About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 28 February 2024

லீலை கண்ணன் கதைகள் - 107

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

கிருஷ்ணரின் முடிவு |

கிருஷ்ணர் இருந்த இடம் பக்கமாக அப்பொழுது ஜரை என்ற வேடன் ஒருவன் சென்றுக் கொண்டிருந்தான். கிருஷ்ணரின் ரோஜா வர்ணமுள்ள பாதங்களைப் பார்த்துவிட்டு, அது ஒரு பறவை என்று அவன் நினைத்தான். அதைக் குறிபார்த்து அம்பினால் அடித்தான். அந்த அம்பு மீனின் வயிற்றிலிருந்து கிடைத்த இரும்புத் துண்டினால் ஆனது. 


இறந்த பறவை இருக்கும் என்று வேடன் அங்கே ஓடி வந்தான். ஆனால் கிருஷ்ணர் தரையில் கிடந்தார். தான் செய்த தவறை நினைத்து வேடன் நடுநடுங்கினான். 

அவன் கிருஷ்ணரின் காலில் விழுந்து, "பிரபு என்னை அறியாமல் நான் தங்களுக்கு தீங்கு இழைத்து விட்டேன். நான் செய்தது மன்னிக்க முடியாத குற்றம். இந்தப் பாவத்தை நான் எப்படிப் போக்குவது என்று சொல்லுங்கள்" என்று வேண்டினான். 

கிருஷ்ணர் சிரித்தார். "எனக்கு உன்மீது சிறிது கூட கோபம் கிடையாது, நீ எனக்கு செய்துள்ள தொண்டை நான் பாராட்டுகிறேன். நீ சொர்க்கம் செல்ல வேண்டும் என்று அருள் புரிகிறேன்" என்று வாழ்த்தினார். 

கிருஷ்ணரின் வார்த்தைகளால் ஆறுதல் அடைந்த ஜரை அவரை மூன்று முறை வலம் வந்து, பிறகு அவரை நமஸ்கரித்து விட்டு வீடு திரும்பினார். 

கிருஷ்ணரின் சாரதியான தாருகன் கிருஷ்ணரைத் தேடிக் கொண்டிருந்தான். கிருஷ்ணர் அணிந்திருந்த துளசி மாலையின் மணம் அவனை அவர் இருக்கும் இடத்துக்கு இழுத்தது. தன் யஜமானர் தரையில் கிடப்பதைப் பார்த்து, அவர் பக்கம் ஓடினார். 

அவனைப் பார்த்த கிருஷ்ணர், "தாருகா! எதையும் பேசுவதற்கு இப்பொழுது நேரம் இல்லை. யாதவர்கள் தங்களிடையே சண்டை போட்டுக் கொண்டு அழிந்து விட்டார்கள் என்றும், பலராமரும் மறைந்து விட்டார் என்றும், உறவினர்களிடம் சொல். நானும் சீக்கிரமே இந்த உடலை விட்டு போகப் போகிறேன். இனி நீங்களோ அல்லது என் உறவினர்களோ துவாரகையில் தங்கக் கூடாது. ஏனெனில், யாதவர்கள் இருந்த இந்த நகரம் கடலால் கொள்ளப்படும். நீங்கள் எல்லோரும் இந்திரப்பிரஸ்தம் சென்று அர்ஜுனன் ஆதரவில் இருங்கள்" என்று கூறினார். 

என்ன செய்வது என்று தெரியாமல் தாருகன் விம்மி விம்மி அழுதான். கிருஷ்ணரை மூன்று தடவை வலம் வந்து அவரை வணங்கினான். பிறகு அவன் வருத்தத்தோடு நகர் திரும்பினான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment