About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Friday, 16 February 2024

ஸ்ரீமத் பாகவத புராணம் - 57

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

விதுர மைத்ரேய ஸம்வாதம் - 2

ஸ்கந்தம் 03

விராட்புருஷனின் தோற்றம்’ உலகனைத்திற்கும் நலம் பயக்கும் கேள்விகளை விதுரர் கேட்டார். மைத்ரேயர் சொல்லத் துவங்கினார்.

“விதுரரே, தங்கள் மனம் எப்போதும் இறைவனின் திருவடியிலேயே லயித்திருப்பதால் உலகிற்கே நலம் தரும் கேள்விகளைக் கேட்டீர். இவற்றால் தங்கள் புகழ் மேலும் ஓங்கப் போகிறது. 


வியாசரின் சகோதரன் விசித்ர வீர்யன். அவர்களிருவருக்கும் தாய் ஸத்யவதி. விசித்ர வீர்யனின் மனைவியாய் இருந்த பணிப்பெண்களுள் ஒருத்தியின் வயிற்றில் வியாசரின் அருளால் அவதரித்தீர். நீங்கள் அவரவர் செய்வினைகளுக்கு ஏற்ப தண்டனையருளும் யமதர்ம ராஜனின் அம்சமாவீர். ஆணி மாண்டவ்ய ரிஷியின் சாபத்தால் இவ்வுலகில் பிறந்தீர். தாங்கள் பகவான் க்ருஷ்ணனுக்கு மிகவும் ப்ரியமானவர். பகவான் தான் வைகுண்டம் செல்லும் சமயம் தங்களுக்கு ஞானோபதேசம் செய்யுமாறு என்னிடம் கூறிச் சென்றார்.

பகவானின் திருவிளையாடல்களில் முக்கியமான படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றைப் பற்றிக் கூறுகிறேன்.” என்று சொல்லி, “பகவான் தனித்திருப்பத்தையும், பின்னர் தன் மாயா சக்தியால் முக்குணங்களைத் தோற்றுவித்ததையும், அவைகளில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வினால் தன் அம்சத்தை அதனுள் புகுத்தி சமன் செய்ததையும் கூறினார். அதுவே ஜீவன் ஆகும். பின்னர் மஹத் தத்வம், ஐம்பெரும் பூதங்கள், பத்து புலன்கள், மனம், அஹம் எனும் தத்வம் ஆகியவற்றின் தோற்றம், தன்மை, குணங்கள் ஆகியவற்றை விரிவாகச் சொன்னார். தொடு உணர்ச்சி, வாயு, ஒளி, அக்னி, சுவை, நீர், மணம், மண் ஆகியவற்றின் தோற்றங்களும் விளக்கப்பட்டன. இவை அனைத்தும் தனித்தனியாக இருந்தமையால் ப்ரபஞ்சம் உருவாகவில்லை. தேவர்களின் ப்ரார்த்தனைக்கிணங்கி, பகவான் அவற்றினுள் அந்தர்யாமியாக நுழைந்து தன் க்ரியா சக்தியால் அவற்றின் செயல்பாடுகளைத் தூண்டி விட்டார். 

இருபத்து மூன்று தத்வங்களும் ஒன்றிணைந்து விராட் புருஷனைத் தோற்றுவித்தன. அதுவே பகவானின் முதல் அவதாரம். இவரிடமிருந்தே அனைத்து ஜீவன்களும் தோன்றின. விராட் புருஷன் உணர்வு கொண்டதும் அவரது அங்கங்களில் இருந்து சகல தேவதைகளும் தோன்றினர். அவருடைய உருவம், ஸ்தானம், லோகங்கள் ஆகியவற்றை விரிவாக விளக்கினார் மைத்ரேயர். (இரண்டாவது ஸ்கந்தத்தில் நாம் இவற்றை விரிவாகப் பார்த்தபடியால், இங்கே குறிப்பு மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.)

மைத்ரேயர் மேலும் கூறினார். “விதுரரே, காலம் தர்மம் இவற்றோடு கூடி யோக மாயையின் பெருமையை வெளிப் படுத்துபவர் இந்த விராட் புருஷன். இவரது ஸ்வரூபத்தை முழுமையாக எவராலும் வர்ணிக்க இயலாது. மனம் போனபடி உலக விஷயங்களைப் பேசி பேசித் தூய்மையை இழந்து விட்ட என் நாவைத் தூய்மைப்படுத்துவதற்காகவே, என் குரு உபதேசம் செய்தவற்றை என் சிற்றறிவிற்கு எட்டியவரை உமக்குச் சொல்கிறேன். கேளும்.” என்றார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment