||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
திவ்ய ப்ரபந்தம் - 88 - இருடீகேசன்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - ஏழாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
மின்னுக் கொடியும் ஓர் வெண் திங்களும்*
சூழ் பரி வேடமுமாய்ப்*
பின்னல் துலங்கும் அரசிலையும்*
பீதகச் சிற்றாடையொடும்*
மின்னில் பொலிந்தோர் கார்முகில் போலக்*
கழுத்தினிற் காறையொடும்*
தன்னில் பொலிந்த இருடிகேசன்*
தளர் நடை நடவானோ!
- மின் கொடியும் - கொடி மின்னலும்
- ஓர் வெண் திங்களும் - அதனோடு சேர்ந்திருப்பதும் களங்கமில்லாததுமான முழுவதும் வெண்மையாயுள்ள ஒரு சந்திரனும்
- சூழ் - அவ்விரண்டையும் சுற்றிக் கொண்டிருக்கும்
- பரிவேடமும் ஆய் - பரி வேஷத்தையும் ஒளியும் போல (சந்திரனைச் சுற்றிச் சில காலங்கள் காணப்படும் ரேகை.
- இது ஊர்கோள் எனவும் படும்)
- பின்னல் - திரு வரையில் சாத்தின பொற் பின்னலும்
- துலங்கும் - பளிச்சிடும்
- அரசிலையும் - அரசிலை போல வேலை செய்த ஒரு திரு ஆபரணமும்
- பீதகம் - இவ்விரண்டையும் சூழ்ந்த பொன்னாலாகிய பீதாம்பரம் என்னும்
- சிறு ஆடையோடும் - சிறிய வஸ்த்ரமும் ஆகிய இவற்றோடும்
- மின்னில் - மின்னலின்
- பொலிந்தது - பொலிவுக்கு
- ஓர் - ஒப்பற்ற
- கார் முகில் போல - காள மேகம் போல
- கழுத்தினில் - கழுத்தில் அணிந்த
- காறையோடும் - காறையென்னும் ஆபரணத்தோடும் கூடிய
- தன்னில் - தன் இயற்கை அழகாலேயே
- பொலிந்த - விளங்குகின்ற
- இருடீகேசன் - ‘ஹ்ருஷீகேசன்‘ என்ற திருநாமமுடைய இவன்
- தளர் நடை - அழகிய இளம் நடையை
- நடவானோ - நடக்க மாட்டானோ? நடக்க வேணும்
கண்ணன் இடுப்பில் அணிந்திருக்கும் வெள்ளி மற்றும் பொன்னாலான ஆபரணங்களுடன் கூடிய வஸ்த்ரம், கொடி போல் தோன்றும் மின்னலுடன் சேர்ந்த வெண்மையான சந்திரனை வட்டம் சூழ்ந்தார்ப் போல் இருந்ததாம். கரு நிற திருமேனியின் கழுத்தில் சாத்திய பொன் அட்டிகையோ மழை மேகத்தின் நடுவே மின்னல் தோன்றுவது போலிருந்ததாம். தனக்கே உரிய தெய்வீக அழகினால் விளங்கும் ஹ்ருஷீகேசன் - கண்ணன் தளர் நடையாக நடந்து வருவானா என ஏங்குகிறார் ஆழ்வார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment