||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ராஜ சூய யாகம்|
ஜராசந்தன் இறந்தான். கிருஷ்ணர், அர்ஜுனனுடனும், பீமனுடனும் கிரி விரஜத்தில் இருந்து இந்திரப் பிரஸ்தம் நோக்கிப் பயணமானார். இதற்கிடையில் யுதிஷ்டிரர் தம்முடைய மற்றச் சகோதரர்களை எல்லாத் திக்குகளிலும் அனுப்பி, எல்ல அரசர்களும் அவரைச் சக்ரவர்த்தி என்று ஒப்புக்கொள்ளும்படி செய்து விட்டார்.
பெரும்பாலும் எல்லா அரசர்களும் யுதிஷ்டிரரிடம் அதிக மரியாதை வைத்து இருந்ததனால் அவரை எதிர்க்கவில்லை. பிறகு யுதிஷ்டிரர் கிருஷ்ணரின் அனுமதியுடன் யாகம் செய்யச் சரியான இடத்தைத் தேர்ந்தெடுத்தார்.
யாகத்திற்கு அவர் அக்காலத்தில் சிறந்த ரிஷிகளான துவைபாயனர், பரத்வாஜர், கௌதமர், வசிஷ்டர், சியவனர், கண்வர், மைத்ரேயர், விசுவாமித்ரர் போன்றவர்களை வரவழைத்தார். பீஷ்மர், திருதராஷ்டிரர், துரோணர், கிருபர், விதுரர் முதலானவர்களை அழைத்து வருவதற்காக சகாதேவன் அஸ்தினாபுரம் சென்றான்.
பாரத நாட்டின் எல்லா அரசர்களும் யாகத்திற்கு விஜயம் செய்தார்கள். யுதிஷ்டிரர் யாகசாலையை உழுதார். அதற்குப் பிறகு யாகம் ஆரம்பித்தது. நாரதர் போன்ற தேவலோகத்து ரிஷிகளும் யாகத்திற்கு வந்தனர்.
அந்த யாகத்தின் சிறப்பைப் பற்றியும், பெருமையைப் பற்றியும் இந்திர சபையிலும் கூடப் பேசப்பட்டது. வருணன் முன்னொரு தடவை செய்த யாகத்தோடு அது ஒப்பிடப்பட்டது. யாகம் முடிந்ததும் ஒரு பிரட்சனை எழுந்தது. அக்கிரப்புஜை (முதல் பூஜை) என்னும் ஒரு பூஜை செய்யப்பட வேண்டும். அங்கு வந்திருந்தவர்களுக்குள் யார் மிகப் பெரியவரோ அவரே எல்லோராலும் பூஜிக்கப்பட வேண்டும்.
யாரை மிகப் பெரியவர் என்று தேர்ந்தெடுப்பது? யுதிஷ்டிரர் எல்லோரிடமும் மரியாதை வைத்திருந்தார். அதனால் அவருக்கு பெரிய தர்ம சங்கடமாக இருந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் அவர் திகைத்துக் கொண்டு இருந்தப் போது, பாண்டவர்களில் கடைசிச் சகோதரனான சகாதேவன் எழுந்து நின்று, "இங்கு முதல் மரியாதையை ஏற்க தகுதி உள்ளவர் ஒருவரே ஒருவர்தாம் இருக்கிறார். அவர்தாம் ‘கிருஷ்ணர்’. அவர் மனிதரல்ல, கடவுள், அதனால் அவரே முதல் பூஜிக்கப்பட வேண்டும்”.
இப்படிச் சொல்லிவிட்டுக் கிருஷ்ணரின் பெருமையை நன்கு உணர்ந்திருந்த சகாதேவன் தன் இருக்கையில் அமர்ந்தான். சபையில் இருந்த எல்லாப் பெரியவர்களும் அவன் கூறியதுதான் சரி என்று ஒப்புக் கொண்டார்கள்.
யுதிஷ்டிரரின் மனத்திலும் அதே எண்ணம்தான் இருந்தது. அதனால் சகாதேவனின் வார்த்தைகளை எல்லோரும் ஒப்புக் கொண்டது அவருக்கு மகிழ்ச்சியை அளித்தது. மிக்க மகிழ்ச்சியுடன், அவர் கிருஷ்ணரின் பாதங்களைப் பூஜை செய்ய ஆரம்பித்தார். ஒரு தங்கக்குடத்திலிருந்து திரௌபதி தண்ணீர் ஊற்ற, அவர் கிருஷ்ணரின் பாதங்களை அலம்பினார். அந்தத் தீர்த்தத்தை எல்லோரும் தலையில் தெளித்துக் கொண்டனர். பிறகு இப்படிப் பூஜிக்கப்பட்ட கிருஷ்ணரை எல்லோரும் கைக் கூப்பி வணங்கினர்; காலில் விழுந்து வணங்கினர்; "நமோ நாம; ஜெய, ஜெய" என்று கோஷித்தனர்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment