About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 9 June 2024

திவ்ய ப்ரபந்தம் - 117 - பெரியாழ்வார் திருமொழி - 1.9.10

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 117 - நன்மக்களைப் பெற்று மகிழ்வர்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - பத்தாம் பாசுரம்

தரவு கொச்சகக் கலிப்பா

ஆய்ச்சி அன்று* ஆழிப் பிரான் புறம் புல்கிய* 
வேய்த் தடம் தோளி சொல்* விட்டுசித்தன் மகிழ்ந்து* 
ஈத்த தமிழ் இவை* ஈரைந்தும் வல்லவர்* 
வாய்த்த நன்மக்களைப் பெற்று* மகிழ்வரே| (2)

  • வேய்த்த - மூங்கில் போன்ற
  • தடந் - பெரிய
  • தோளி - தோள்களை உடையவளான
  • ஆய்ச்சி - யசோதை பிராட்டி
  • அன்று - அக் காலத்திலே
  • ஆழிப் பிரான் - சக்கராயுதத்தை கையில் ஏந்திய ப்ரபுவான கண்ணன்
  • புறம் புல்கிய - தன் முதுகை வந்து கட்டிக் கொண்டதை பற்றி கூறிய
  • சொல் - சொன்ன பாசுரங்களை
  • விட்டு சித்தன் - பெரியாழ்வார்
  • மகிழ்ந்து - தாம் அநுபவித்து, ஸந்தோஷித்து
  • ஈந்த - உலகத்தார்க்கு உபகரித்த
  • தமிழ் இவை ஈர் ஐந்தும் - தமிழ்ப் பாசுரமாகிய இப் பத்துப் பாசுரங்களையும்
  • வல்லவர்- ஓத வல்லவர்கள்
  • வாய்த்த - மங்களாசாஸநத்தில் விருப்பம் பொருந்தி
  • நல் மக்களை - நல்ல புத்திரர்களையும், ஸத் சிஷ்யர்களையும்
  • பெற்று - அடைந்து
  • மகிழ்வர் – மகிழ்ச்சி பெறுவார்கள்

மூங்கில் போன்ற அழகிய தோள்களையுடைய யசோதை, சக்ராயுதபாணியான கண்ணன் அன்று புறம் புல்கியதை (பின்புறம் வந்து தன்னை கட்டிக்கொண்டு விளையாடியதைக் கூறியதை), பெரியாழ்வார் தாம் அநுபவித்து உலகத்தாருக்காக தந்த இப்பத்து தமிழ் பாசுரங்களை ஓதவல்லவர்கள் நல்ல மக்களைப் பெற்று மகிழ்ச்சி அடைவர்கள்.

அடிவரவு: வட்டு கிங்கிணி சுத்த நாந்தகம் வெண்கலம் சத்திரம் பொத்த மூத்தவை கற்பகம் ஆய்ச்சி - மெச்சூது

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment