||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
விதுர மைத்ரேய ஸம்வாதம் - 7
ஸ்கந்தம் 03
மைத்ரேயர் தொடர்ந்து கூறலானார். ப்ரும்மா தனக்கு ஆதாரமான பரம்பொருளைத் தியானத்தில் கண்டு தன் மனத்திற்கும் வாக்கிற்கும் எட்டியவாறு பலவாறு துதித்துக் களைப்படைந்து ஓய்ந்தார். அப்போது மானஸீகமாகவே பகவான் அவருடன் பேசினார்.
"ப்ரும்ம தேவரே! நீர் வேதத்தை உம்முள் கொண்டிருக்கிறீர். நீர் மனந்தளர்ந்து சோர்வடையலாகாது. நீர் என்னிடம் வேண்டப் போவதை நான் முன்னமேயே தயார் செய்து விட்டேன். நீங்கள் மறுபடி தவம் செய்யுங்கள். பக்தி செய்யுங்கள். தாங்கள் படைக்கப்போகும் அனைத்தையும் உங்கள் இதயத்திலேயே தெளிவாய்க் காண்பீர்கள். அப்போது ஒருமுகப்பட்ட மனத்தில் ப்ரபஞ்சம் முழுதும் நான் வியாபித்திருப்பதையும், என்னுள் அடங்கிய முழு ப்ரபஞ்சத்தையும் காண்பீர்கள். பக்தி செய்யும் உங்களை ரஜோ குணம் பாதிக்காது.
உங்களுக்கு என்னைப் பற்றி பூரண அறிவு இருக்கிறது. நீர் ஸகுணனாக என்னைக் கண்ட பின்னும் நிர்குணனாக அறிந்து துதித்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நீங்கள் துதித்த இந்தத் துதியினால் என்னைத் துதிப்பவர்க்கு வேண்டியதெல்லாம் அளிப்பேன். மக்கள் அனுஷ்டிக்கும் பூர்த்த தர்மம் (குளம் வெட்டுதல் போன்ற), தவம், வேள்விகள், தானங்கள், யோக ஸாதனைகள், ஸமாதி, தியானம் முதலியவற்றால் பெறும் நன்மைகள் எவையோ அவை எனது மகிழ்ச்சியால் தான். அவற்றின் உண்மையான பலன் நான் மகிழ்வதே. நீர் எனது ஆத்மா. என்னை மூலகாரணமாக உடையவர். எனவே, யாருடைய உதவியும் இன்றி, அனைத்து லோகங்களையும், ஜீவராசிகளையும், முந்தைய கல்பத்தில் இருந்தபடியே உங்களிடமிருந்தே படைக்கத் துவங்குவீர்."
பின்னர் பகவான் ப்ரும்மாவின் ஹ்ருதய கமலத்தினின்றும் மறைந்தார்.
இப்போது விதுரர் இடை மறித்தார். "ப்ரும்மா தன் உடலிலிருந்தும் மனத்திலிருந்தும் எவ்விதமான படைப்புகளைச் செய்தார்?" மைத்ரேயர் அவரது ஆர்வத்தைக் கண்டு புன்முறுவல் பூத்துக் கொண்டே கூறத் துவங்கினார்.
பகவான் கூறியபடி ப்ரும்மா மனத்தை நாராயணனிடம் ஒருமுகப்படுத்தி நூறு தேவ வருஷங்கள் தவமியற்றினார். ஊழிக் காற்றினால் அவர் வீற்றிருக்கும் தாமரை மலரும், ப்ரளய ஜலமும் வெகு வேகமாக அசைந்தன. தனது தவத்தால் தன் சக்தியும், ஞானமும் பெருகுவதை உணர்ந்து அந்தத் திறனால் ஊழிக் காலக் காற்றை ஊழி நீருடன் விழுங்கினார். அவர் அமர்ந்திருந்த தாமரை மலர் ஆகாயம் முழுதும் பரவி நின்றது. அதைக் கொண்டே அத்தனை லோகங்களையும் முன் கல்பத்தில் இருந்த படியே படைக்க விழைந்தார். தாமரையின் உட்பகுதிக்குள் நுழைந்து அதை பூ:, புவ:, ஸ்வ: என்ற மூன்று லோகங்களாகப் பிரித்தார்.
அத்தாமரையோ பதினான்கு லோகங்களையும், அதற்கு மேலும் படைக்கலாம் போல் பெரிதாக இருந்தது. பூ:, புவ:, ஸ்வ: ஆகிய மூன்று உலகங்களும் கர்மாக்களை அனுபவிக்கும் இடங்களாகும். ப்ரும்ம தேவரும் ஜீவராசிகளில் ஒருவரே. அவருடைய லோகத்திற்குப் படைப்பு இல்லையா என்ற கேள்வி எழலாம்.
ப்ருமா பயனை எதிர் நோக்கா அறங்களின் முழுப் பயனாவார். மேற்சொன்ன மூன்று லோகங்களுக்கும் ஒவ்வொரு கல்பத்தின் முடிவிலும் தோற்றமும் அழிவும் உண்டு. மஹர் லோகம், ஜன லோகம், தபோ லோகம், ஆகியவை நிஷ்காம கர்மங்களின் பயனை அனுபவிக்கும் இடங்கள்.
அங்குள்ளவர்களுக்கு ப்ரும்மாவின் இரண்டு பரார்த்தங்களும் முடியும் வரை அழிவில்லை. இரண்டு பரார்த்தங்கள் முடியும் போது ப்ரும்மாவுடன் சேர்ந்து இந்த லோகங்களில் உள்ளவர்களுக்கும் மோக்ஷம் தான்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment