About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Friday, 29 September 2023

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - ஐம்பத்தி ஒன்றாவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

051 இங்கும் உண்டு என்றேனோ ப்ரஹ்லாதனைப் போலே|

கொடிய அரக்கனான இரண்யகசிபுக்கும் (இரணியன்) கயாதுக்கும் மகனாகப் பிறந்த பிரகலாதன், தெய்வத்தன்மை வாய்ந்த மிகச் சிறந்த விஷ்ணு பக்தன். ஹிரண்யகசிபு தவத்தில் அமர்ந்த பொழுது, அவன் மனைவியான கயாது கர்ப்பம் தரித்தாள். இரணியன் இல்லாத காரணத்தால், தேவர்கள் அவனது நாட்டை அழிக்க வந்த பொழுது, நாரத மாமுனி கயாதுவை தேவேந்தரனிடம் இருந்து காப்பாற்றி, அவரை தனது ஆஷ்ரமத்தில் வைத்து கவனித்து வந்தார். அப்பொழுது, அனுதினமும் நாரத மாமுனி, ஸ்ரீமன் நாராயணன் (விஷ்ணு) தான் ஈரேழு உலகத்திற்கும் கடவுள் என்று போதித்தார். பின்னாளில் இரணியன் வரங்கள் பெற்று நாடு திரும்ப, அரண்மனை சென்ற கயாதுவுக்கு பிரஹலாதன் பிறந்து, அக்குழந்தை சிறுவயது முதலே சிறந்த ஸ்ரீமன் நாராயணனின் பக்தனாக வளர்ந்து வந்தது.


இரணியகசிபு, பிரம்மாவிடம் இருந்து தான் பெற்ற வரத்தால் ஈரேழு உலகத்திலும் ஆட்சி புரிந்து வந்தான். தான்தான் கடவுள் என்றும், அனைவரும் தன்னைத்தான் வணங்க வேண்டும் என்றும் அனைவரையும் கட்டாயப்படுத்தி வந்தான். குருகுலத்தில் குரு அனைத்து குழந்தைகளுக்கும் “இரணியகசிபு தான் முழுமுதற் கடவுள்”, என்று கற்றுக்கொடுக்க, பிரஹலாதனோ, “ஸ்ரீமன் நாராயணனே முழுமுதற் கடவுள்” என்றான். இச்செய்தியறிந்த இரணியன், விஷ்ணு உண்மையான கடவுள் அல்லர், அவர் நம் குல விரோதி, உன் சித்தப்பாவைக் கொன்றவன் என்று நயமாகவும் மிரட்டியும் சித்திரவதைப் படுத்திப் பார்த்தும் அவனால் பிரகலாதன் மனதை மாற்ற முடியவில்லை. துன்பப்பட்டாலும் விஷ்ணுதான் மூல முதற்கடவுள் என்ற தனது எண்ணத்திலிருந்து பிரகலாதன் பிறழாது உறுதியாக நின்றான். 


பிரகலாதனை மாற்ற பலவிதங்களில் துன்புறுத்தினான். ஆனால், எதையுமே கண்டுகொள்ளாத பிரஹலாதன் “நாராயணா நாராயணா” என்றபடி இருந்ததால், ஸ்ரீமன் நாராயணன் அவனைக் காப்பாற்ற, இரணியனின் முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடிந்தன. ஆத்திரமடைந்த இரணியன் தன் மகன் என்றும் பாராமல் பிரகலாதனைக் கொலை செய்ய ஆணையிட்டான். ஆனால் ஒவ்வொரு முறையும் தோல்வியே அடைந்தான். யானையின் காலால் இடரச் செய்தல், கொடிய விஷம் கொண்ட பாம்புகளோடு அடைத்து வைத்தல், விஷமருந்தச் செய்தல், தீக்குள் இறங்கச் செய்தல் போன்ற அவனது கொடு முயற்சிகளில் இருந்தும் பிரகலாதன், தான் கொண்ட அசைக்க முடியாத விஷ்ணு பக்தியினால் விஷ்ணுவின் உதவியால் காப்பாற்றப்பட்டான். 


பிரகலாதனைக் கொல்லத் தான் எடுத்த முயற்சிகளில் எல்லாம் தோற்றுப் போன இரணியன் தானே நேராகப் பிரகலாதனைக் கொல்லப் போன போதும் பிரகலாதன் பயமின்றி தான் வணங்கும் கடவுள் தன்னைக் காப்பார் என்றான். அது கேட்டு ஆத்திரத்தில் அறிவிழந்த இரணியன், விஷ்ணுவைத் தானே கொல்லப் போவதாகக் கூறி, ‘உன் கடவுளைக் காட்டு’, என பிரகலாதனிடம் கேட்க, பிரகலாதனோ, “ஸ்ரீமன் நாராயணன் எங்கும் இருப்பார் எதிலும் இருப்பார், ஏன் தூணிலும் இருப்பார் எந்தத் துரும்பிலும் இருப்பார்” என்று கூறினான். இரணியன் ஒரு தூணைக் காட்டி, இந்த தூணில் உள்ளாரா என்று கேட்க, பிரகலாதனோ, “தூணிலும் இருப்பார், தூணின் தூசியிலும் இருப்பார், தந்தையே” என்று கூறினான். இரணியன் அந்தத் தூணை உடைக்க, ஸ்ரீமன் நராயணர், நரசிம்ம அவதாரம் (மனிதன் பாதி சிங்கம் பாதி) பூண்டு தூணில் இருந்து வெளிவந்து இரணியன் பெற்ற வரங்கள் பொய்க்காத வகையில் அவனை வதம் செய்து பிரகலாதனைக் காத்தருளினார்.

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, "பிரகலாதனைப் போல், மாறுபாடில்லா நம்பிக்கையுடன், ‘ஸ்ரீமன் நாராயணன் எங்கும் உள்ளார், இங்கும் உள்ளார்’, என்று கூறினேனா? இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment