About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Saturday, 29 June 2024

108 திவ்ய தேசங்கள் - 036 - திருத்தெற்றியம்பலம் 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

036. திருத்தெற்றியம்பலம் (திருநாங்கூர்)
முப்பத்தி ஆறாவது திவ்ய க்ஷேத்ரம்

ஸ்ரீ செங்கண்மால் ரங்கநாத பெருமாள் திருக்கோயில்

ஸ்ரீ செங்கமலவல்லி தாயார் ஸமேத ஸ்ரீ செங்கண்மால் ரங்கநாதன் பெருமாள் 
திருவடிகளே சரணம்||

  • பெருமாள் மூலவர்: செங்கண்மால் ரங்கநாதன், ஸ்ரீ லக்ஷ்மீ ரங்கர்
  • பெருமாள் உற்சவர்: பள்ளி கொண்ட ரங்கநாதர்
  • தாயார் மூலவர்: செங்கமலவல்லி
  • தாயார் உற்சவர்: செண்பகவல்லி
  • திருமுக மண்டலம் திசை: கிழக்கு
  • திருக்கோலம்: புஜங்க ஸயனம்
  • புஷ்கரிணி/தீர்த்தம்: சூரிய 
  • விமானம்: வேத
  • ப்ரத்யக்ஷம்: செங்கமல நாச்சியார், அநந்தன்
  • ஸம்ப்ரதாயம்: தென் கலை
  • மங்களாஸாஸநம்: 1 ஆழ்வார்
  • பாசுரங்கள்: 10

--------------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி


ஸ்தல புராணம்

கருவறையில் லக்ஷ்மி நாராயணர், ஸ்ரீதேவி, பூமாதேவி, சக்கரத்தாழ்வார், சந்தான கோபால கிருஷ்ணன் ஆகியோரும் அருள் பாலிகின்றனர். செங்கமலவல்லி தாயார் தனி ஸந்நதியில் உள்ளார். மகா மண்டபத்தில் தெற்கு நோக்கி 12 ஆழ்வார்கள், அனுமன், சக்கரத்தாழ்வார்கள் காட்சியளிக்கின்றனர்.

பெருமாளின் 108 திருப்பதிகளுள் இத்தலம் மட்டும் தான் "அம்பலம்' என அழைக்கப் படுகிறது. திருநாங்கூரில் "பள்ளி கொண்ட பெருமாள் கோயில்' என்றால் தான் அனைவருக்கும் தெரியும். திருநாங்கூர் வந்த 11 பெருமாள்களில், இவர் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆவார். இவரை வணங்கினால் ஸ்ரீரங்கம் பெருமாளை வணங்கியதற்கு சமம். கிழக்கு பார்த்த இத்தலத்தில் பெருமாள் ஆதிசேஷன் மீது நான்கு புஜங்களுடன் பள்ளி கொண்ட பெருமாளாக அருள்பாலிக்கிறார். தலையும், வலது கையும் மரக்கால் மேல் வைத்து கொண்டு, இடது கரத்தை இடுப்பின் மீது வைத்து கீழே தொங்கவிட்ட நிலையில் காட்சியளிக்கிறார். இவரது தலைப் பக்கம் ஸ்ரீதேவியும், பாதத்தில் பூமாதேவியும் வீற்றிருக்கின்றனர்.

இரண்யாட்சன் என்ற அசுரன் பூமியை தூக்கி கொண்டு பாதாள உலகத்தில் மறைத்து வைத்து விட்டான். தேவர்கள், முனிவர்கள் அனைவரும் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். அவரும் பூமியை காப்பாற்றுவதற்கு வராக அவதாரம் எடுக்க சம்மதித்தார். இதை கேட்டவுடன் மகாலக்ஷ்மி, "பகவானே! நான் ஒரு நொடி கூட உங்களை விட்டு பிரியாமல் தங்களது மார்பில் குடியிருப்பவள். நீங்களோ என்னை விட்டு வராக அவதாரம் எடுக்க போவதாக கூறுகிறீர்கள். நான் எப்படி தனியாக இருப்பது,''என வருத்தப்பட்டாள். இதே போல் ஆதிசேஷனும், "பரந்தாமா! நீங்கள் பூமியை காக்க பாதாள உலகம் சென்று விட்டால் என் கதி என்னாவது?'' என வருத்தப்பட்டார். இதைக்கேட்ட பெருமாள், "பயப்படாதீர்கள். எல்லாம் நன்மைக்கு தான். நீங்கள் இருவரும் "பலாசவனம்" சென்று என்னை தியானம் செய்ய புறப்படுங்கள். அங்கே சிவபெருமானும் வருவார். நான் இரண்யாட்சனை வதம் செய்து விட்டு உங்களுக்கு அனுக்கிரகம் செய்ய அங்கு வந்து விடுகிறேன்,'' என்றார். அத்துடன் கலியுகத்தில் இத்தலம் "திருத்தெற்றியம்பலம்' என அழைக்கப்படும். என் தீவிர பக்தரான ஸ்ரீபாஷ்யகாரர், தீட்சை பெற்ற 108 வைஷ்ணவர்களை அழைத்து என்னை ஆராதனை செய்ய இருக்கிறார். நான் அங்கிருந்து உலகத்தை காத்து ரக்ஷிக்க போகிறேன். கலியுகம் முழுவதும் அங்கேயே நித்தியவாசம் செய்ய போகிறேன்,'' என்றருளினார். வராக அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு, பாதாள உலகிற்கு சென்று இரண்யாட்சனை அழித்து பூமியை மீட்டு அது இருக்க வேண்டிய இடத்தில் மெல்ல சுழல விட்டார். இதையறிந்த மகாலக்ஷ்மியும், ஆதிசேஷனும் பூமிக்கு வந்து மகாவிஷ்ணு குறித்து தவம் செய்ய ஆரம்பித்தனர். மகாவிஷ்ணு தான் கொடுத்த வாக்குப்படி பலாசவனம் (திருத்தெற்றியம்பலம்) சென்று அங்கிருந்த சிவன், மகாலக்ஷ்மி, ஆதிசேஷனுக்கு அருள் புரிந்தார். பின் அங்கேயே போர் புரிந்த களைப்பு தீர, சிவந்திருந்த அழகான கண்களுடன் பள்ளி கொண்டார். இதனால் இத்தல பெருமாள் "செங்கண்மால் ரங்கநாதர்' என்றழைக்கப்படுகிறார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment