About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Saturday, 14 October 2023

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - ஐம்பத்தி ஏழாவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

057 இரு மிடறு பிடித்தேனோ செல்வப் பிள்ளையைப் போலே|

மண்ணுக்குள் புதைந்திருந்த திருநாராயணபுரம் கோவிலை, அவ்வூரின் மக்கள் மற்றும் மன்னனின் உதவியுடன் மீட்டெடுத்து, அங்கு புதியதாய் ஒரு கோவிலைக் கட்டி, மூலவருக்கு மூன்று நாள் திருவாராதனம் செய்த ஸ்ரீ ராமானுஜரின் கனவில் தோன்றிய ஸ்ரீமன் நாராயணன், “உற்சவரான ராமப்ரியன் டெல்லி பாதுஷாவின் அரண்மனையில் உள்ளார். அவரை அழைத்து வருவாயாக!” என்றார்.


ராமானுஜர், உற்சவரை மீட்க இரண்டு மாதங்கள் பயணம் செய்து, பாதுஷாவின் அரண்மனையை அடைந்தார். பாதுஷாவிடம் நடந்தவற்றைக் கூறி, தான் வந்ததற்கான காரணத்தையும் கூறினார். பாதுஷா, “அவ்விக்ரகம் என் மகளிடம் உள்ளது. அவளுக்கு மிகவும் பிரியமான விக்ரகம். கொடுக்க விரும்ப மாட்டாள். நீங்கள் அவரை கூப்பிடுங்கள். அவர் உங்களுடன் வந்தால் கூட்டிக் கொண்டு செல்லுங்கள்.” என்றார். இளவரசியின் அறைக்கு சென்ற ஸ்ரீ ராமானுஜரும் பாதுஷாவும் அங்கு, இளவரசியின் படுக்கையில் செல்வ நாராயணனின் விக்கிரகத்தைக் கண்டனர். ராமானுஜரின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகியது. இதோ! என் செல்வப் பிள்ளை என உரக்கக் கத்தினார்.

“சாரங்கபாணி தளர் நடை நடவானோ.” என்று பெரியாழ்வார் ஸ்ரீ கிருஷ்ணனை அழைத்தது போல், ஸ்ரீ ராமானுஜர், தன் இரு கைகளை விரித்து, “என் செல்வப் பிள்ளையே வாராய்!”- என கண்களில் நீர் பெருக அழைத்தார். ஸ்ரீ ராமானுஜரின் குரலைக் கேட்டதும், அந்தச் சிலை உடனே சின்னஞ்சிறு கண்ணனாக மாறியது. ராமப்ரியன் உடனே தான் அணிந்திருந்த ஆபரணங்கள் ஜொலிக்க, சின்னஞ்சிறு பாதங்களில் சலங்கை சிணுங்க, ஓடி வந்து ராமானுஜரின் மடியில் ஏறி அமர்ந்து தன் இரு பிஞ்சுக் கரங்களால் அவர் கழுத்தைக் கட்டிக் கொண்டார்.

பாதுஷாவின் அனுமதியுடன் பின், ஸ்ரீ ராமானுஜர் ராம ப்ரியனை திருநாராயணபுரம் அழைத்து வந்தார். கோவிலில் அவரை நிறுவி, உர்ச்சவ மூர்த்திக்குரிய உத்சவங்களை முன்னின்று நடத்தினார்.

(ராமானுஜரின் மடியில் இருந்த குழந்தை பின் விக்கிரகமானது. அதை அவர் திருநாராயணர் கோவிலுக்கு எடுத்து வந்தார். பாதுஷாவின் மகள் பின்னர் பெருமாளைத் தேடி வந்து நாராயணபுரத்தில்செல்வ நாராயணப் பெருமாளின் திருவடியில் ஐக்கியமானாள். மூலவரின் பாதத்தில் வரநந்தினி என்ற பெயரில் இருப்பதாக ஐதீகம். வரநந்தினியை பீபீ நாச்ச்சியார் என்பர் உள்ளூர் மக்கள், இக்கோயிலில் ராமானுஜரும் உபதேச முத்திரையுடன் காட்சியளிக்கிறார்)

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, "செல்வப்பிள்ளை போல் இரு கைகளால் ஸ்ரீ ராமானுஜரின் கழுத்தை அன்புடன் அனைத்து பிடித்தேனோ? இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

ஹரி ஓம்||
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment