||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
யாதவர்களின் போர்|
இதற்குப் பிறகு, துவாரகையில் துர்நிமித்தங்கள் தோன்றின. அதைப் பார்த்து யாதவர்கள் கவலைப் பட்டார்கள். அவர்கள் கிருஷ்ணரிடம் சென்று முறையிட்டார்கள். கிருஷ்ணர் அவர்களைப் பார்த்து, "இந்த கேட்ட சகுணங்கள் பயத்தை ஏற்படுத்துகின்றன. இனி ஒரு கணமும் நாம் இங்கே இருக்கக் கூடாது. நாம் எல்லோரும் சரஸ்வதி நதி ஓடும் பிரபா க்ஷேத்திரத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு உடனேயே சென்று, அந்தப் புண்ணிய நதியில் நீராடி நாம் தெய்வங்களுக்குப் பூஜை செய்வோம்" என்று சொன்னார்.
கூட்டம் கூட்டமாக பிரபாக் க்ஷேத்திரத்தை நோக்கிச் செல்ல ஆரம்பித்தார்கள். கடலைப் படகுகளில் கடந்து, பிறகு தங்கள் ரதங்களில் ஏறிக்கொண்டு சென்றார்கள். அங்கு மிகவும் சிரத்தையுடன் பல சடங்குகள் செய்தார்கள்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஒரு நாள் எதிர்பாராத நிகழ்ச்சி நடந்தது. அவர்கள் எல்லோரும் மைரேயகம் என்ற மதுவைக் குடித்தார்கள். அதை அளவுக்கு மீறிக் குடித்து விட்டதனால், அவர்கள் புத்தியோ நாக்கோ மனமோ அவர்கள் வசம் இல்லை.
அதனால் தாறுமாறாக பேச ஆரம்பித்தார்கள். எனவே சீக்கிரமே அவர்களிடையே சண்டை மூண்டது. கையில் கிடைத்த ஆயுதங்களைக் கொண்டு ஒருவரையொருவர் தாக்க ஆரம்பித்தார்கள். கடற்கரையில் கூடாரங்களில் தங்கியிருந்தவர்கள், சண்டை போடத் திறந்தவெளிக்கு வந்தனர்.
மிகவும் கடுமையான சண்டை நடந்தது. தந்தைக்கும் பிள்ளைக்கும் சண்டை; சகோதரனுக்கும் சகோதரனுக்கும் சண்டை; தாத்தாவுக்கும் பேரனுக்கும் சண்டை; நண்பனுக்கும் நண்பனுக்கும் சண்டை; எல்லா வகையான ஆயுதங்களும் உடைந்து போயின.
அப்பொழுது கடற்கரையில் முளைத்திருந்த ஏரக் என்ற புற்களைப் பறித்து, அவற்றால் ஒருவரையொருவர் தூக்கிக் கொண்டார்கள். இரும்பு உலக்கையின் பொடிகள்தாம் அந்தச் செடியாக வளர்ந்திருந்ததனால், அவை வால்களைவிடக் கூர்மையாக இருந்தன. அதனால் கிருஷ்ணரையும், பலராமரையும் தவிர, யாதவ குலமே அழிந்தது.
இதையெல்லாம் கண்டு வெறுப்புற்ற பலராமர் வெகு தூரம் சென்று, யோகத்தில் ஆழ்ந்து தமது பூத உடலை நீத்தார். பலராமர் உயிர் நீங்கியதைப் பார்த்துவிட்டு, கிருஷ்ணர் ஓர் அரசமரத்தின் அடியில் மெளனமாக உட்கார்ந்தார். அவரும் ஆழ்ந்த யோகத்தில் அமர்ந்தார். அவர் அணிந்திருந்த மாலை காற்றில் பட படவென்று அடித்துக் கொண்டது.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment