||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
திவ்ய ப்ரபந்தம் - 104 - மகாபலியின் மகன் நமுசியை
வானில் சுழற்றியவன்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - எட்டாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
என்னிது மாயம்?* என்னப்பன் அறிந்திலன்*
முன்னைய வண்ணமே* கொண்டு அளவாய் என்ன*
மன்னு நமுசியை* வானிற் சுழற்றிய*
மின்னு முடியனே! அச்சோ அச்சோ*
வேங்கட வாணனே! அச்சோ அச்சோ!
வாமநனாய்ச் சென்ற திருமால் மாவலியிடத்தில் நீரேற்றுத் திரிவிக்கிரமனாய் வளர்ந்து அளக்கப் புகும் போது அது கண்ட மஹாபலி புத்ரனான நமுசி ஓடி வந்து
- இது - யாசிக்கும் போதிருந்த வடிவம் மாறி அளக்கிற இது
- என் மாயம் - என்ன மாயச் செய்கை!
- என் அப்பன் - என் தந்தை
- அறிந்திலன் - நீ செய்யும் இந்த மாயத்தை அறியவில்லை
- முன்னைய - நீ யாசிக்க வந்த போதிருந்த
- வண்ணமே - வாமனன் உருவையே
- கொண்டு அளவாய் - கொண்டு அளப்பாயாக
- என்ன - என்று சொல்ல
- மன்னு - இப்படி பிடிவாதமாய் நின்ற
- நமுசியை - அந்த நமுசி என்பவனை
- வானில் - ஆகாசத்திலே
- சுழற்றிய - சுழற்றி எறிந்தவனான
- மின்னு முடியனே - ஜொலிக்கும் கிரீடத்தை அணிந்தவனே!
- அச்சோ அச்சோ - என்னை அணைத்துக் கொள்ள வேண்டும்!
- வேங்கடம் - திருமலையிலே
- வாணனே - வசிப்பவனே!
- அச்சோ அச்சோ - என்னை அணைத்துக் கொள்ள மாட்டானோ!
எம்பெருமான் மஹாபலியிடன் பூமியை யாசிக்கும் போது சிறிய உருவினனாய் இருந்தவன் மூவடியை அளக்கும் போதோ திரிவிக்ரமனாய் அளவிடமுடியாத மிகப் பெரியவனாய் வளர்ந்தான். இது என் தந்தை அறியாத மாயச் செயல், யாசித்தபோது இருந்த சிறிய உருவத்தைக் கொண்டே அளக்கவேண்டும் என மகாபலியின் மகன் நமுசி என்பவன் கண்ணனை எதிர்த்து வற்புறுத்த, கண்ணன் நமுசியை ஆகாசத்திலே சுழற்றி எறிந்தான். ஜ்வலிக்கும் கிரீடத்தை உடையோனே, என்னை அணைத்துக் கொள்ள வர வேண்டும். திருமலையில் வசிப்பவனே! அணைத்துக் கொள்ள வர வேண்டும்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment