||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
திவ்ய ப்ரபந்தம் - 95 - செங்கண்மால் கேசவன்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - ஏழாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
திரை நீர்ச் சந்திர மண்டலம் போல்*
செங்கண்மால் கேசவன்*
தன் திரு நீர் முகத்துத் துலங்கு சுட்டி*
திகழ்ந்தெங்கும் புடை பெயர*
பெரு நீர்த் திரையெழு கங்கையிலும்*
பெரியதோர் தீர்த்த பலம் தரு நீர்ச்*
சிறுச் சண்ணம் துள்ளம் சோரத்*
தளர் நடை நடவானோ!
- திரை நீர் - அலை வீசும் நீரை உடைய ஸமுத்திரத்தின் நடுவில் அசைந்து தோன்றுகிற
- செங்கண்மால் - சிவந்த கண்களையும், கரு நிறத்தையும்
- கேசவன் - கேசவன் என்னும் திருநாமம் உடைய இவன்
- சந்திர மண்டலம் போல் - சந்திர மண்டலத்தைப் போல்
- தன் - தன்னுடைய
- திரு நீர் - அழகிய ஒளியை உடைய
- முகத்து - திரு முகத்திலே
- துலங்கு - விளங்குகின்ற
- சுட்டி - சுட்டியானது
- எங்கும் - எல்லா விடத்திலும்
- திழ்ந்து - ப்ரகாசித்துக் கொண்டு
- புடை பெயர் - இடமாகவும் வலமாகவும் அசையவும்
- பெரு நீர்த் - சிறந்த தீர்த்தமாகிய
- திரை எழு - அலைகள் எழும்பும்
- கங்கையிலும் - கங்கையை விட
- பெரியது -அதிகமான
- ஓர் - ஒப்பற்ற
- தீர்த்த பலம் - தீர்த்த நீராடிய பலத்தை
- தரும் - கொடுக்கின்ற
- நீர் - ஜலத்தை உடைத்தான
- சிறு சண்ணம் - சிறிய சண்ணமானது
- துள்ளம் சோர - துளி துளிகளாகச் சொட்டவும்
- தளர் நடை - அழகிய இளம் நடையை
- நடவானோ - நடக்க மாட்டானோ? நடக்க வேணும்
சிவந்த கண்களையுடையவனும் கரு நிறத்தவனுமான கண்ணன் கேசவன் அணிந்திருக்கும் பிரகாசமாக ஒளிவீசும் திருமுகத்துச் சுட்டியானது அவன் நடக்கும் போது அசைவது எப்படியுள்ளது என்றால் முழுச் சந்திர மண்டலத்தின் பிரதிபிம்பம் கருநிறக் கடலின் நடுவில் தோன்றி அலைகளால் அசைவது போலுள்ளதாம். உயர்ந்த அலை திரளும் கங்கை ஆற்றின் நீரைக் காட்டிலும் புனிதமான கண்ணனின் மூத்திர நீரானது துளித் துளியாக அவன் குறியிலிருந்து சொட்டும் படியே தளர் நடையாக அவன் நடந்து வர காத்து நிற்கிறார் ஆழ்வார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment