||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
திவ்ய ப்ரபந்தம் - 68 - மருத மரம் முறித்தவனே!
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - ஐந்தாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
மத்தளவும் தயிரும் வார்குழல் நன் மடவார்*
வைத்தன நெய் களவால் வாரி விழுங்கி*
ஒருங்கொத்த இணை மருதம் உன்னிய வந்தவரை*
ஊரு கரத்தினொடும் உந்திய வெம் திறலோய்!*
முத்தின் இள முறுவல் முற்ற வருவதன் முன்*
முன்ன முகத்தணியார் மொய் குழல்கள் அலைய*
அத்த! எனக்கொரு கால் ஆடுக செங்கீரை*
ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே|
- மத்து - மத்தாலே
- அளவும் - கடையப்பட்ட
- தயிரும் - தயிரையும்
- வார் குழல் - நீண்ட தலை முடியை உடைய
- நல் - அச்சம் நாணம் மடம் போன்ற குணங்கள் உடைய
- மடவார் - நற்குணப் பெண்கள்
- வைத்தன - சேமித்து வைத்தவைகளான
- நெய் - நெய்யையும்
- களவால் - கள்ளத்தனமாக திருட்டு வழியாலே
- வாரி - கைகளால் அள்ளி
- விழுங்கி - வயிறார உண்டு
- ஒருங்கு - ஒரே மாதிரியான
- ஒத்த - மனம் ஒத்தவர்களாய்
- இணை மருதம் - இரட்டை மருத மரமாய்க் கொண்டு
- உன்னிய - உன்னைத் தாக்க வேண்டும் என்னும் நினைவையுடையராய்
- வந்தவரை - வந்து நின்ற அஸுரர்களை
- ஊரு கரத்தினொடு - துடைகளாலும் கைகளாலும்
- உந்திய - இரண்டு பக்கத்திலும் சரிந்து விழும்படி தள்ளின
- வெம்திறவோய் - அசாத்திய வலிமை உடையவனே!
- முத்து - திருமுத்துக்கள் தோன்றும்படி
- இன் - இனிதான
- இள முறுவல் - புன்முறுவல்
- முற்ற - முழுமையாக
- வருவதன் முன் - வெளிவருவதற்கு முன்னே
- முன்னம் முகத்து - முன் முகத்திலே
- அணிஆர் - அழகு மிகப்பெற்று
- மொய் - அடர்த்தியான
- குழல்கள் - திருக்குழல்களானவை
- அலைய - தாழ்ந்து அசையும்படி
- அத்த - அப்பனே!
- எனக்கு - எனக்காக
- ஒருகால் - ஒரு முறை
- செங்கீரை ஆடுக - செங்கீரை ஆடியருள வேணும்
- ஆயர்கள் - இடையர்களுக்காக
- போர் ஏறே - போர் செய்ய, ரிஷபம் போலே நின்ற கண்ணனே!
- ஆடுக ஆடுகவே - ஆடிக் காட்டுவாயாக
அடர்த்தியான, நீண்ட கருமையான கூந்தலை உடைய, சிறந்த குணங்களைக் கொண்ட ஆயர் குல பெண்கள் சிரத்தையுடன் தயாரித்து, சேமித்து வைத்து இ ருந்த தயிர், மோர் மற்றும் வெண்ணெய் ஆகியவற்றை எல்லாம் தன் கைகளால் அள்ளி, அவற்றை எவரும் கண்டறிவதன் முன்னம் திருட்டுத் தனமாய் சுவைத்து, ஒரே விழுங்கில் அவசர அவசரமாக உட்கொண்டாய். உன் கள்ளத் தனத்தைக் கண்டறிந்ததும், கோபம் கொண்ட யசோதை அன்னை, உன்னை நீண்ட பழந்தாம்புக் கயிற்றால் உரலில் கட்டிப் போட்டாள். பெரிய கனமான உரலில் உன்னைப் பிணைத்திருந்தும், வலிமை மிகுந்த உன் கால்களினால் அந்த உரலையும் சேர்த்து இழுத்து உருட்டிக் கொண்டே, மாளிகையை விட்டு, வெளியே வந்து, ஆங்கே மாளிகையின் பின்புறத்தில், ஒன்றாக அருகருகே நின்றிருந்த இரண்டு மருத மரங்களுக்கு இடையே உரலுடன் ஊர்ந்து செல்ல முயலுகையில், அவற்றை உன் வலிமையான தோள்களினால் இடித்துக் கீழே தள்ளி விட்டு அவற்றிற்கு இடையில் புகுந்து சென்ற, மிகுந்த வலிமை உடையவனே! என்னைப் பெற்ற என் அப்பனே! முத்தினும் சிறந்த உன் வெண்பற்கள் வெளியில் தெரியும் வண்ணம் நீ சிரிக்கும் முன்னமேயே, உன் கருங்கூந்தல் ஊர்ந்து உன் முகத்தின் முன் வந்தாடும் வண்ணம் எனக்காக ஒரு தடவை செங்கீரை ஆடுவாயாக. போர் செய்ய வல்ல காளையைப் போன்றவனே, எனக்காக ஒரு முறை செங்கீரை ஆடி விடு என்கிறாள் யசோதை!
||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment