About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Monday, 17 July 2023

12. திருமங்கை ஆழ்வார்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

  • அம்சம் - சார்ங்கம் (வில்)
  • அவதார ஸ்தலம் - திருக்குறையலூர் (திருவாலி)
  • காலம் - கி.பி. 8ம் நூற்றாண்டு
  • வருடம் - நள - கலி பிறந்து 398 ம் வருஷம்
  • மாதம் - கார்த்திகை
  • திரு நக்ஷத்திரம் - க்ருத்திகை
  • திதி - பவுர்ணமி
  • கிழமை - வியாழன்
  • ஆசார்யன் - ஸேனை முதலியார்
  • தந்தை - ஆலிநாடுடையார்
  • தாய் - வல்லித்திரு அம்மையார்
  • பரமபத ப்ராப்தி ஸ்தலம் - திருக்குறுங்குடி 
  • அருளிச் செய்தவை -                                                                                                    1. பெரிய திருமொழி - இரண்டாம் ஆயிரம் - 948-2031 (1084 பாசுரங்கள்)   2. திருக்குறுந்தாண்டகம் - இரண்டாம் ஆயிரம் - 2032-2051 (20 பாசுரங்கள்)                                                                                                                         3. திருநெடுந்தாண்டகம் - இரண்டாம் ஆயிரம் - 2052-2081 (30 பாசுரங்கள்)                                                                                                                         4. திருவெழுகூற்றிருக்கை - மூன்றாம் ஆயிரம் - 2672 (1 பாசுரம்)                   5. சிறிய திருமடல் - மூன்றாம் ஆயிரம் - 2673 (40 சூர்னிகை) (1 பாசுரம்)     6. பெரிய திருமடல் - மூன்றாம் ஆயிரம் - 2674 (78 சூர்னிகை) (1 பாசுரம்)
  • பாசுரங்கள் - 1137

----------
மங்களாஸாஸநம் செய்த திவ்ய தேச 
ஸ்தலங்கள் - 86; பாசுரங்கள் - 1057

  • திருவரங்கம் 73 பாசுரங்கள்
  • திருக்கோழி 1 பாசுரம்
  • திருக்கரம்பனூர் 1 பாசுரம்
  • திருவெள்ளறை 13 பாசுரங்கள்
  • திருப்பேர் நகர் 19 பாசுரங்கள்
  • திருக்கண்டியூர் 1 பாசுரம்
  • திருக்கூடலூர் 10 பாசுரங்கள்
  • திருப்புள்ளம்பூதங்குடி 10 பாசுரங்கள்
  • திருஆதனூர் 1 பாசுரம்
  • திருக்குடந்தை 25 பாசுரங்கள்
  • திருவிண்ணகரம் 34 பாசுரங்கள்
  • திருநறையூர் 10 பாசுரங்கள்
  • திருச்சேறை 13 பாசுரங்கள்
  • திருக்கண்ணமங்கை 14 பாசுரங்கள்
  • திருக்கண்ணபுரம் 104 பாசுரங்கள்
  • திருக்கண்ணங்குடி 10 பாசுரங்கள்
  • திருநாகை 10 பாசுரங்கள்
  • திருத்தஞ்சை மாமணிக்கோயில் 3 பாசுரங்கள்
  • திருநந்தீபுர விண்ணகரம் 10 பாசுரங்கள்
  • திருவெள்ளியங்குடி 10 பாசுரங்கள்
  • திருவழுந்தூர் 45 பாசுரங்கள்
  • திருச்சிறுபுலியூர் 10 பாசுரங்கள்
  • திருத்தலைச்சங்க நாண்மதியம் 2 பாசுரங்கள்
  • திருஇந்தளூர் 11 பாசுரங்கள்
  • திருக்காவளம்பாடி 10 பாசுரங்கள்
  • திருக்காழிச் சீராம விண்ணகரம் 10 பாசுரங்கள்
  • திருஅரிமேய விண்ணகரம் 10 பாசுரங்கள்
  • திருவண்புருடோத்தமம் 10 பாசுரங்கள்
  • திருச்செம்பொன்செய் கோயில் 10 பாசுரங்கள்
  • திருமணிமாடக்கோயில் 12 பாசுரங்கள்
  • திருவைகுந்த விண்ணகரம் 10 பாசுரங்கள்
  • திருவாலி திருநகரி 41 பாசுரங்கள்
  • திருத்தேவனார் தொகை 10 பாசுரங்கள்
  • திருத்தெற்றியம்பலம் 10 பாசுரங்கள்
  • திருமணிக் கூடம் 10 பாசுரங்கள்
  • திருவெள்ளக்குளம் 10 பாசுரங்கள்
  • திருப்பார்த்தன் பள்ளி 10 பாசுரங்கள்
  • திருச்சித்திரகூடம் 21 பாசுரங்கள்
  • திருவஹீந்த்ரபுரம் 10 பாசுரங்கள்
  • திருக்கோவிலூர் 18 பாசுரங்கள்
  • திருக்கச்சி 4 பாசுரங்கள்
  • திருஅஷ்டப்புஜகரம் 11 பாசுரங்கள்
  • திருத்தண்கா 2 பாசுரங்கள்
  • திருவேளுக்கை 1 பாசுரம்
  • திருநீரகம் 1 பாசுரம்
  • திருப்பாடகம் 2 பாசுரங்கள்
  • திருநிலாதிங்கள் துண்டம் 1 பாசுரம்
  • திருஊரகம் 4 பாசுரங்கள்
  • திருவெஃகா 6 பாசுரங்கள்
  • திருக்காரகம் 1 பாசுரம்
  • திருக்கார்வானம் 1 பாசுரம்
  • திருக்கள்வனூர் 1 பாசுரம்
  • திருப்பவள வண்ணம் 1 பாசுரம்
  • திருப்பரமேஷ்வர விண்ணகரம் 10 பாசுரங்கள்
  • திருப்புட்குழி 2 பாசுரங்கள்
  • திருநின்றவூர் 2 பாசுரங்கள்
  • திருஎவ்வுள் 11 பாசுரங்கள்
  • திருவல்லிக்கேணி 10 பாசுரங்கள்
  • திருநீர்மலை 19 பாசுரங்கள்
  • திருவிடவேந்தை 13 பாசுரங்கள்
  • திருக்கடல் மல்லை 26 பாசுரங்கள்
  • திருக்கடிகை 3 பாசுரங்கள்
  • திருநாவாய் 2 பாசுரங்கள்
  • திருமூழிக்களம் 3 பாசுரங்கள்
  • திருவல்லவாழ் 11 பாசுரங்கள்
  • திருப்புலியூர் 1 பாசுரம்
  • திருக்குறுங்குடி 25 பாசுரங்கள்
  • திருத்தங்கல் 4 பாசுரங்கள்
  • திருக்கூடல் 1 பாசுரம்
  • திருமாலிருஞ் சோலை 33 பாசுரங்கள்
  • திருமோகூர் 1 பாசுரம்
  • திருக்கோஷ்டியூர் 13 பாசுரங்கள்
  • திருப்புல்லாணி 21 பாசுரங்கள்
  • திருமெய்யம் 9 பாசுரங்கள்
  • திரு அயோத்தி 1 பாசுரம்
  • திரு நைமிசாரண்யம் 10 பாசுரங்கள்
  • திருப்பிரூதி 10 பாசுரங்கள்
  • திருவதரியாஷ்ரமம் 21 பாசுரங்கள்
  • திருசாளக்கிராமம் 10 பாசுரங்கள்
  • திரு வடமதுரா 4 பாசுரங்கள்
  • திருவாய்ப்பாடி 7 பாசுரங்கள்
  • திரு துவாரகா 2 பாசுரங்கள்
  • திரு சிங்கவேள் குன்றம் 10 பாசுரங்கள்
  • திருவேங்கடம் 62 பாசுரங்கள்
  • திருப்பாற்கடல் 11 பாசுரங்கள்
  • திரு பரமப்பதம் 1 பாசுரம்

----------
பிற பெயர்கள்
நீலன், பரகாலன், கலியன், கலிகன்றி, கலித்வம்சம், தூயோன், லோக திவாகர கவி, சதுஷ்கவி சிகாமணி, ஷத் பிரபந்த கவி, கலிவைரி, நாலுகவி பெருமாள், திருவா வீருடைய பெருமாள், மங்கையர் கோன், அருள்மாரி, மங்கை வேந்தன், ஆலிநாடன், அரட்டாமுகி, அடையார் சீயம் அதயார் சீயம், கொற்ற வேள் பரகாலன், கொற்ற வேள் மங்கை வேந்தன், ஆடல்மா வளவன், மானவேல் கலியன், திருவாளன், வாள் கலியன், சீர் கலியன், மிடுக்கன், முள்ளி செழு மலர் தாரான், பரக்கால நாயகி
----------
மிகப்பெரிய வீரர். மேலும் மிகுந்த மிடுக்கை உடையவர். எனவே கலியன் எனப் பெயர் பெற்றார். மற்ற மதத்தவர்களுக்கு (பரர்கள்) காலனைப் போன்று இருப்பதனால் பரகாலன் என்ற பெயர் கொண்டார். பிற மதத்தவர்களை வாதம் செய்து வெற்றி பெற்றவர். எம்பெருமானே இவரைப் பார்த்து பயந்ததனாலும், இவருக்கு பரகாலன் எனப் பெயர் வந்தது எனலாம். திருநறையூர் நம்பி மற்றும் திருக்கண்ணபுரம் சௌரி ராஜப் பெருமாளிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இந்த இரு எம்பெருமானும் திருமங்கையாழ்வாருக்கு ஆசார்யன் ஸ்தானத்தில் இருக்கக் கூடியவர்கள். இவர் பல திவ்ய தேசங்களை தன்னுடைய ஆடல்மா குதிரையில் சென்று மங்களாசாசனம் செய்திருக்கிறார். ஏறக்குறைய நாற்பது திவ்யதேசங்கள் திருமங்கையாழ்வாரால் தனித்து மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது.  இவர் காட்டிக் கொடுக்கவில்லை என்றால் அந்த நாற்பது திவ்யதேசங்களும் நம்மால் அறியப்படாமல் இருந்திருக்கும். அப்படிப்பட்ட திருமங்கையாழ்வார் ஸ்ரீரங்கம் முதலான பல திவ்ய தேசங்களில் பல கைங்கர்யங்களையும் செய்துள்ளார். ஆழ்வார்கள் வரிசைக் கிரமத்தில் இவர் தான் கடைசி ஆழ்வார். நம்மாழ்வாரிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். நம்மாழ்வார் அருளிய நான்கு ப்ரபந்தங்கள் நான்கு வேதங்களுக்குச் சமமாகக் கொண்டாடப்படுகின்றன. அந்த நான்கு வேதங்களுக்கு எப்படி ஆறு அங்கங்கள் உள்ளதோ அதே போன்று நம்மாழ்வாரின் நான்கு ப்ரபந்தங்களுக்கு திருமங்கையாழ்வாரின் ஆறு ப்ரபந்தங்களும் ஆறு அங்கங்களாகக் கருதப்படுகின்றன.

தொடக்கத்தில் ஆத்மாவை வெயிலில் இட்டு உடம்பை நிழலிலே வைத்தவர். அதாவது பகவத் விஷயத்தில் புகாமல் விஷய சுகங்களில் ஈடுபட்டவர். ஆழ்வார் தான் எம்பெருமானுடைய கிருபைக்கு பாத்திரமாகி, ஸர்வேஸ்வரனாலேயே திருமந்திரம் உபதேசிக்கப் பெற்று, அந்த ஆனந்த அனுபவத்தை நால்வகை (ஆசு, மதுர, சித்ர & விஸ்தார) கவிகளால் பிரபந்தங்களில் அருளிச்செய்தார்.

எம்பெருமான் தனக்கு செய்த பேர் உபகாரத்திற்கு தான் செய்யக்கூடியதோ, செய்ய வேண்டியதோ - நன்றி மறவாதிருத்தல் ஒன்றே என்ற உறுதியுடன் அவன் காட்டிக் கொடுத்த அவனுடைய ஸ்வரூப, ரூப, குண, விபூதிகளை பலவிதமாக பலமுறை சொல்லிச் சொல்லி பெரிய திருமொழியில் அனுபவிக்கிறார்.

திருவெழுகூற்றிருக்கை என்னும் பிரபந்தத்தில் ஜகத் ஸ்ருஷ்டி, பிரம்மாவின் படைப்பு போன்ற அவரது மேன்மைகளை அனுபவித்து அப்படிப்பட்டவனே திருக்குடந்தையில் ஆராவமுதனாய் எழுந்தருளி இருக்கிறான் என்று அவனிடம் சரணம் அடைகிறார்.

சிறிய திருமடலில் ஆழ்வார் தான் பரகால நாயகியாகி பகவானை நாயகனாய் கொண்டு ஜீவனுக்கும் பகவானுக்கும் உள்ள ஒழிக்கவொண்ணா ஸம்பந்தம், அவரை விட்டுப் பிரிந்து ஜீவன் படும் துன்பம், அவனை அடையும் உபாயம் ஆகியவற்றைக் காட்டும் உட்பொருளை உபதேசிப்பதாக அருளிச்செய்துள்ளார்.

பெரிய திருமடலில் 'கண்ணனுக்கே ஆமது காமம்' என்ற வகையில் காமம் என்ற புருஷார்த்தத்தை சிறப்பாக பேசுகிறார். எம்பெருமானிடம் ஏற்பட்ட அன்பின் மிகுதியால் அவனுடன் கலந்து பிரிந்த பரகால நாயகியாக மடலூர்ந்தாகிலும் அவனை அடைந்தே தீர வேண்டும் என்ற நிலையில் இப்பிரபந்தத்தை அருளி செய்கிறார்.

திருக்குறுந்தாண்டகத்தில் பஞ்சபூதங்களிலும் அவற்றின் சேர்க்கையால் உண்டான அனைத்து வஸ்துக்களிலும் உள்ளும் புறமும் பரவி அந்தயாமியாக பகவான் விளங்குவதை அனுபவிக்கிறார்.

திருநெடுந்தாண்டகத்தில் முதல் பத்து பாசுரங்களை தானான தன்மையில் திருமந்திரார்த்தத்தையும், அடுத்த பத்து பாசுரங்களை திருத்தாயார் தன்மையில் த்வயார்த்தத்தையும் கடைசி பத்து பாசுரங்களை நாயகி தன்மையில் சரமஸ்லோகார்த்தத்தையும் உள்ளுரைப் பொருளாக வைத்து அருளிச் செய்கிறார். மேலும் முதல் பத்தில் பக்தியும், இரண்டாம் பத்தில் பிரபத்தியும், மூன்றாம் பத்தில் பிராட்டியின் புருஷகாரமும் பேசப்படுவதாக பூர்வாசார்யர்கள் காட்டுவர்.

இன்னும் பல பல விசேஷ அர்த்தங்களை அனுபவிக்கும்படி இருப்பதால் ஒரு ஸதாசாரிய திருவடிகளை ஆச்ரயித்து நாம் எல்லோரும் அறிவோம்.
----------
தனியன்
கலயாமி கலித்⁴ வம்ஸம் 
கவிம் லோக தி³வாகாரம்|
யஸ்ய கோ³பி⁴: ப்ரகாஸா²பி⁴ர் 
ஆவித்³யம் நிஹதம் தம:||

தனியனின் விளக்கம்
கலிகன்றி என்று திருநாமம் கொண்டவர், கவிகளில் ஸூர்யன் போல் ப்ரகாசிப்பவர், அடியேன் அஞ்ஞாந இருளைத் தம் ஒளிமிக்க சொற்களால் முற்றிலும் அகற்றிய ஞானக் கதிரவனான திருமங்கை ஆழ்வாரை த்யானிக்கிறேன்.

வாழி திருநாமம்
1. கலந்த திருக்கார்த்திகையில் கார்த்திகை வந்தோன் வாழியே|
காசினியில் குறையலூர்க் காவலோன் வாழியே|
நலந்திகழ் ஆயிரத்தெண்பத்து நாலு உரைத்தான் வாழியே|
நாலைந்தும் ஆறைந்தும் நமக்கு உரைத்தான் வாழியே|
இலங்கெழு கூற்றிருக்கை இரு மடல் ஈந்தான் வாழியே|
இம்மூன்றில் இருநூற்றிருபத்து ஏழிந்தான் வாழியே|
வலந்திகழும் குமுதவல்லி மணவாளன் வாழியே|
வாட்கலியன் பரகாலன் மங்கையர் கோன் வாழியே||

2. அய்யன் அருள்மாரி கலை ஆய்ந்து உரைத்தோன் வாழியே|
அந்துகிலும் சீராவும் அணியும் அரை வாழியே| 
மையிலகு வேல் அணைத்த வண்மை மிகு வாழியே|
மாறாமல் அஞ்சலி செய் மலர்க் கரங்கள் வாழியே| 
செய்ய கலனுடன் அலங்கல் சேர் மார்பும் வாழியே| 
திண் புயமும் பணி அமர்ந்த திருக்கழுத்தும் வாழியே| 
மையல் செய்யும் முக முறுவல் மலர் கண்கள் வாழியே| 
மன்னு முடித் தொப்பாரம் வளையமுடன் வாழியே||

திருநாள் பாட்டு
1. பேதை நெஞ்சே!* இன்றை பெருமை அறிந்திலையோ*
ஏது பெருமை இன்றைக்கு என்றென்னில்*
ஓதுகின்றேன் வாய்த்த புகழ் மங்கையர் கோன்* 
மாநிலத்தில் வந்துதித்த*
கார்த்திகையில் கார்த்திகை நாள் காண்*

2. மாறன் பணித்த* தமிழ்மறைக்கு* 
மங்கையர்கோன் ஆரங்கம் கூற அவதரித்த*
வீறுடைய கார்த்திகையில் கார்த்திகை நாள்*
இன்றென்று காதலிப்பார்* 
வாய்த்த மலர்த் தாள்கள் நெஞ்சே! வாழ்த்து!

திருமங்கை ஆழ்வாரின் வடிவழகில் ஈடுபட்டு
மணவாள மாமுனிகள் அருளிய
வடிவழகு   சூர்ணிகையும் தனிப் பாடல்களும்
அணைத்த வேலும், தொழுத கையும், அழுந்திய திருநாமமும், ஓம் 
என்ற வாயும், உயர்ந்த மூக்கும், குளிர்ந்த முகமும், பரந்த விழியும், 
பதிந்த நெற்றியும், நெறித்த புருவமும், சுருண்ட குழலும், வடித்த 
காதும், அசைந்த காது காப்பும், தாழ்ந்த செவியும், செறிந்த 
கழுத்தும், அகன்ற மார்பும், திரண்ட தோளும், நெளிந்த முதுகும், 
குவிந்த இடையும், அல்லிக் கயிறும், அழுந்திய சீராவும், தூக்கிய 
கருங் கோவையும், தொங்கலும் தனி மாலையும், தளிரும் 
மிளிருமாய் நிற்கிற நிலையும், சாற்றிய திருத் தண்டையும், 
சதிரான வீரக் கழலும், தஞ்சமான தாள் இணையும், குந்தியிட்ட 
கணைக் காலும், குளிர வைத்த திருவடி மலரும், வாய்த்த மணங் 
கொல்லையும், வயலாலி மணவாளனும், வாடினேன் வாடி என்று 
வாழ்வித்து அருளிய நீலக் கலிகன்றி, மருவலர் தம் உடல் துணிய 
வாள் வீசும் பரகாலன், மங்கை மன்னனான வடிவே|

உறை கழித்த வாளை ஒத்த விழி மடந்தை மாதர் மேல், உருக 
வைத்த மனம் ஒழித்து இவ் உலகளந்த நம்பி மேல், குறையை 
வைத்து, மடல் எடுத்த குறையலாளி திருமணங் கொல்லை 
தன்னில், வழி பறித்த குற்றமற்ற செங்கையான், மறை உரைத்த 
மந்திரத்தை மால் உரைக்க, அவன் முன்னே, மதி ஒடுக்கி, மனம் 
அடக்கி, வாய் புதைத்து, ஒன்னலார் கறை குளித்த வேல் 
அணைத்து நின்ற விந்த நிலைமை, என் கண்ணை விட்டு 
அகன்றிடாது கலியன் ஆணை ஆணையே|

காதும் சொரி முத்தும், கையும் கதிர் வேலும், தாது புனை 
தாளினையும், தனிச் சிலம்பும், நீதி புனை தென்னாலி நாடன் 
திருவழகைப் போல, என் ஆணை ஒப்பார் இல்லையே| 

வேல் அணைத்த மார்பும், விளங்கு திரு எட்டெழுத்தை மால் 
உரைக்க, தாழ்த்த வலச் செவியும், தாளினை தண்டையும், வீரக் 
கழலும், தார்க் கலியன் நன் முகமும் கண்டு களிக்கும் என் கண்|

இதுவோ| திருவரசு இதுவோ| திருமணங்கொல்லை 
இதுவோ| எழிலாலி என்னுமூர் இதுவோ| தாள் வெட்டும் 
கலியன் வெருட்டி நெடுமாலை எட்டெழுத்தும் பறித்த இடம்|

மங்கள ஸ்லோகம்
ஸ்ரீமதாலி ஸ்ரீநகரி நாதாய கலி வைரிணே|
சதுஷ் கவிப்ர தானாய பரகாலாய மங்களம்||
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

11. திருப்பாண் ஆழ்வார்

 ||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

  • அம்சம் - ஸ்ரீ வத்ஸம்
  • அவதார ஸ்தலம் – திரு உறையூர்
  • காலம் - கி.பி. 8ம் நூற்றாண்டு
  • வருடம் - துன்மதி - கலி பிறந்து 343 ம் வருஷம்
  • மாதம் - காத்திகை
  • திரு நக்ஷத்திரம் - ரோஹிணி
  • திதி - வளர்பிறை துவிதியை
  • கிழமை - புதன்
  • ஆசார்யன் - ஸேனை முதலியார்
  • பரமபத ப்ராப்தி ஸ்தலம் - திருவரங்கம் 
  • அருளிச் செய்தவை - 1. அமலனாதிபிரான் - முதலாம் ஆயிரம் - 927-936
  • பாசுரங்கள் – 10

----------
மங்களாஸாஸநம் செய்த திவ்ய தேச 
ஸ்தலங்கள் - 3; பாசுரங்கள் - 13

  • திருவரங்கம் 10 பாசுரங்கள்

  • திருவேங்கடம் 2 பாசுரங்கள்
  • திரு பரமப்பதம் 1 பாசுரம்

----------
பிற பெயர்கள் 
முனிவாஹன யோகி, பாணர், யோகி வாஹனர், காவீஸ்வரர்
----------
இவரும் தொண்டரடிப் பொடி ஆழ்வார் போல் ஸ்ரீரங்கநாதனிடம் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்தவர். அர்ச்சாவதாரத்தில் மிகவும் ஈடுபட்டிருந்தவர்கள் கடைசி மூன்று ஆழ்வார்கள் என்று கூறுவர். அவர்கள் முறையே தொண்டரடிப் பொடி ஆழ்வார், திருப்பாண் ஆழ்வார் மற்றும் திருமங்கை ஆழ்வார் ஆவர். அதிலும் தொண்டரடிப் பொடி ஆழ்வாரும், திருப்பாண் ஆழ்வாரும் ஸ்ரீரங்கநாதன் இடத்தில் மட்டுமே ஊறியவர்கள்.  திருமங்கை ஆழ்வார்  அனைத்து அர்ச்சாவதார எம்பெருமானிடமும் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்தார். இவர் நம்பெருமாளுடைய திவ்ய மங்கள விக்ரஹத்திற்கு மங்களாஸாஸநம் செய்யும் வகையில் அமலனாதிபிரான் என்ற ப்ரபந்தத்தை அருளிச் செய்தார். ஸ்ரீரங்கநாதரின் திருமேனியை மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் வாழ்ந்தவர்.  திருப்பாண் ஆழ்வார் பஞ்ச மங்களத்தில் பிறந்தவர். அதாவது சாஸ்திரத்தில் நான்கு வர்ணங்கள் காட்டப் படுகிறது. பிராமணர், க்ஷத்ரியர், வைஸ்யர் மற்றும் சூத்திரர் என்று நான்கு வர்ணங்கள். இந்த நான்கு வர்ணங்களுக்கும் அப்பாற்பட்டவர்கள் என்று சிலர் இருப்பார்கள். இந்த வர்ண தர்மங்களை ஒத்துக் கொள்ளாமல் அவர்கள் இஷ்டப்படி வாழ்க்கையை வாழக் கூடியவர்கள். ஆனால் அந்த குலத்திலும் எம்பெருமானுடைய கருணையினால் சிலர் எம்பெருமானுக்கு அடியவர்களாக மிகுந்த பக்தி கொண்டவர்களாக இருந்து இருக்கிறார்கள். திருப்பாண் ஆழ்வாரும் நம்பாடுவானைப் போன்று நான்கு வர்ணங்களுக்கும் அப்பாற்பட்ட பாணர் குலத்தில் பிறந்தவர்.

இவருடைய வைபவத்தை அமலனாதிபிரான் வ்யாக்யானத்தில் காட்டும் போது இவரை இந்த உலகத்தில் இருப்பவர்கள் நான்கு வர்ணத்திற்கு அப்பாற்பட்டவர்கள், தாழ்ந்த குலத்தவர்கள் என்று நினைப்பார்கள். எம்பெருமானும் அதே போன்று நினைப்பான். அதாவது எவ்வாறு நித்ய சூரிகள் இந்த நான்கு வர்ணங்களுக்கு அப்பாற்பட்டவர்களோ அதே போன்று நான்கு வர்ணங்களுக்கும் அப்பாற்பட்ட திருப்பாண் ஆழ்வாரை நித்ய சூரிகளுக்கு நிகராக எம்பெருமான் நினைப்பானாம். இவ்வாறு எம்பெருமானின் பரிபூரணமான கருணையைப் பெற்றவர் திருப்பாண் ஆழ்வார்.

இவருடைய சரித்திரம் நாம் அறிந்ததே. திருவரங்கத்தில காவிரிக் கரைக்கு மறு பக்கத்தில் அமர்ந்து, ஊருக்குள் வராமல் எம்பெருமானைப் பற்றி பாடிக் கொண்டு இருப்பார். ஒரு முறை “லோக சாரங்க முனி” என்பவர் காவிரிக் கரையில் தீர்த்தம் எடுக்க வர வழியில் அமர்ந்திருந்த திருப்பாண் ஆழ்வார் மீது ஒரு கல்லை எடுத்து போட்டார். அது ஆழ்வாருடைய நெற்றியில் பட்டு ரத்தம் வந்தது. லோக சாரங்க முனிவர் மிகவும் வருத்தத்துடன் எம்பெருமானிடம் வந்தார். எம்பெருமான் லோக சாரங்க முனியை அழைத்து “நீங்கள் மிகப் பெரிய அபசாரம் செய்து விட்டீர்கள். நீங்களே சென்று அவரை அழைத்துக் கொண்டு வர வேண்டும்” எனக் கட்டளையிட உடனே லோக சாரங்க முனி திருப்பாண் ஆழ்வாரிடம் சென்று மன்னிப்புக் கேட்டு திருவரங்கத்திற்குள் வரும் படி வேண்ட திருப்பாண் ஆழ்வார் “நான் தாழ்ந்த குலத்தைச் சார்ந்தவன் என்னுடைய கால் திருவரங்கத்தை மிதிக்கக் கூடாது; ஊருக்கு வெளியே தான் இருக்க வேண்டும்” என்று சொல்ல அதற்கு லோக சாரங்க முனி மறுத்து “எம்பெருமானுடைய ஆணை நீர் வந்து தான் ஆக வேண்டும்”. “உமது திருவடி தானே ஊருக்குள் படக்கூடாது என்னுடைய தோளில் ஏறிக் கொள்ளும்” என்று கூற முதலில் மறுத்த திருப்பாண் ஆழ்வார் பின் சம்மதித்தார். இது மிகவும் ரொம்ப ஆச்சரியமான விஷயமாகக் கருதப்பட்டது. அடியவர்களுக்கு ஆட்பட்டு இருக்க வேண்டும் என்ற தாத்பர்யத்தை அறிந்து முதலில் மறுத்த திருப்பாண் ஆழ்வார். எம்பெருமானின் சிறந்த அடியவரான லோக சாரங்க முனிவரின் வேண்டுகோளை மறுக்க மனமின்றி அவருடைய ஆசையை நிறைவேற்றித் தான் ஆக வேண்டும்; சிறந்த அடியவருடைய வேண்டுகோளை நாம் மறுக்கக் கூடாது என்ற கருத்தை நெஞ்சில் வைத்துக் கொண்டு லோக சாரங்க முனி தோளில் ஏறி திருவரங்கத்தை நோக்கி வருகிறார். அமலனாதி பிரான் பாசுரங்களைப் பாடிக் கொண்டே திருவரங்கத்திற்குள் வருகிறார். பெரிய பெருமாள் சந்நிதிக்கு எதிரே வந்த உடன் லோக சாரங்க முனியின் தோளில் இருந்து இறங்கி எம்பெருமானின் திருவடியை அடைந்து உய்வடைந்தார் என்று அறிகிறோம். இன்றைக்கும் திருப்பாண் ஆழ்வார் பரமபதம் அடைந்த போதும் அவர் எம்பெருமானின் திருவடிகளை அநுபவித்துக் கொண்டு இருப்பதாக ஐதீகம்.

பர, வியூக, விபவங்களின் மேன்மைகளைக் கூறாமல், 'உள்ளங்கை நெல்லிக் கனி' போல இங்கு, இப்பொழுது அனுபவிக்க கிடைக்கும் அர்ச்சாவதாரமாய் திருக்கண் வளர்ந்து அருளும் திருவரங்கனை அனுபவித்து பாடுகிறார். அரங்கனின் அருளே காரணமாக தனக்கு அவனிடம் அன்பு பெருக, அவன் தானே வந்து தன்னை காட்டித்தர, அவனது திவ்ய மங்கள விக்ரஹ திருமேனியை பாதாதி கேசம் அனுபவிக்கிறார்.

பிரபந்தத்தை தொடங்கும் பொழுதே பரமாத்மாவின் ஸ்வரூப நிரூபக தர்மங்களில் ஒன்றான அமலத்துவத்தை பேசுகிறார். அமலன் ஆதிபிரான் என்ற ஆரம்பித்து எம்பெருமானின் திருவடிகள் தாமே வந்து தம்மை அடிமை கொண்டது என்கிறார். திருவடிகளில் பதித்த தன் கண்கள் அங்கேயே நிலைத்து இருக்க, எம்பெருமானின் அரைச் சிவந்த ஆடை தன்னை கவர சிந்தனையில் லயித்த ஆழ்வாரை பிரஹ்மனை படைத்த திருநாபி தன் பக்கம் ஈர்த்தது, அடுத்து உதர பந்தம் தன் அழகை காட்ட, தாயார் ஏறி அமர்ந்த திருவார மார்பு தன்னை ஆட்கொண்டதை பேசுகிறார். அடுத்து ஸர்வ லோகத்தையும் உண்ட திருக்கழுத்து தன் அழகை காட்டி வசீகரிக்க, அடுத்து தித்தித்து இருக்கும் திருப்பவளச் செவ்வாய் ஆழ்வாரை ஈர்க்க, தன் மனதை பறி கொடுத்தார். இப்படி ஈடுபட்ட வந்த ஆழ்வாரை அவனது பரத்வத்தை காட்டி கொடுக்கக் கூடிய நீண்ட பெரிய வாய கண்கள் தன்னை பேதமை செய்ததாகக் கூறுகிறார். இப்படி ஒவ்வொரு அங்கமாக ஆழ்வாரை கவர, ஆழ்வார் அந்த அநுபவத்தில் திளைத்து இருக்க, எம்பெருமானின் எழில் திருமேனியின் முழுமையான அழகு தன்னை நிறை கொண்டது என்கிறார். இவ்வாறு பரம போக்கியமாய் நம்பெருமாளை கண்ட தனது கண்கள் வேறொன்றையும் காணாவே என்று பிரபந்தத்தை தலைகட்டி திருவரங்க நாதனின் திருவடிகளை அடைந்து ப்ரஹ்மானுபவத்தில் திளைக்கிறார்.  
----------
தனியன் 1
வ்ருச்சிகே ரோஹினி ஜாதம் 
ஸ்ரீ பாணம் நிகளாபுரே|
ஸ்ரீ வத்சாங்கம் காய கேந்த்ரம் 
முநி வாஹநம் ஆஸ்²ரயே||

தனியன் 2
ஆபாத³ சூட³ம் அநுபூ⁴ய ஹரிம் ஸ²யாநம்
மத்⁴யே கவே ரது³ ஹிதுர் முதி³தாந் தராத்மா|
அத்³ரஷ் ட்ருதாம் நயநயோர் விஷயாந் தராணாம்
யோ நிஸ்²சிகாய மநவை முநி வாஹநம் தம்||

தனியனின் விளக்கம்
இரண்டு ஆறுகளின் நடுவே அறிதுயில் கொண்ட அரங்கநாதனைத் திருவடி முதல் திருமுடி வரை அனுபவித்தப் பாடிய, லோக ஸாரங்க முனிவரால் தோள் மேல் சுமந்து அவனைக் கண்டு களித்து அவனைக் கண்டு களித்த கண்களால் இனி வேறொன்றும் காணேன் என்று அவன் திருவடி சேர்ந்த திருப்பாணாழ்வாரை த்யானிக்கிறோம்.

வாழி திருநாமம்
உம்பர் தொழும் மெய் ஞானத்து உறையூரான் வாழியே|
உரோகிணி நாள் கார்த்திகையில் உதித்த வள்ளல் வாழியே|
வம்பவிழ்தார் முனி தோளில் வந்த பிரான் வாழியே|
மலர்க்கண்ணை வேறொன்றில் வையாதான் வாழியே|
அம்புவியில் மதிள் அரங்கர்  அகம் புகுந்தான் வாழியே|
அமலனாதிபிரான் பத்தும் அருளினான் வாழியே|
செம்பொன் அடி முடியளவும் சேவிப்போன் வாழியே|
திருப்பாணன் பொற் பதங்கள் செகதலத்தில் வாழியே||

திருநாள் பாட்டு
கார்த்திகையில் ரோகிணி நாள்* 
காண்மின் இன்று காசினியீர்*
வாய்த்த புகழ்பாணர் வந்துதிப்பால்* 
ஆத்தியர்கள் அன்புடனே தான்* 
அமலனாதிபிரான் கற்றதர் பின்*
நன்குடனே கொண்டாடும் நாள்*

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

10. தொண்டரடிப்பொடி ஆழ்வார்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

  • அம்சம் - வைஜயந்தி (வநமாலை)
  • அவதார ஸ்தலம் - திருமண்டங்குடி
  • காலம் - கி.பி. 9ம் நூற்றாண்டு
  • வருடம் - பராபவ - கலி பிறந்து 284 ம் வருஷம்
  • மாதம் - மார்கழி
  • திரு நக்ஷத்திரம் - கேட்டை
  • திதி - தேய்பிறை சதுர்த்தசி
  • கிழமை - செவ்வாய்
  • ஆசார்யன் - ஸேனை முதலியார்
  • பரமபத ப்ராப்தி ஸ்தலம் - திருவரங்கம்
  • அருளிச் செய்தவை -                                                                                                    1. திருமாலை - முதலாம் ஆயிரம் - 872-916 (45 பாசுரங்கள்),                            2. திருப்பள்ளியெழுச்சி - முதலாம் ஆயிரம் - 917-926 (10 பாசுரங்கள்)
  • பாசுரங்கள் - 55

----------
மங்களாஸாஸநம் செய்த திவ்ய தேச 
ஸ்தலங்கள் - 4; பாசுரங்கள் - 58

  • திருவரங்கம் 55 பாசுரங்கள்
  • திரு அயோத்தி 1 பாசுரம்
  • திரு வடமதுரா 1 பாசுரம்
  • திருப்பாற்கடல் 1 பாசுரம்

----------
பிற பெயர்கள்
விப்ரநாராயணர், திருமண்டங்குடியார், பக்தாங்க்ரி ரேணு, பள்ளியுணர்த்திய பிரான்
----------
“திருமாலை அறியாதார் திருமாலையே அறியாதார்” என்று சொல்லக் கூடிய அளவிற்கு திருமாலை என்கிற ப்ரபந்தத்தைத் தெரிந்து கொள்ளாதவர்கள் திருமாலாகிய ஸ்ரீமந் நாராயணனைத் தெரிந்து கொள்ள முடியாது என்பது கூற்றாகும். எம்பெருமானுக்கு திருப்பள்ளி ழுச்சி பாடியவர்கள் வெகு சிலர். விஸ்வாமித்ர முனிவர் ஸ்ரீராம பிரானுக்கு திருப்பள்ளி ழுச்சி பாடினார் என்று அறிவோம். அதன் பின் தொண்டரடிப் பொடி ழ்வார் ஸ்ரீரங்கம் அரங்கநாதருக்குப் பாடியுள்ளார் என்று அறிகிறோம்.

இவர் ஸ்ரீரங்கநாதனைத் தவிர வேறு யாரையும் பாடாதவர். ஸ்ரீரங்கநாதன் ஒருவனையே அர்ச்சாவதாரத்தில் அனுபவித்தவர். இவருடைய ப்ரபந்தங்களில் முக்கியமாக திருமாலையில் நாம சங்கீர்த்தனத்தினுடைய ஏற்றம், அதாவது பெருமாளின் திவ்ய நாமங்களை எப்பொழுதும் நாம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும் என்ற வைபவம், மற்றும் எம்பெருமானிடம் எவ்வாறு சரணாகதி செய்வது என்ற விஷயம் தெளிவாக காட்டப்பட்டு உள்ளது.மேலும் அடியார்களை குலத்தைக் கொண்டோ, தனத்தைக் கொண்டோ, அவர்களுடைய ஞானத்தைக் கொண்டோ ஏற்றத் தாழ்வு பார்க்கக் கூடாது என்பதை தெளிவாக எடுத்துக் காட்டியவர்.

தொண்டரடிப்பொடி ஆழ்வார் தன் திருமாலை பிரபந்தத்தில் பிரளய காலத்தில் சகல லோகங்களையும் தன் உதரத்தில் வைத்து காத்து, ஸ்ருஷ்டி காலத்தில் வெளிப்படுத்திய ஜகத் காரணமான பகவானிடம் ஆசாரியரின் உபதேசம் மூலம் தான் கற்ற அவனது திருநாம பிரபாவத்தால் அடைந்த பேற்றை தெரிவிக்கிறார். உயர்ந்த திருநாம வைபவத்தை அறியாது மக்கள் யமனுக்கு ஆட்படுவதை நினைத்து தவிக்கிறார். பரவாசுதேவனை அன்றி வேறு எந்த தெய்வமும் தஞ்சம் இல்லை என்பதை அறிவுறுத்துகிறார். 'கிழங்கு எடுத்தால் அல்லது விடேன்' (கடைசி ஜீவனையும் கரை சேர்ப்பேன்) என்று மன்னிக் கிடந்திருக்கும் திருவரங்கனின் மேன்மைகளையும் அவனது பக்தர்களின் பெருமைகளையும் அனுபவிக்கிறார். ஸம்சாரம் என்னும் ஸர்ப்பத்தால் தீண்டப்பட்ட ஜீவனுக்கு ஆயுளையும், ஆனந்தத்தையும் கொடுக்கும் அருமருந்தாக இருப்பது எம்பெருமானின் திருநாமமே என்று அறுதியிட்டுக் கூறுகிறார். வாக்கினால் கைங்கரியம் புரிந்து 'புன் கவிதையேலும் எம்பிரார்க்கு இனியவாறே' என்று பகவானை ஏற்கும்படி பிரார்த்திக்கிறார்.

திருப்பள்ளி எழுச்சியில் விடியலின் சிறப்பையும் பகவானுடைய லீலைகளையும் அனுபவித்து தான் சரீரத்தால் செய்யும் புஷ்ப கைங்கர்யத்தை உகந்து அருளும்படி வேண்டி, தன்னை அடியவர்களுக்கு ஆட்படுத்தும்படி பிரார்த்திக்கிறார்.
----------
தனியன் 1
கோதண்டே ஜ்யேஷ்ட நக்ஷத்ரே 
மண்டங்குடி புரோத் பவம்| 
சோளோர் வ்யாம் வநமாலாம்ஸம் 
பக்த பத்ரேணு மாஸ்ரயே||

தனியன் 2
தமேவ மத்வா பரவாஸு தேவம் 
ரங்கே ஸ²யம் ராஜவதர் ஹணியம்|
ப்ராபோதிகீம் யோக்ருத ஸூக்தி மாலாம் 
பக்தாங்க்ரி ரேணும் பகவந்த மீடே||

தனியனின் விளக்கம்
ஸ்ரீ ரங்கநாதனைப் பரவாசு தேவனாகவே பாவித்து அவனை ஓர் அரசனை போல் மிகவும் நளினமாகத் துயிலெழுப்பிய தொண்டரரடிப் பொடி ஆழ்வாரைப் போற்றுகிறேன்.

வாழி திருநாமம்
மண்டங்குடி அதனில் வாழ வந்தோன் வாழியே|
மார்கழியில் கேட்டை நாள் வந்து உதித்தோன் வாழியே|
தெண்டிரை சூழ் அரங்கரையே தெய்வம் என்றான் வாழியே|
திருமாலை ஒன்பதஞ்சும் செப்பினான் வாழியே|
பண்டு திருப்பள்ளியெழுச்சி பத்து உரைத்தான் வாழியே|
பாவையர்கள் கலவிதனைப் பழித்த செல்வன் வாழியே|
தொண்டு செய்து துளபத்தால் துலங்கினான் வாழியே|
தொண்டரடிப்பொடியாழ்வார் துணைப் பதங்கள் வாழியே||

திருநாள் பாட்டு
மன்னிய சீர் மார்கழியில்* கேட்டை இன்று மாநிலத்தீர்*
என்னிதனுக்கு ஏற்றம் எனில் உரைக்கேன்* 
துன்னு புகழ் மாமறையோன்* 
தொண்டரடிப்பொடி ஆழ்வார் பிறப்பால்*
நான்மறையோர் கொண்டாடும் நாள்!

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

Sunday, 16 July 2023

9. ஸ்ரீ ஆண்டாள்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

  • அம்சம் - பூமாதேவி
  • அவதார ஸ்தலம் - திருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் நந்தவனத்தில் திருத்துழாய் மாடத்தின் அருகில் சுயம்பு
  • காலம் - கி.பி. 9ம் நூற்றாண்டு
  • வருடம் - நள
  • மாதம் - ஆடி
  • திரு நக்ஷத்திரம் - பூரம்
  • திதி - சுக்ல பக்ஷம் சதுர்த்தசி - கலி பிறந்து 98 ம் வருஷம்
  • கிழமை - செவ்வாய்
  • ஆசார்யன் - பெரியாழ்வார்
  • பரமபத ப்ராப்தி ஸ்தலம் - திருவரங்கம் 
  • அருளிச் செய்தவை -                                                                                                    1. திருப்பாவை - முதலாம் ஆயிரம் - 474-503 (30 பாசுரங்கள்),                      2. நாச்சியார் திருமொழி - முதலாம் ஆயிரம் - 504-646 (143 பாசுரங்கள்)
  • பாசுரங்கள் - 173

----------
மங்களாஸாஸநம் செய்த திவ்ய தேச 
ஸ்தலங்கள் - 11; பாசுரங்கள் - 71

  • திருவரங்கம் 11 பாசுரங்கள்
  • திருக்குடந்தை 1 பாசுரம்
  • திருக்கண்ணபுரம் 1 பாசுரம்
  • திருவில்லிபுத்தூர் 1 பாசுரம்
  • திருமாலிருஞ் சோலை 11 பாசுரங்கள்
  • திரு வடமதுரா 17 பாசுரங்கள்
  • திருவாய்ப்பாடி 5 பாசுரங்கள்
  • திரு துவாரகா 4 பாசுரங்கள்
  • திருவேங்கடம் 16 பாசுரங்கள்
  • திருப்பாற் கடல் 3 பாசுரங்கள்
  • திரு பரமப்பதம் 1 பாசுரம்

----------
பிற பெயர்கள்
கோதை, சூடி கொடுத்த நாச்சியார்
----------
கோதை நாச்சியார் என்று கொண்டாடப்படுபவள் ஆண்டாள். பெரியாழ்வாருக்குப் பெண்பிள்ளையாக ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்தவள். பூமிப் பிராட்டியின் அவதாரம். எம்பெருமானிடத்து இயற்கையான அன்பு கொண்டவள். பத்தினி என்ற உறவை உடையவள். ஆண்டாள் நாச்சியாரும் க்ருஷ்ணாவதாரத்தில் மிகவும் ஊன்றியவள். அனைவருடைய உஜ்ஜீவனத்திற்காகவும் இந்த உலகத்தில் அவதரித்து எல்லோருக்கும் நன்மையை தேடிக் கொடுத்தவள்.  இந்த உலகத்தில் உள்ள சேதநர்கள் அனைவரும் எம்பெருமானுடைய திருநாமங்களைப் பாடி உஜ்ஜீவனத்தை அடைய வேண்டுமென்று திருப்பாவையை அருளிச் செய்தவள். “பிஞ்சாய்ப் பழுத்தாளை, ஆண்டாளை நாளும் வழுத்தாய் மனமே மகிழ்ந்து” என்று மணவாள மாமுநிகள் உபதேச ரத்தின மாலையில் கொண்டாடுகிறார்.  “சூடிக்கொடுத்த சுடர்க்கொடி” என்றும் பெயர் பெற்றவள். பெரியாழ்வார் தொடுத்து வைத்திருந்த மாலையைத் தான் சூடி எம்பெருமானுக்கு அதற்குப் பிறகு கொடுத்தவள். 

வேதமனைத்துக்கும் வித்தாக விளங்கும் திருப்பாவையில் 'ஏல் ஓர் எம்பாவாய்' என்ற சொற்றொடரால், "தோழி! இதன் பொருளைத் தெரிந்து கொண்டு ஏற்றுக்கொள்" என்று ஆண்டாள் அறிவுறுத்துகிறாள். திருப்பாவையில் அன்றாட வாழ்விற்குத் தேவையான எண் குறிப்பு, நாள் குறிப்பு, திசை குறிப்பு போன்றவற்றைக் காட்டித் தருவதோடு அல்லாமல் இந்த ஆத்மா உய்வடையும் பொருட்டு பலபல உபாயங்களையும் காட்டித் தருகிறாள். வைணவ லக்ஷணத்தின் குறிப்பு, ஸம்ப்ராயத்தில் அனுஷ்டிக்கும் பஞ்ச சம்ஸ்காரம் பற்றிய குறிப்பு, எம்பெருமானின் தசாவதாரக் குறிப்பு என்று அநேக விஷயங்கள் கொட்டி கிடக்கும் ஒரு பொக்கிஷமாக திகழ்கிறது. மேலும் நாம் முக்கியமாக அறிய வேண்டிய அர்த்த பஞ்சகத்தின் பொருள், ஸம்பிரதாய விசேஷ அர்த்தங்கள், ரஹஸ்ய அர்த்தங்கள் என்று ஸகல உபநிஷத்துக்களின் ஸாரமாக மிளிர்கிறது. நாம் உள்ளவரையும் மார்கழி மாத உபன்யாசங்களில் புதுப்புது அர்த்தங்களைக் கேட்டு இன்புறலாம்.

நாச்சியார் திருமொழியில் மன்மதனிடம், கண்ணன் தன்னை வந்தடையும்படி நீயே செய்ய வேண்டும் என்று வேண்டுகிறாள். அனைத்து கோபியர்களும் சேர்ந்து கண்ணனை தங்கள் மனக்கோயிலில் குடியேறும்படி வேண்டுகின்றனர். கண்ணன் அவர்களுடன் விளையாடுதல், அவன் தங்களுடன் கூடுவானா என்று குறிப்பு பார்த்தல், அவன் தன்னை கூடும்படி குயிலை கூவுமாறு வேண்டுதல் என்று பலபடி ஏங்க, கண்ணன் தன்னை வந்து மணப்பதாக கனவு கண்டு தோழிகளிடம் சொல்கிறாள் ஆண்டாள்.

தான் கண்டது கனவாகி விட்டதே! என்று கலங்கி அவன் திருக்கையிலிருக்கும் சங்கினிடம் அவன் திருப்பவளச் செவ்வாய் இருக்கும் தித்திப்பை சொல்லும்படி கேட்கிறாள். அவன் பிரிவை தாங்க மாட்டாமல் மேகத்தை தூது விடுகிறாள். பார்க்கும் எல்லா வஸ்துக்களிடமும் முறையிட்டு, தான் திருவரங்கனிடம் கொண்டுள்ள தீராக் காதலை தெரியப்படுத்துகிறாள். அவன் அருள் புரியாததால் அவன் இருக்கும் இடத்தில் தன்னைச் சேர்த்து விடும்படி வேண்டுகிறாள். எம்பெருமான் ஸம்பந்தப்பட்ட வஸ்துக்களை கொண்டு தன் தாகத்தை தீர்க்கும் படி வேண்டுகிறாள். கடைசியாக அவனுடைய பெருமைகளை எடுத்துக் கூறி இப்படிப்பட்டவனை கண்டீரோ கண்டீரோ எனக் கேட்க, ஆம் பிருந்தாவனத்தில் கண்டோம்! என்று பதில் கிடைக்கப் பெற்று பிரபந்தத்தை முடிக்கிறாள்.
----------
தனியன் 1
கர்க்கடே பூர்வ பல்குந்யாம் 
துளஸீ காந நோத் பவாம்|
பாண்ட்ய விஸ்வம் பராம் கோதாம் 
வந்தே ஸ்ரீ ரெங்க நாயகீம்||

தனியன் 2
நீளா துங்க³ ஸ்தந கி³ரி தடீ* 
ஸுப்தம் உத்³போ³த்⁴ய க்ருக்ஷ்ணம்*|
பாரார்த்²யம் ஸ்வம் ஸ்²ருதி ஸ²த ஸி²ரஸ்* 
ஸித்³த⁴ம் அத்⁴யா பயந்தீ*||
ஸ்வோச் சி²ஷ்டாயாம் ஸ்ரஜி நிக³ளிதம்* 
யா ப³லாத் க்ருத்ய பு⁴ங்க்தே*|
கோ³தா³ தஸ்யை நம இத³ம் இத³ம்* 
பூ⁴ய ஏ வாஸ்து பூ⁴யஹ||

தனியனின் விளக்கம்
நீளா தேவியின் திருமார்பில் தலை வைத்துறங்கும் கண்ணன் எம்பெருமானை, பாரதந்தர்யம் உணர்த்தும் வகையில் துயிலுணர்த்துபவள், எம்பெருமானுக்கே தான் சூடிக் களைந்த மாலையை அவன் விரும்பியபடி சமர்ப்பித்தவள் திருவடிகளை மீண்டும் மீண்டும் தொழுகிறேன்.

வாழி திருநாமம்
1. திருவாடிப்பூரத்து செகத்து உதித்தாள் வாழியே|
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே|
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே|
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே|
ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே|
உயர் அரங்கற்கே கண்ணி உகந்து அளித்தாள் வாழியே|
மருவாரும் திருமல்லி வளநாடி வாழியே|
வண்புதுவை நகர்க் கோதை மலர்ப் பதங்கள் வாழியே||

வேதப்பிரான் பட்டர் அருளிச் செய்தவை
2. கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழுமூர்
சோதி மணி மாடம் தோன்றும் ஊர்
நீதியால் நல்ல பத்தர் வாழும் ஊர் நான்மறைகள் ஓதுமூர்
வில்லிபுத்தூர் வேதக் கோனூர்|

3. பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடிகாட்டும்
வேதம் அனைத்துக்கும் வித்தாகும்
கோதை தமிழ் ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பது வம்பு|

4. கமலமுடன் வில்லிபுத்தூர் விளங்க வந்தாள் வாழியே|
காரார் நற்றுழாய்க் கானத்து அவதரித்தாள் வாழியே|
விமலமாம் திருவாடிப் பூரத்தாள் வாழியே|
விட்டு சித்தன் வளர்தெடுத்த இளங்கிழையாள் வாழியே|
அமலத் திருப்பாவை ஐயாறு அளித்து அருள்வாள் வாழியே|
ஆக நூற்றி எழுபத்தி மூன்று உரைத்தாள் வாழியே|
அமுதனாம் அரங்கனுக்கே மாலை இட்டாள் வாழியே|
ஆண்டாள் தம் இணை அடிகள் அநவரதம் வாழியே||

திருநாள் பாட்டு
1. இன்றோ திருவாடிப்பூரம்* எமக்காக அன்றோ
இங்கு ஆண்டாள் அவதரித்தாள்* 
குன்றாத வாழ்வாக* வைகுந்த வான் போகம் தன்னை இகழ்ந்து*
ஆழ்வார் திருமகளாராய்|

2. பெரியாழ்வார் பெண் பிள்ளையாய்* ஆண்டாள் பிறந்த*
திருவாடிப் பூரத்தின் சீர்மை* 
ஒரு நாளைக்கு உண்டோ* மனமே! உணர்ந்துப் பார்* 
ஆண்டாளுக்கு உண்டாகில் ஒப்பு இதற்கும் உண்டு|

3. அஞ்சுக் குடிக்கொரு சந்ததியாய்* ஆழ்வார்கள் தன் செயலை* 
விஞ்சி நிற்கும் தன்மையளாய்* 
பிஞ்சாய்ப் பழுத்தாளை ஆண்டாளைப்* பத்தியுடன் நாளும்*
வழுத்தாய் மனமே மகிழ்ந்து|

மங்கள ஸ்லோகம்
ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தந ஹேதவே|
நந்த நந்தந ஸுந்தர்யை கோதாயாஇ நித்ய மங்களம்||

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

8. பெரியாழ்வார்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

  • அம்சம் - கருடாழ்வார்
  • அவதார ஸ்தலம் - திருவில்லிபுத்தூர்
  • காலம் - கி.பி. 9ம் நூற்றாண்டு
  • வருடம் - குரோதன - கலி பிறந்து 47 ம் வருஷம்
  • மாதம் - ஆனி
  • திரு நக்ஷத்திரம் - ஸ்வாதி
  • திதி - சுக்ல பக்ஷம் ஏகாதசி
  • கிழமை - ஞாயிறு
  • தந்தை - முகுந்தர்
  • தாய் - பதுமவல்லி
  • ஆசார்யன் - ஸேனை முதலியார்
  • பரமபத ப்ராப்தி ஸ்தலம் - திருமாலிருஞ்சோலை
  • அருளிச் செய்தவை -                                                                                                  1. திருப்பல்லாண்டு - முதலாம் ஆயிரம் - 1-12 (12 பாசுரங்கள்),                  2. பெரியாழ்வார் திருமொழி - முதலாம் ஆயிரம் - 13-473 (461 பாசுரங்கள்)
  • பாசுரங்கள் - 473

----------
மங்களாஸாஸநம் செய்த திவ்ய தேச 
ஸ்தலங்கள் - 19; பாசுரங்கள் - 179

  • திருவரங்கம்              37 பாசுரங்கள்
  • திருவெள்ளறை      11 பாசுரங்கள்
  • திருப்பேர்நகர்              2 பாசுரங்கள்
  • திருக்குடந்தை              3 பாசுரங்கள்
  • திருக்கண்ணபுரம்      1 பாசுரம்
  • திருக்குறுங்குடி      1 பாசுரம்
  • திருவில்லிபுத்தூர்      1 பாசுரம்
  • திருமாலிருஞ் சோலை      34 பாசுரங்கள்
  • திருக்கோஷ்டியூர்      22 பாசுரங்கள்
  • திரு அயோத்தி               6 பாசுரங்கள்
  • திருக்கண்டமெனும் கடிநகர் 11 பாசுரங்கள்
  • திருவதரியாஷ்ரமம்       1 பாசுரம்
  • திருசாளக்கிராமம்               2 பாசுரங்கள்
  • திரு வடமதுரா               16 பாசுரங்கள்
  • திருவாய்ப்பாடி       10 பாசுரங்கள்
  • திரு துவாரகா               5 பாசுரங்கள்
  • திருவேங்கடம்               7 பாசுரங்கள்
  • திருப்பாற் கடல்       5 பாசுரங்கள்
  • திரு பரமப்பதம்       4 பாசுரங்கள்

----------
பிற பெயர்கள்
விஷ்ணுசித்தர், பட்ட நாதன், பட்டர் பிரான், ஸ்ரீ வில்லிபுத்தூரார், ஸ்ரீரங்கநாத ஸ்வசூரர் 
----------
எம்பெருமானுடைய நியமனத்தின் பேரில் பாண்டியன் சபையில் பரதத்துவ நிர்ணயம் செய்யவும் பகவான் ப்ரீதி மேலிட்டு தன் பரிவாரங்களுடன் ஆகாய மார்க்கமாக வந்து காட்சி கொடுக்க, நித்யவிபூதி நாதனின் திவ்ய மங்கள திருமேனி அழகில் ஸம்சாரிகளின் திருஷ்டி பட்டு, அவனுக்கு என்ன தீங்கு நேருமோ! என்று கலங்கி பொங்கும் பரிவுடன் பகவானுக்கு காப்பாக திருப்பல்லாண்டு பாடுகிறார். தான் மங்களாசாஸனம் செய்யும் பொழுது பகவானை அடைய விரும்பும் அனைத்து தரப்பு மக்களையும் பல்லாண்டு பாட அழைக்கிறார்.

ஸ்ரீக்ருஷ்ணன் அவதரித்த காலந்தொட்டு அக்குழந்தைக்கு உண்டான பல பல அபாயங்கள் காரணமாக அவனிடமே மனம் ஈடுபட, தானே யசோதையாக மாறி அனுதினமும் அவனது பால லீலைகளை அனுபவித்து பாசுரம் பாடுகிறார். அவனது குழலோசைக்கு தேவ, மனுஷ்ய, திர்யக், ஸ்தாவரங்கள் அனைத்தும் மயங்குவதைக் கண்டு நெகிழ்கிறார். ஸ்ரீக்ருஷ்ணாநுபவத்துடன் ஸ்ரீராமபிரானையும் அனுபவிக்கும் விருப்பத்துடன் சிறிய திருவடி அசோகவனத்தில் ஸீதாபிராட்டியைக் கண்டு அடையாள மோதிரத்தை கொடுத்து விண்ணப்பம் செய்த அடையாளங்களை அனுபவிக்கிறார்.

இந்த சரீரத்தை விட்டு ஆத்மா கிளம்பும் சமயம் வாதம், பித்தம் போன்றவை துன்புறுத்தும் பொழுது பகவானே! உன்னை நினைக்க மாட்டேன், அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் என்று பகவான் திருவாய் மலர்ந்தருளிய வராஹ சரம ஸ்லோகத்தின்படி செய்து காட்டுகிறார்.

எம்பெருமானைப் பார்த்து நன்றாக இருக்க வேண்டும் என்று மிகுந்த அன்புடன் / மிகுந்த பரிவுடன் வாழ்த்தியவர். மற்றைய ஆழ்வார்களுக்கும் பெரியாழ்வாருக்கும் ஒரு பெரிய வித்தியாசம் என்னவென்றால் ஏனைய ஆழ்வார்கள் எம்பெருமானை பார்க்கும் பொழுது ‘எனக்கு இந்த சம்சாரம் மிகவும் சிரமமாக இருக்கிறது, என்னை இங்கிருந்து விடுவித்து மோட்சத்துக்கு அழைத்துக் கொண்டு போ’ என்று ப்ரார்த்திப்பார்கள். ஆனால் பெரியாழ்வாரோ எம்பெருமான் எதிரே வந்த பொழுது ‘இந்த சம்சாரத்தில் நீ வந்து விட்டாயே! உனக்கு ஏதாவது கேடு வந்து விடப்போகிறது!’ என்று பயந்தவர். அவர் எம்பெருமானுடைய பரத்வத்தை நிர்ணயம் செய்து இருந்தாலும் அந்த சமயத்தில் எம்பெருமானுடைய ஸௌகுமார்யத்தை மனதில் கொண்டு, கண்கள் கொண்டு காண முடியாத அழகு / மென்மை போன்ற குணங்கள் கொண்டவன்; இந்த உலகத்தில் உதித்திருக்கிறானே! எவ்வளவு ஆபத்துக்கள் நிறைந்த உலகமிது! என்று பயந்து எம்பெருமான் நன்றாக இருக்கவேண்டும் என்று மங்களாசாசனம் செய்தவர்.
----------
தனியன்
கு³ருமுக²ம் அநதீ⁴த்ய 
ப்ராஹ வே³தாந் அஸே²ஷாந்* 
நரபதி பரிக்லுப்தம் 
ஸு²ல்கம் ஆதா³து காம:*
ஸ்²வஸு²ரம் அமர வந்த்³யம் 
ரங்க³ நாத²ஸ்ய ஸாக்ஷாத்* 
த்³விஜ குல திலகம் தம் 
விஷ்ணு சித்தம் நமாமி|

தனியனின் விளக்கம்
ஒரு குருவிடமும் பயிலாது எம்பெருமான் க்ருபையினாலேயே அனைத்து வேதங்களையும் அறிந்து வேத சாரங்களை சொல்லிப் பரத்வ ஸ்தாபநம் பண்ணிய அந்தணர் தலைவர், ஆண்டாளின் தமப்பனார், திருவரங்க நாதனுக்கே மாமனார் ஆகிய பெரியாழ்வாரை அடி பணிகிறேன்.

வாழி திருநாமம்
நல்ல திருப்பல்லாண்டு நான்மூன்றோன் வாழியே|
நானூற்றி அறுபத்தி ஒன்றும் நமக்கு உரைத்தான் வாழியே|
சொல்ல அரிய ஆனி தனில் சோதி வந்தான் வாழியே|
தொடை சூடிக் கொடுத்தாள் தன் தொழும் அப்பன் வாழியே|
செல்வ நம்பி தனைப் போலச் சிறப்பு உற்றான் வாழியே|
சென்று கிழி அறுத்து மால் தெய்வம் என்றான் வாழியே|
வில்லிபுத்தூர் நகரத்தை விளங்க வைத்தான் வாழியே|
வேதியர் கோன் பட்டர்பிரான் மேதினியில் வாழியே||

திருநாள் பாட்டு
1. இன்றைப் பெருமை அறிந்திலையோ* ஏழை நெஞ்சே!*
இன்றைக்கென் ஏற்றமெனில் உரைக்கேன்*
நன்றி புனை பல்லாண்டு பாடிய* 
நம் பட்டர்பிரான் வந்துதித்த* நல்லானியில் சோதி நாள்|

2. மாநிலத்தில் முன்னம்* பெரியாழ்வார் வந்துதித்த*
ஆனி தன்னில் சோதி நாள் என்றால் ஆதரிக்கும்* 
ஞானியருக்கு ஒப்பொருவர் இலை* 
இவ்வுலகு தனில் என்று நெஞ்சே* எப்பொழுதும் சிந்தித்திரு|

3. மங்களாசாசனத்தில்* மற்றுள்ள ஆழ்வார்கள்*
தங்கள் ஆர்வத்தளவு தானன்றி* பொங்கும் பரிவாலே* 
வில்லிபுத்தூர் பட்டர்பிரான் பெற்றான்*
பெரியாழ்வார் என்னும் பெயர்|

4. கோதிலவாம் ஆழ்வார்கள்* கூறு கலைக்கெல்லாம்*
ஆதி திருப்பல்லாண்டு ஆனதுவும்* 
வேதத்துக்கு ஓம் என்னும் அது போல்* 
உள்ளதுக்கெல்லாம் சுருக்காய்த்* தான் மங்களம் ஆதலால்|

5. உண்டோ திருப்பல்லாண்டுக்கு* ஒப்பதோர் கலை தான்*
உண்டோ பெரியாழ்வாருக்கு ஒப்பொருவர்?* 
தண்டமிழ் நூல் செய்தருளும் ஆழ்வார்கள் தம்மில்* 
அவர் செய்கலையில்* பைதல் நெஞ்சே நீ உணர்ந்து பார்|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்