About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Friday, 12 April 2024

ஸ்ரீமத் பாகவத புராணம் - 82

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

விதுர மைத்ரேய ஸம்வாதம் - 27

ஸ்கந்தம் 03

மூலகாரணனான இறையைத் தன் மகவாகப் பெறும் பேறு பெற்ற தேவஹூதி வினவினாள்.

பக்தி யோகத்தினால் உங்களை அடையலாம் என்று சொன்னீர்கள். பக்தி யோகம் எத்தகையது? அதன் உண்மை ஸ்வரூபம் என்ன? உலகியல் தளைகளில் மாட்டிக் கொண்டு தவிக்கும் பெண்ணாகிய நான் எத்தகைய பக்தியைச் செய்தால், ஆனந்தமே உருவான உங்களைச் சுலமா அக அடையலாம்?


இலக்கைக் குறியாக அடிக்கும் அம்பைப் போல், பகவானைக் குறியாக அடித்துத் தரும் அந்த பக்தியோகத்தைப் பற்றி விரிவாகக் கூறுங்கள்.

நீங்கள் கூறிய பக்தி யோகம் சுலபம் போல் தோன்றினாலும்‌ அறிஞர்க்கும் அரிது. நீங்களோ அண்டியவரைக் காக்கும் ஹரி. நானோ மந்த புத்தியுள்ள பெண்பிள்ளை. எப்படிக் கூறினால் எனக்கு எளிதாக விளங்குமோ அப்படிக் கூறியருள வேண்டும்.

கபிலர் இதைக் கேட்டு பெரிதும் மகிழ்ந்து பக்தி யோகத்தை விளக்கும் ஸாங்க்யம் என்ற யோகத்தை எடுத்துரைத்தார்.

அம்மா! உலக விஷயங்களை என்னென்னவென்று அறிவிக்கும் ஞானேந்திரியங்கள், கர்மங்களைச்‌ செய்யும்‌ கர்மேந்திரியங்கள், இவற்றை ஊக்குவிக்கும் மனம் ஆகிய இம்மூன்றுமே காரணமின்றி எந்தப்‌ பயனையும் விரும்பாது.

இவற்றைத் தூய்மையான இறைவனிடத்தில் நிலைபெறச் செய்வதே பக்தியாம். இது முக்தியைக் காட்டிலும் சிறந்தது.

வயிற்றிலுள்ள அக்னி, உண்ணப்பட்ட உணவை ஜீரணம்‌செய்து அழிப்பது போல், அனாதி கர்ம வாசனைகளின் கொள்கலனான இவ்வுடலை பக்தி விரைவில் பொசுக்குகிறது. கர்மா அழியுமானால் உடல் தேவையில்லை. கர்மாவை அனுபவிக்கவே உடல்.

எனது திருவடி சேவையில் ஈடுபாடு கொண்டு அனைத்துச் செயல்களையும்‌ எனக்காகவே செய்யும்‌ பக்தர்கள், எனது கல்யாண குணங்களை விவரிக்கும்‌ லீலைகளை ஒருவருக்கு ஒருவர் அன்புடனும் ஆசையுடனும் பேசிக் கொள்வார்கள். இத்தகைய பக்தர்கள் முக்தியையும் விரும்ப மாட்டார்கள்.

சிரித்த முகமும், தாமரைக்‌ கண்களும் கொண்ட என் அழகிய திருமேனியைக் கண் குளிரக் கண்டு மகிழ்கிறார்கள். செவிக்கும் மனத்திற்கும் இனிதான என் அழகைப் புகழ்ந்து பாடி பாடி பொழுதைப் போக்குகிறார்கள். பெரிய தவச்சீலர்களாயினும், அவர்கள் விரும்புவது இஃதே.

என் திருமேனியின் ஒவ்வொரு அங்கமும்‌ அழகின் எல்லை. என் மேல் கொண்ட பக்தி, அவர்கள் விரும்பாவிடினும் அவர்களுக்கு முக்தியளிக்கிறது.

என் பக்தர்கள் அவித்யை அறவே நீங்கிய பின்னர், என் மாயையினால் படைக்கப்பட்ட ப்ரும்மலோகம் முதலான அனைத்து போகங்கள், அஷ்டமா சித்திகள், வைகுண்ட லோகத்தையும் கூட விரும்புவதில்லை.

ஆனால், அவர்களுக்கு இவையெல்லாம் தானாகவே கிடைக்கின்றன. அவர்களுக்கு அன்புக்கிடமான ஆத்மா, காதலுக்கிடமான காதலி, மனைவி, மக்கள், நம்பிக்கைக்கிடமான தோழன், நன்மையே நவிலும்‌ ஆசிரியன், நன்மையே செய்யும்‌ தோழன், பூஜை செய்யத் தகுந்த குலதெய்வம் அனைத்தும் நானே.

என்னுடைய காலச் சக்கரம்‌ இவர்களைத் தீண்டாது. இவர்களை நான் ஸம்சார ஸாகரத்தினின்றும் கரையேற்றுகிறேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment