About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 25 January 2024

லீலை கண்ணன் கதைகள் - 89

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

சால்வனுடன் சண்டை|

சிசுபாலனுடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவன் சால்வன் என்ற அரசன். ருக்மிணியைச் சிசுபாலனுக்குக் கொடுப்பது என்று ஏற்பாடாகி ருந்த போது, அவனுடன் விதர்ப்ப நாடு சென்றவர்களில் இவனும் ஒருவன். கிருஷ்ணர் ருக்மிணியை எடுத்துச் சென்றதும், சால்வன் எல்லா அரசர்களின் முன்னால், "நான் தக்க தருணத்தில் யாது வம்சத்தையே பூண்டோடு அழிப்பேன்" என்று சபதம் செய்தான்.


இப்படிச் சப்தம் செய்தவன், நேராக இமயமலைச் சாரலுக்குச் சென்று, ஒரு வருட காலம் கொடிய தவம் புரிந்தான். அவன் தவத்தைக் கண்டு மெச்சிய சிவபெருமான் அவன்முன் தோன்றி, அவனுக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். 

அதற்குச் சால்வன், "தேவர்களாலும் அசுரர்களாலும் கந்தவர்களாலும் மனிதர்களாலும் அழிக்க முடியாத ஒரு விமானம் வேண்டும்" என்றும், "அது எங்கு வேண்டுமானாலும் செல்லக் கூடியதாக இருக்க வேண்டும்" என்றும், "அது யாதவர்களுக்குப் பயத்தை அளிக்க வேண்டும்" என்றும் கேட்டான். 

சிவனார் "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி விட்டு, தேவ லோகச் சிற்பியான மயனை அத்தகைய விமானம் ஒன்றைத் தயாரிக்கும் படி உத்தரவிட்டார். உடனே மயன் எஃகினாலான ஒரு பெரிய விமானம் தயாரித்தான். ஒரு பெரிய அரண்மனையைப் போல அது அத்தனை பெரியதாக இருந்தது. அதற்கு ஸௌபம் என்று பெயர் வைக்கப்பட்டது. 

சால்வன் மிக்க மகிழ்ச்சியுடன், அதிலேயே பறந்து தன் ராஜ்ஜியம் திரும்பினான். கிருஷ்ணர் துவாரகையை விட்டு எப்பொழுது வெளியே செல்வார் என்று காத்துக் கொண்டிருந்தான். கிருஷ்ணர் ராஜசூய யாகத்திற்குச் சென்று விட்டார் என்று தெரிந்ததும், அவன் தன ஆயுதங்களையெல்லாம் எடுத்துக் கொண்டு ஒரு பெரிய சேனையையும் திரட்டிக் கொண்டு துவாரகையை முற்றுகை இட்டான். நகரம் முழுவதும் அழிக்கத் தீர்மானித்தான். 

பிறகு நகரின் வாயில்கள், கோபுரங்கள், அரண்மனைகள் முதலியவற்றை அழித்தான். மிகவும் உயரத்தில் பறந்த தன் விமானத்தில் இருந்து கொண்டு, நகரை அம்புகளாலும் கற்களாலும் பாறைகளினாலும், வேரோடு சாய்ந்த மரங்களாலும் தாக்கினான். 

ஒரு பெரிய சூறாவளி வீசுமாறு செய்ய, அது கிளப்பிய புழுதியினால் நகரமே இருந்த இடம் தெரியவில்லை. யாதவர்கள் நடுங்கினார்கள். கிருஷ்ணனின் மகனான பிரத்தியும்னனிடம் ஓடிச் சென்று, தங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment