||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
பாதாதி கேச அழகு
ஸ்கந்தம் 02
ஸ்ரீ சுகாசார்யார் தொடர்ந்தார்.
“சப்த ப்ரும்மமான வேதம், அதன் பொருளை இலை மறை காயாகத் தான் கூறுகிறது. மனிதனின் அறிவோ, அதில் கூறப்படும் ஸ்வர்கம் போன்ற பலன்களை மட்டும் தேடி அலைகிறது.
மனிதன் மாயையினால் சுற்றிக் கொண்டு, கர்ம வாசனைகளால் அலைக் கழிக்கப்பட்டு இன்பத்தைத் தேடுகிறான். இவ்வுலகில் உண்மையான இன்பம் என்று ஒன்று இருந்தால் தானே அது அவனுக்குக் கிடைக்கும்?
ஒவ்வொரு முயற்சியையும் இது உண்மையான இன்பத்தை அளிக்க வல்லதா? என்று ஆராய்ந்து பார்த்துச் செய்ய வேண்டும். இல்லையெனில் கைவிட வேண்டும்.
பகவானை நம்புபவர்களுக்கு என்ன குறை வந்து விடப் போகிறது?
இறைவனை நம்பி வீட்டை விட்டுக் கிளம்புபவனுக்கு படுக்க இறைவன் அளித்த பூமி இருக்கிறது. பஞ்சு மெத்தை எதற்கு? உணவு நீர் அருந்த கைகள் இருக்க, ஆடம்பரமான பாத்திரங்கள் எதற்கு? உடுத்த பட்டாடைகள் அவசியமா? பசித்தால் காய் கனிகள் தர, பிறருக்காகவே வாழும் மரங்கள் உண்டு. தங்குவதற்கு குகைகள் இல்லையா? தாகம் தீர்க்க நதிகள் இல்லையா? இப்படி இயற்கையே எல்லாவற்றையும் அளிக்க மனிதன் இன்னொருவனை அண்டிப் பிழைக்க வேண்டிய அவசியம் என்ன?
வேண்டுபவர் வேண்டாதவர் அனைவர்க்கும் பாகுபாடின்றி அனைத்தையும் வழங்குகிறான். ஸத்யமே உருவான பகவான் அனைவரிடமும் அன்பு செலுத்துகிறான். அவனை வணங்கினால் பிறப்பு இறப்புச் சுழலிலிருந்து விடுபடலாம். இவ்வுலக வாழ்வே யம பட்டணத்தில் ஓடும் வைதரணி நதி போன்றது. மனிதன் கர்மத்தில் திளைக்கும் விலங்காவான்.”
இவ்வாறு சொன்ன ஸ்ரீ சுகர், பகவானின் ரூபத்தை வர்ணிக்கிறார்.
"சிலர் ஹ்ருதய ஆகாசத்தில் பகவானை ஒரு சாண் உயரம் உள்ளவராக தியானம் செய்கின்றனர். சங்கு, சக்கரம், கதை, தாமரை மலர் ஆகியவற்றை நான்கு திருக்கரங்களிலும் ஏந்தியவர். மலர்ந்த முகம் கொண்டவர், தாமரை இதழ் போன்ற அழகிய கண்கள், கதம்ப மலரின் அழகிய இதழ்களைப் போன்ற மஞ்சள் பட்டாடை, ஒளிரும் ரத்தினங்கள் கொண்ட தோள் வளைகள், கிரீடங்கள், மென்மையான திருவடித் தாமரைகள், திருமகள் வசிக்கும் ஸ்ரீ வத்ஸம் என்ற மரு, கழுத்தில் கௌஸ்துபம், வாடாத வனமாலை, அரையில் நவரத்தினங்கள் இழைத்த அரை ஞாண்,விரல்களில் மோதிரங்கள், திருவடிகளில் கொலுசும் தண்டையும், வழவழப்பான மாசற்ற கறுத்த சுருண்ட கேசங்கள், அழகுற விளங்கும் திருமுக மண்டலத்தில் புன்னகை, கம்பீரமான பார்வை, அசைகின்ற புருவ நெளிவுகள், கண்ணசைவில் அடியார்களுக்கு அருளை வாரி வழங்கும் ஒய்யாரம்.
நினைத்த பொழுதே காக்கும் அப்பரமனை மனம் தாரணையில் நிலை பெறுகிற வரையில் சலிக்காது தியானம் செய்ய வேண்டும். அதனால் சித்தம் தூய்மை அடையும். இடையறாது தியானம் நிலைக்கும். இவ்வாறு பாதாதி கேசமாக (முதலில் திருவடி, பின் கணுக்கால், முழந்தாள், தொடை, இடுப்பு, திருவயிறு, திருமார்பு, கழுத்து, திருக்கரங்கள், திருமுக மண்டலம் என்பதாக) ஒவ்வொரு அங்கமாக தியானம் செய்ய வேண்டும்.”
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment