைப் பார்த்து, எங்களுக்கு கொஞ்சம் கொடு என்று அவளை நீ கேட்க, அவளும் கம்சனக்கு அஞ்சாமல், அந்த நல்ல சந்தனத்தை எடுத்து உன் திருமேனியில் பூச, உடனே அவளிடம் கருணையுள்ளம் கொண்டவனாய் அவளது கூனை, அவளுள்ளே அடங்குமாறு செய்து, நிமிர்த்திட்டாய். எம்பெருமானே! என்னை அணைத்துக் கொள்ள வர வேண்டும். அணைத்துக் கொள்ள வர வேண்டும்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment