About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Tuesday, 27 February 2024

திவ்ய ப்ரபந்தம் - 94 - பெரியாழ்வார் திருமொழி - 1.7.9

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 94 - கரிய யானை குட்டி போன்ற திருவிக்கிரமன்
பெரியாழ்வார் திருமொழி 
முதலாம் பத்து - ஏழாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்

வெண் புழுதி மேல் பெய்து கொண்டு அளைந்ததோர்* 
வேழத்தின் கருங்கன்று போல்* 
தெண் புழுதியாடி திரிவிக்கிரமன்* 
சிறு புகர் பட வியர்த்து* 
ஒண் போதலர் கமலச் சிறுக்காலுறைத்து* 
ஒன்றும் நோவாமே* 
தண் போது கொண்ட தவிசின் மீதே* 
தளர் நடை நடவானோ!

  • வெள் புழுதி - வெளுத்த புழுதியை
  • மேல் - தன் மேலே 
  • பெய்து கொண்டு - படிய விட்டுக் கொண்டு
  • அளைந்தது - அளைந்து
  • ஓர் வேழத்தின் - ஓர் கருத்த யானையின்
  • கருங்கன்று போல் - குட்டி போல
  • தெள் புழுதி - தெளிவான புழுதியிலே
  • ஆடி - விளையாடி
  • திரி விக்கிரமன் - தனது மூவடியால் உலகங்களை அளந்த திரிவிக்கிரமனாகிய இவன்
  • சிறு புகர் பட - பிரகாசமாகவும் சிறிது பளபளக்க
  • வியர்த்து - வேர்த்துப் போய்
  • போது - உரிய காலத்திலே
  • அலர் - மொக்கு மலர்ந்த
  • ஒண் - அழகிய
  • கமலம் - தாமரைப் பூவை ஒத்த
  • சிறு கால் - சிறிய பாதங்கள்
  • உறைத்து - ஏதேனும் ஒன்று உறுத்த அதனால்
  • ஒன்றும் நோவாமே - சிறிதும் நோவாதபடி
  • தண் போது கொண்ட - குளிர்ந்த புஷ்பங்களுடைய
  • தவிசின் மீது - மெத்தையின் மேலே 
  • தளர் நடை - அழகிய இளம் நடையை
  • நடவானோ - நடக்க மாட்டானோ? நடக்க வேணும்

வெள்ளை நிறம் கொண்ட புழுதியை யானை குட்டி தன் மேல் போட்டுக் கொள்ளுமாப் போலே, கண்ணனும் தெளிந்த புழுதியை தன் மேல் போட்டுக் கொண்டு, திருமேனியில் அங்குமிங்குமாக வியர்த்தவனாய் நின்றான். திரிவிக்கிரமனாய்  மூன்று உலங்கங்களையும் தன் திருவடிகளால் அளந்தவனுமான கண்ணனின் மலர்ந்த தமரையையொத்த திருப்பாதங்கள் உறுத்தாமலும் நோவாதும்படியாகவும் இருக்க குளிர்ந்த பூக்களாலான மெத்தையின் மேல் தளர் நடை நடந்து வர கண்ணனை வேண்டி நிற்கிறார் ஆழ்வார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment