||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
027. திருக்காவளம்பாடி (திருநாங்கூர்)
இருபத்தி ஏழாவது திவ்ய க்ஷேத்ரம்
ஸ்ரீ கோபால கிருஷ்ணன் பெருமாள் திருக்கோயில்
ஸ்ரீ மடவரல் மங்கை தாயார் ஸமேத ஸ்ரீ கோபாலகிருஷ்ணன் பெருமாள் திருவடிகளே சரணம்||
- பெருமாள் மூலவர்: கோபாலகிருஷ்ணன்
- பெருமாள் உற்சவர்: ராஜ கோபாலன்
- தாயார் மூலவர்: மடவரல் மங்கை
- தாயார் உற்சவர்: செங்கமல நாச்சியார்
- திருமுக மண்டலம் திசை: கிழக்கு
- திருக்கோலம்: நின்ற - பாமா ருக்மணியுடன்
- புஷ்கரிணி/தீர்த்தம்: தடமலர்ப் பொய்கை
- விமானம்: ஸ்வயம்பு, வேதா மோத
- ப்ரத்யக்ஷம்: சேனைத் தலைவர், மித்ர தேவர், ருத்ரன்
- ஸம்ப்ரதாயம்: தென் கலை
- மங்களாஸாஸநம்: 1 ஆழ்வார்
- பாசுரங்கள்: 10
--------------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி
ஸ்தல புராணம்
கிருஷ்ண பரமாத்மா சத்ய பாமாவுடன் சேர்ந்து நரகாசுர வதத்தை நிகழ்த்தினார். இந்திரன், வருணன் உள்ளிட்டோரிடம் இருந்து நரகாசுரன் அபகரித்த பொருட்கள் யாவற்றையும் அவர்களுக்கே கிருஷ்ணர் மீட்டுத் கொடுத்த பிறகு, அவர்கள் கிருஷ்ணருக்கு நன்றி தெரிவித்தனர்.
நீண்ட நாட்கள் கழித்து, இந்திரன் தோட்டத்தில் விளைந்த பாரிஜாத மலர் குறித்து அறிகிறார் சத்யபாமா. தனக்கு அந்த மலர் வேண்டும் என்று கிருஷ்ணரிடம் கேட்கிறார். கிருஷ்ணரும் உரிமையோடு பாரிஜாத மலரைத் தருமாறு இந்திரனிடம் கேட்கிறார். ஆனால் அதற்கு இந்திரன் உடன்படவில்லை.
கோபம் கொண்ட கிருஷ்ணர், இந்திரனோடு போர் செய்து, அவரது காவளத்தை (பூம்பொழில்) அழித்தார். துவாரகாவில் இருந்து வந்த கிருஷ்ணர், தான் இருப்பதற்கு ஓர் இடத்தை தேர்ந்தெடுக்க விரும்பினார். பிறகு மிகவும் பசுமை நிறைந்த இந்த இடத்திலேயே கோயில் கொண்டார். இந்த இடத்திலேயே சத்யபாமாவுக்காக பாரிஜாத மலர்ச் செடியை நட்டார் கிருஷ்ண பரமாத்மா.
இத்தலத்துக்கு அருகிலேயே திருமங்கையாழ்வாரின் பிறந்த இடமான குறையலூரும், அவர் வைணவர் அடியாருக்கு அன்னதானம் நடத்திய மங்கை மடமும் உள்ளன.
கோயில் சிறியது தான் என்றாலும், மிக அருமையாக உள்ள இத்தலத்தில் ராஜகோபால சுவாமி கிழக்கு நோக்கி ருக்மிணி, சத்யபாமாவுடன் எழுந்தருளி உள்ளார்.
ஆண்டு தோறும் தை அமாவாசைக்கு மறுநாள் இப்பகுதியிலுள்ள 11 திருப்பதி பெருமாள்களும் ஒன்றாக கருட சேவைக்கு மணிமாடக் கோவிலில் எழுந்து அருள்வார்கள். இவர்களுக்கு மங்களாஸாஸநம் செய்வதற்காக திருமங்கை ஆழ்வார் இங்கு எழுந்து அருள்வார். அன்றைய தினம் இந்த ஊரைச் சுற்றி உள்ள வயல் வெளிகளில் உள்ள நெற் பயிர்கள் காற்றினால் ஆடும் சத்தத்தை கேட்டதும், அந்த சப்த வடிவில் திருமங்கை ஆழ்வாரே வந்து விட்டதாக பக்தர்கள் பரவசம் அடைவார்கள். பதினொரு பெருமாளையும் மங்களாஸாஸநம் செய்த பிறகு, திருமங்கை ஆழ்வாரை மணவாள மாமுனிகள் மங்களாஸாஸநம் செய்வார். இந்த கண்கொள்ளா காட்சியை காண ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள்.
சிவனுக்கும், சேனைத் தலைவர் விஷ்வக் சேனருக்கும் இங்கு கிருஷ்ணன் காட்சி தந்துள்ளார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment