||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
விதுர மைத்ரேய ஸம்வாதம் - 1
ஸ்கந்தம் 03
பரீக்ஷித் கேட்டார், ‘அந்தணரது சாபத்தால் போஜ மற்றும் வ்ருஷ்ணி குலத்தின் சிறந்த வீரர்கள், சேனைத் தலைவர்கள், மஹாரதர்கள் அனைவரும் இறந்து விட்டனர். க்ருஷ்ணனே உடலை மறைத்துக் கொண்டார். அப்படியிருக்க, அவர்களில் ஒருவரான உத்தவர் மட்டும் எவ்வாறு மீதமானார்? அவருக்கு எதுவும் ஆகவில்லையா?”
ஸ்ரீ சுகர் பதிலுரைத்தார். ‘பகவான் க்ருஷ்ணன் அந்தணரது சாபம் என்ற சாக்கில் தன் குலத்தையே அழித்து, தானும் இவ்வுலகை விடுத்துக் கிளம்பும் போது, என்னைப் பற்றிய ஆத்ம ஞானத்தைப் பெற தகுதியானவன் உத்தவர் ஒருவரே. அவர் எனக்கு நிகரானவர். தன்னைத் தானே வெற்றி கொண்டவர். புலனடக்கம் உள்ளவர். ஆகவே, என்னைப் பற்றிய தத்துவ ஞானத்தை உலகோர்க்கு அளித்துக் கொண்டு இங்கேயே இருக்கட்டும்.” என்று நினைத்தார். எனவே உத்தவரை பதரிகாஸ்ரமம் சென்று தன்னை ஆராதித்து வரும்படி கட்டளையிட்டார். விதுரர் உத்தவர் கூறியபடி மைத்ரேயரைத் தேடி ஹர்த்துவாரத்தை அடைந்தார்.
விண்ணுலகிலிருந்து விழும் கங்கை மண்ணுலகைத் தொடும் இடம் ஹரித்துவாரம் ஆகும். க்ருஷ்ண பக்தியால் மனத் தூய்மை பெற்ற விதுரர், மைத்ரேயரின் நற்குண சீலங்களால் ஈர்க்கப்பட்டு அவரிடம் தன் ஐயங்களைக் கேட்டார்.
“1. உலகில் அனைத்து மக்களும் சுகம் வேண்டி பற்ப்பல காரியங்களைச் செய்கின்றனரே. அதனால் இன்பம் அடைகிறார்களா? அல்லது மேலும் பல துன்பங்கள் வருகின்றனவா? உண்மையில் எது செய்தால் நலம்?
2. எந்த நல்வழிச் சென்றால் இறைவன் மகிழ்ந்து பக்தனின் தூய்மையான உளத்தில் அமர்வான்? அமைதி நல்கும் நல்வழி எது?
3. பகவான் ஸ்வதந்த்ர புருஷர். மூவுலகங்களையும் அடக்கி ஆள்பவர். அவர் என்னென்ன அவதாரம் செய்து என்னென்ன திருவிளையாடல்கள் புரிந்தார்?
4. எவ்வாறு செயலற்ற யோக மாயையால் உலகங்கள் அனைத்தையும் தன்னுள் அடக்கிக் கொள்கிறார்?
5. பகவான் ஒருவராக இருந்தும் ப்ரும்மாண்டத்தின் அனைத்து உயிர்களிலும் அந்தர்யாமியாக ஊடுருவிப் பல்வேறு உருவங்களாகக் காட்சியளிக்கிறாரே. அதெப்படி?
6. பகவான் எந்தெந்த தத்துவங்களை ஏற்று இவ்வுலகங்களையும், அதன் தலைவர்களையும், படைத்தார்?
7. ஒவ்வொரு ஜீவனுக்கும் இயற்கையாகவே இயல்பு, செயல், மேனி ஆகியவை வருமாறு படைக்கிறாரே. அதெப்படி?
அனைத்து நெறி முறைகளையும் தங்களின் உற்ற நண்பரான வியாசர் சொல்லிப் பலமுறை கேட்டுள்ளேன். கண்ணனின் கதையமுதம் எவ்வளவு கேட்டாலும் திகட்டுவதில்லை. நீங்கள் தேனீயைப் போல் அனைத்துக் கதைகளிலிருந்தும் ஸாரமான தேன் போன்ற க்ருஷ்ண கதைகளைச் சேகரித்துள்ளீர்கள். எனக்கு அவைகளைச் சொல்லுங்கள்” என்றார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment