About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Tuesday, 2 January 2024

திவ்ய ப்ரபந்தம் - 72 - பெரியாழ்வார் திருமொழி - 1.5.9

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 72 - வேதங்களின் பொருளாய் இருப்பவனே! 
பெரியாழ்வார் திருமொழி 
முதலாம் பத்து - ஐந்தாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்

பாலொடு நெய் தயிர் ஒண் சாந்தொடு சண்பகமும்* 
பங்கயம் நல்ல கருப்பூரமும் நாறி வர* 
கோல நறும் பவளச் செந்துவர் வாயினிடைக்* 
கோமள வெள்ளி முளை போல் சில பல்லிலக* 
நீல நிறத்தழகார் ஐம்படையின் நடுவே* 
நின் கனி வாயமுதம் இற்று முறிந்து விழ* 
ஏலும் மறைப் பொருளே! ஆடுக செங்கீரை* 
ஏழுலகும் உடையாய்! ஆடுக ஆடுகவே|

  • பாலொடு - பாலோடே கூட
  • நெய் - நெய்யும்
  • தயிர் - தயிரும் உண்பதாலும்
  • ஒண் சாந்தொடு - அழகிய சந்தனமும்
  • செண்பகமும் - செண்பகம் முதலிய மலர்களும்
  • பங்கயம் - தாமரைப் பூவும் தரிப்பதாலும்
  • நல்ல - உத்தமமான
  • கருப்பூரமும் - பச்சைக் கர்ப்பூரமும்
  • நாறி வர - கலந்து பரிமளிக்க
  • கோலம் - அழகிய
  • நறு பவளம் - நற் பவளம் போல்
  • செம் - அழகியதாய்
  • துவர் - சிவந்திருக்கிற
  • வாயின் இடை - திரு அதரத்தினுள்ளே (வாயினுள்ளே)
  • கோமளம் - அழகிய இளைய
  • வெள்ளி முளை போல் - வெள்ளி முளை போலே
  • சில பல் - சில திரு முத்துக்கள்
  • இலக - விளங்க (தெரிய)
  • நீலம் நிறத்து - நீல நிறத்தை உடைய
  • அழகு ஆர் - அழகு மிகுந்திருக்கும்
  • ஐம்படையின் நடுவே - பஞ்சாயுதத்தின் நடுவே
  • நின் - உன்னுடைய
  • கனி - கொவ்வைக் கனி போன்ற
  • வாய் - அதரத்தில் ஊறுகின்ற
  • அமுதம் - அமுதம் போன்ற ஜலமானது
  • இற்று முறிந்து விழ - கீழே விழும்படியாக
  • ஏலும் - தகுதியான
  • மறை - வேதத்தினுடைய
  • பொருளே - அர்த்தமானவனே!
  • ஆடுக செங்கீரை - ஆடுக செங்கீரை
  • ஏழ் உலகும் உடையாய்! - ஏழ் உலகும் உடையவனே!
  • ஆடுக ஆடுகவே - ஆடிக் காட்டுவாயாக

கண்ணன் செங்கீரை ஆடும்போது, அவனிடமிருந்து பலவிதமான நறுமணங்கள் வீசுகிறதாம். பால், தயிற், நெய், இவைகளை அடிக்கடி புசிப்பதால் ஏற்படும் நறுமணம், சந்தனம், செண்பகம் இவைகளை சாத்தி கொள்வதால் ஏற்படும் நறுமணம் இப்படியாக பலவித பரிமளங்கள் அவனைச் சூழ்ந்திருக்கும். திருவாயைத் திறந்து சிரிக்கும் போதோ கற்பூரத்தின் பரிமளமும் தாமரையின் நறுமணமும், வீசும். திருவாய் மலரும் போது, சிவந்து இருக்கும் பவள வாயின் நடுவே சில பற்கள் வெள்ளி அரும்பு போல் பிரகாசிக்கும். நீல நிறத்தையுடையவனே, பஞ்சாயுதத்தின் நடுவே அமைந்து உள்ள உன்னுடைய கொவ்வை பழம் போன்ற வாயிலிருந்து ஊரும் அம்ருதமான நீர் கீழே விழும்படியாக ஆடவேண்டும். ஏழு உலகங்களையும் படைத்து ஆள்பவனே. நீ ஆடவேண்டும், என்கிறாள் யசோதை!

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment