About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்
Showing posts with label 040 திருச்சித்திரகூடம். Show all posts
Showing posts with label 040 திருச்சித்திரகூடம். Show all posts

Wednesday, 26 November 2025

108 திவ்ய தேசங்கள் - 040 - திருச்சித்திரகூடம் - 4

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||040. திருச்சித்திரகூடம்||
||சிதம்பரம்||
||நாற்பதாவது திவ்ய க்ஷேத்ரம்||

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 32 - 2

திருமங்கையாழ்வார்
017. திவ்ய ப்ரபந்தம் - 1163 - பெரிய திருமொழி - 3.2.6
நெய் வாய் அழல் அம்பு துரந்து* 
முந்நீர் துணியப் பணி கொண்டு அணி ஆர்ந்து* 
இலங்கு மை ஆர் மணிவண்ணனை எண்ணி* 
நும் தம் மனத்தே இருத்தும்படி வாழவல்லீர்*
அவ் வாய் இள மங்கையர் பேசவும்* 
தான் அரு மா மறை அந்தணர் சிந்தை புக*
செவ் வாய்க் கிளி நான்மறை பாடு* 
தில்லைத் திருச்சித்ர கூடம் சென்று சேர்மின்களே|

018. திவ்ய ப்ரபந்தம் - 1164 - பெரிய திருமொழி - 3.2.7
மௌவல் குழல் ஆய்ச்சி மென் தோள் நயந்து*
மகரம் சுழலச் சுழல் நீர் பயந்த*
தெய்வத் திரு மா மலர் மங்கை தங்கு*
திருமார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர்*
கௌவைக் களிற்றின் மருப்பும் பொருப்பில்*
கமழ் சந்தும் உந்தி நிவா வலம் கொள்*
தெய்வப் புனல் சூழ்ந்து அழகு ஆய* 
தில்லைத் திருச்சித்ர கூடம் சென்று சேர்மின்களே|

019. திவ்ய ப்ரபந்தம் - 1165 - பெரிய திருமொழி - 3.2.8
மா வாயின் அங்கம் மதியாது கீறி*
மழை மா முது குன்று எடுத்து* 
ஆயர் தங்கள் கோ ஆய் நிரை மேய்த்து உலகு உண்ட மாயன்*
குரை மா கழல் கூடும் குறிப்பு உடையீர்*
மூவாயிரம் நான்மறையாளர்* 
நாளும் முறையால் வணங்க அணங்கு ஆய சோதி*
தேவாதி தேவன் திகழ்கின்ற* 
தில்லைத் திருச்சித்ர கூடம் சென்று சேர்மின்களே|

020. திவ்ய ப்ரபந்தம் - 1166 - பெரிய திருமொழி - 3.2.9
செரு நீல வேல் கண் மடவார் திறத்துச்*
சினத்தோடு நின்று மனத்தால் வளர்க்கும்*
அரு நீல பாவம் அகலப் புகழ் சேர்*
அமரர்க்கும் எய்தாத அண்டத்து இருப்பீர்*
பெரு நீர் நிவா உந்தி முத்தம் கொணர்ந்து* 
எங்கும் வித்தும் வயலுள் கயல் பாய்ந்து உகள*
திரு நீலம் நின்று திகழ்கின்ற* 
தில்லைத் திருச்சித்ர கூடம் சென்று சேர்மின்களே|

021. திவ்ய ப்ரபந்தம் - 1167 - பெரிய திருமொழி - 3.2.10
தில்லைத் திருச்சித்ர கூடத்து உறை செங் கண் மாலுக்கு*
ஆராத உள்ளத்தவர் கேட்டு உவப்ப*
அலை நீர் உலகுக்கு அருளே புரியும்*
கார் ஆர் புயல் கைக் கலிகன்றி* 
குன்றா ஒலி மாலை ஓர் ஒன்பதோடு ஒன்றும் வல்லார்*
பார் ஆர் உலகம் அளந்தான் அடிக்கீழ்ப்*
பல காலம் நிற்கும்படி வாழ்வர் தாமே|

022. திவ்ய ப்ரபந்தம் - 1168 - பெரிய திருமொழி - 3.3.1
வாட மருது இடை போகி* மல்லரைக் கொன்று ஒக்கலித்திட்டு*
ஆடல் நல் மா உடைத்து* ஆயர் ஆநிரைக்கு அன்று இடர் தீர்ப்பான்*
கூடிய மா மழை காத்த* கூத்தன் என வருகின்றான்*
சேடு உயர் பூம் பொழில் தில்லைச்* சித்திர கூடத்து உள்ளானே|

023. திவ்ய ப்ரபந்தம் - 1169 - பெரிய திருமொழி - 3.3.2
பேய் மகள் கொங்கை நஞ்சு உண்ட* பிள்ளை பரிசு இது என்றால்*
மா நில மா மகள்* மாதர் கேள்வன் இவன் என்றும்* 
வண்டு உண் பூமகள் நாயகன் என்றும்* புலன் கெழு கோவியர் பாடி*
தே மலர் தூவ வருவான்* சித்திர கூடத்து உள்ளானே|

024. திவ்ய ப்ரபந்தம் - 1170 - பெரிய திருமொழி - 3.3.3
பண்டு இவன் வெண்ணெய் உண்டான் என்று* ஆய்ச்சியர் கூடி இழிப்ப*
எண் திசையோரும் வணங்க* இணை மருது ஊடு நடந்திட்டு*
அண்டரும் வானத்தவரும்* ஆயிரம் நாமங்களோடு*
திண் திறல் பாட வருவான்* சித்திர கூடத்து உள்ளானே|

025. திவ்ய ப்ரபந்தம் - 1171 - பெரிய திருமொழி - 3.3.4
வளைக் கை நெடுங்கண் மடவார்* ஆய்ச்சியர் அஞ்சி அழைப்ப*
தளைத்து அவிழ் தாமரைப் பொய்கைத்* தண் தடம் புக்கு அண்டர் காண*
முளைத்த எயிற்று அழல் நாகத்து* உச்சியில் நின்று அது வாட*
திளைத்து அமர் செய்து வருவான்* சித்திர கூடத்து உள்ளானே|

026. திவ்ய ப்ரபந்தம் - 1172 - பெரிய திருமொழி - 3.3.5
பருவக் கரு முகில் ஒத்து* முத்து உடை மா கடல் ஒத்து*
அருவித் திரள் திகழ்கின்ற* ஆயிரம் பொன்மலை ஒத்து*
உருவக் கருங் குழல் ஆய்ச்சிதிறத்து* இன மால் விடை செற்று*
தெருவில் திளைத்து வருவான்* சித்திர கூடத்து உள்ளானே|

027. திவ்ய ப்ரபந்தம் - 1173 - பெரிய திருமொழி - 3.3.6
எய்யச் சிதைந்தது இலங்கை மலங்க* வரு மழை காப்பான்*
உய்யப் பரு வரை தாங்கி* ஆநிரை காத்தான் என்று ஏத்தி*
வையத்து எவரும் வணங்க* அணங்கு எழு மா மலை போல*
தெய்வப் புள் ஏறி வருவான்* சித்திர கூடத்து உள்ளானே|

028. திவ்ய ப்ரபந்தம் - 1174 - பெரிய திருமொழி - 3.3.7
ஆவர் இவை செய்து அறிவார்?* அஞ்சன மா மலை போல*
மேவு சினத்து அடல் வேழம்* வீழ முனிந்து* 
அழகு ஆய காவி மலர் நெடுங் கண்ணார்* கை தொழ வீதி வருவான்* 
தேவர் வணங்கு தண் தில்லைச்* சித்திர கூடத்து உள்ளானே|

029. திவ்ய ப்ரபந்தம் - 1175 - பெரிய திருமொழி - 3.3.8
பொங்கி அமரில் ஒருகால்* பொன் பெயரோனை வெருவ*
அங்கு அவன் ஆகம் அளைந்திட்டு* ஆயிரம் தோள் எழுந்து ஆட*
பைங் கண் இரண்டு எரி கான்ற* நீண்ட எயிற்றொடு பேழ் வாய்*
சிங்க உருவின் வருவான்* சித்திர கூடத்து உள்ளானே|

030. திவ்ய ப்ரபந்தம் - 1176 - பெரிய திருமொழி - 3.3.9
கரு முகில் போல்வது ஓர் மேனி* கையன ஆழியும் சங்கும்*
பெரு விறல் வானவர் சூழ* ஏழ் உலகும் தொழுது ஏத்த*
ஒரு மகள் ஆயர் மடந்தை* ஒருத்தி நிலமகள்* 
மற்றைத் திருமகளோடும் வருவான்* சித்திர கூடத்து உள்ளானே|

031. திவ்ய ப்ரபந்தம் - 1177 - பெரிய திருமொழி - 3.3.10
தேன் அமர் பூம் பொழில் தில்லைச்* சித்திர கூடம் அமர்ந்த*
வானவர் தங்கள் பிரானை* மங்கையர் கோன் மருவார்*
ஊன் அமர் வேல் கலிகன்றி* ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்றும்*
தான் இவை கற்று வல்லார் மேல்* சாரா தீவினை தானே|

032. திவ்ய ப்ரபந்தம் - 2777 - பெரிய திருமடல் - 7.5 (65)
அள்ளல் வாய் அன்னம் இரை தேர் அழுந்தூர் எழும் சுடரை*
தென் தில்லைச் சித்திர கூடத்து என் செல்வனை|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

Sunday, 23 November 2025

108 திவ்ய தேசங்கள் - 040 - திருச்சித்திரகூடம் - 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||040. திருச்சித்திரகூடம்||
||சிதம்பரம்||
||நாற்பதாவது திவ்ய க்ஷேத்ரம்||

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 32 - 1

குலசேகராழ்வார்
001. திவ்ய ப்ரபந்தம் - 741 - பெருமாள் திருமொழி - 10.1
அங்கண் நெடு மதிள் புடை சூழ் அயோத்தி என்னும்* 
அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி*
வெங்கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய்த் தோன்றி* 
விண் முழுதும் உயக் கொண்ட வீரன் தன்னை*
செங்கண் நெடுங்கரு முகிலை இராமன் தன்னைத்* 
தில்லை நகர்த் திருச்சித்ர கூடம் தன்னுள்*
எங்கள் தனி முதல்வனை எம்பெருமான் தன்னை* 
என்று கொலோ கண் குளிரக் காணும் நாளே|

002. திவ்ய ப்ரபந்தம் - 742 - பெருமாள் திருமொழி - 10.2
வந்து எதிர்ந்த தாடகை தன் உரத்தைக் கீறி* 
வரு குருதி பொழி தர வன்கணை ஒன்று ஏவி*
மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து* 
வல்லரக்கர் உயிர் உண்ட மைந்தன் காண்மின்*
செந்தளிர் வாய் மலர் நகை சேர் செழுந்தண் சோலைத்* 
தில்லை நகர்த் திருச்சித்ர கூடம் தன்னுள்*
அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த* 
அணிமணி ஆசனத்து இருந்த அம்மான் தானே|

003. திவ்ய ப்ரபந்தம் - 743 - பெருமாள் திருமொழி - 10.3
செவ்வரி நற் கருநெடுங்கண் சீதைக்கு ஆகிச்* 
சினவிடையோன் சிலையிறுத்து மழுவாள் ஏந்தி*
வெவ்வரி நற் சிலை வாங்கி வென்றி கொண்டு* 
வேல் வேந்தர் பகை தடிந்த வீரன் தன்னை*
தெவ்வர் அஞ்சு நெடும் புரிசை உயர்ந்த பாங்கர்த்* 
தில்லை நகர்த் திருச்சித்ர கூடம் தன்னுள்*
எவ்வரி வெஞ்சிலைத் தடக்கை இராமன் தன்னை* 
இறைஞ்சுவார் இணையடியே இறைஞ்சினேனே|

004. திவ்ய ப்ரபந்தம் - 744 - பெருமாள் திருமொழி - 10.4
தொத்து அலர் பூஞ் சுரிகுழல் கைகேசி சொல்லால்* 
தொல் நகரம் துறந்து துறைக் கங்கை தன்னை*
பத்தி உடைக் குகன் கடத்த வனம் போய்ப் புக்குப்* 
பரதனுக்குப் பாதுகமும் அரசும் ஈந்து*
சித்திரகூடத்து இருந்தான் தன்னை* 
இன்று தில்லை நகர்த் திருச்சித்ர கூடம் தன்னுள்*
எத்தனையும் கண் குளிரக் காணப் பெற்ற* 
இரு நிலத்தார்க்கு இமையவர் நேர் ஒவ்வார் தாமே|

005. திவ்ய ப்ரபந்தம் - 745 - பெருமாள் திருமொழி - 10.5
வலி வணக்கு வரை நெடுந்தோள் விராதைக் கொன்று* 
வண் தமிழ் மா முனி கொடுத்த வரி வில் வாங்கி*
கலை வணக்கு நோக்கு அரக்கி மூக்கை நீக்கி* 
கரனோடு தூடணன் தன் உயிரை வாங்கி*
சிலை வணக்கி மான் மறிய எய்தான் தன்னைத்* 
தில்லை நகர்த் திருச்சித்ர கூடம் தன்னுள்*
தலை வணக்கிக் கை கூப்பி ஏத்த வல்லார்* 
திரிதலால் தவமுடைத்துத் தரணி தானே|

006. திவ்ய ப்ரபந்தம் - 746 - பெருமாள் திருமொழி - 10.6
தனம் மருவு வைதேகி பிரியல் உற்று* 
தளர்வு எய்திச் சடாயுவை வைகுந்தத்து ஏற்றி*
வனம் மருவு கவியரசன் காதல் கொண்டு* 
வாலியைக் கொன்று இலங்கை நகர் அரக்கர் கோமான்*
சினம் அடங்க மாருதியாற் சுடுவித்தானைத்* 
தில்லை நகர்த் திருச்சித்ர கூடம் தன்னுள்*
இனிது அமர்ந்த அம்மானை இராமன் தன்னை* 
ஏத்துவார் இணையடியே ஏத்தினேனே|

007. திவ்ய ப்ரபந்தம் - 747 - பெருமாள் திருமொழி - 10.7
குரை கடலை அடல் அம்பால் மறுக எய்து* 
குலை கட்டி மறுகரையை அதனால் ஏறி*
எரி நெடு வேல் அரக்கரொடும் இலங்கை வேந்தன்* 
இன்னுயிர் கொண்டு அவன் தம்பிக்கு அரசும் ஈந்து*
திருமகளோடு இனிது அமர்ந்த செல்வன் தன்னைத்* 
தில்லை நகர்த் திருச்சித்ர கூடம் தன்னுள்*
அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால்* 
அரசு ஆக எண்ணேன் மற்று அரசு தானே|

008. திவ்ய ப்ரபந்தம் - 748 - பெருமாள் திருமொழி - 10.8
அம் பொன் நெடு மணிமாட அயோத்தி எய்தி* 
அரசு எய்தி அகத்தியன் வாய்த் தான் முன் கொன்றான்*
தன் பெருந்தொல் கதை கேட்டு மிதிலைச் செல்வி* 
உலகு உய்யத் திரு வயிறு வாய்த்த மக்கள்*
செம் பவளத் திரள்வாய்த் தன் சரிதை கேட்டான்* 
தில்லை நகர்த் திருச்சித்ர கூடம் தன்னுள்*
எம்பெருமான் தன் சரிதை செவியால் கண்ணால் பருகுவோம்* 
இன்னமுதம் மதியோமின்றே|

009. திவ்ய ப்ரபந்தம் - 749 - பெருமாள் திருமொழி - 10.9
செறி தவச் சம்புகன் தன்னைச் சென்று கொன்று* 
செழு மறையோன் உயிர் மீட்டு தவத்தோன் ஈந்த*
நிறை மணிப் பூண் அணியும் கொண்டு இலவணன் தன்னைத்* 
தம்பியால் வான் ஏற்றி முனிவன் வேண்ட*
திறல் விளங்கும் இலக்குமனைப் பிரிந்தான் தன்னைத்* 
தில்லை நகர்த் திருச்சித்ர கூடம் தன்னுள்*
உறைவானை மறவாத உள்ளம் தன்னை உடையோம்* 
மற்று உறுதுயரம் அடையோம் இன்றே|

010. திவ்ய ப்ரபந்தம் - 750 - பெருமாள் திருமொழி - 10.10
அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி* 
அடல் அரவப் பகையேறி அசுரர் தம்மை வென்று* 
இலங்கு மணி நெடுந்தோள் நான்கும் தோன்ற* 
விண் முழுதும் எதிர் வரத் தன் தாமம் மேவி*
சென்று இனிது வீற்றிருந்த அம்மான் தன்னைத்* 
தில்லை நகர்த் திருச்சித்ர கூடம் தன்னுள்*
என்றும் நின்றான் அவன் இவனென்று ஏத்தி* 
நாளும் இறைஞ்சுமினோ எப்பொழுதும் தொண்டீர் நீரே|

011. திவ்ய ப்ரபந்தம் - 751 - பெருமாள் திருமொழி - 10.11
தில்லை நகர்த் திருச்சித்ர கூடம் தன்னுள்* 
திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை*
எல்லை இல் சீர்த் தயரதன் தன் மகனாய்த் தோன்றிற்று* 
அது முதலாத் தன் உலகம் புக்கது ஈறா*
கொல் இயலும் படைத் தானைக் கொற்ற ஒள்வாள்* 
கோழியர் கோன் குடைக் குலசேகரன் சொற் செய்த*
நல் இயல் இன் தமிழ் மாலை பத்தும் வல்லார்* 
நலந் திகழ் நாரணன் அடிக்கீழ் நண்ணுவாரே|

திருமங்கையாழ்வார்
012. திவ்ய ப்ரபந்தம் - 1158 - பெரிய திருமொழி - 3.2.1
ஊன் வாட உண்ணாது உயிர் காவல் இட்டு*
உடலில் பிரியாப் புலன் ஐந்தும் நொந்து*
தாம் வாட வாடத் தவம் செய்ய வேண்டா*
தமதா இமையோர் உலகு ஆளகிற்பீர்*
கான் ஆட மஞ்ஞைக் கணம் ஆட மாடே*
கயல் ஆடு கால் நீர்ப் பழனம் புடைபோய்*
தேன் ஆட மாடக் கொடி ஆடு* 
தில்லைத் திருச்சித்ர கூடம் சென்று சேர்மின்களே|

013. திவ்ய ப்ரபந்தம் - 1159 - பெரிய திருமொழி - 3.2.2
காயோடு நீடு கனி உண்டு* வீசு கடுங் கால் நுகர்ந்து நெடுங் காலம்* 
ஐந்து தீயோடு நின்று தவம் செய்ய வேண்டா*
திரு மார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர்*
வாய் ஓது வேதம் மலிகின்ற தொல்சீர்*
மறையாளர் நாளும் முறையால் வளர்த்த*
தீ ஓங்க ஓங்கப் புகழ் ஓங்கு* 
தில்லைத் திருச்சித்ர கூடம் சென்று சேர்மின்களே|

014. திவ்ய ப்ரபந்தம் - 1160 - பெரிய திருமொழி - 3.2.3
வெம்பும் சினத்துப் புனக் கேழல் ஒன்று ஆய்*
விரி நீர் முது வெள்ளம் உள்புக்கு அழுந்த*
வம்பு உண் பொழில் சூழ் உலகு அன்று எடுத்தான்*
அடிப்போது அணைவான் விருப்போடு இருப்பீர்*
பைம் பொன்னும் முத்தும் மணியும் கொணர்ந்து*
படை மன்னவன் பல்லவர்க் கோன் பணிந்த*
செம் பொன் மணி மாடங்கள் சூழ்ந்த* 
தில்லைத் திருச்சித்ர கூடம் சென்று சேர்மின்களே|

015. திவ்ய ப்ரபந்தம் - 1161 - பெரிய திருமொழி - 3.2.4
அரு மா நிலம் அன்று அளப்பான் குறள் ஆய்*
அவுணன் பெரு வேள்வியில் சென்று இரந்த*
பெருமான் திருநாமம் பிதற்றி* 
நும் தம் பிறவித் துயர் நீங்குதும் என்னகிற்பீர்*
கரு மா கடலுள் கிடந்தான் உவந்து*
கவை நா அரவின்-அணைப் பள்ளியின் மேல்*
திருமால் திருமங்கையொடு ஆடு* 
தில்லைத் திருச்சித்ர கூடம் சென்று சேர்மின்களே|

016. திவ்ய ப்ரபந்தம் - 1162 - பெரிய திருமொழி - 3.2.5
கோ மங்க வங்கக் கடல் வையம் உய்யக்*
குல மன்னர் அங்கம் மழுவில் துணிய*
தாம் அங்கு அமருள் படை தொட்ட வென்றித்*
தவ மா முனியைத் தமக்கு ஆக்ககிற்பீர்*
பூ மங்கை தங்கிப் புல மங்கை மன்னிப்*
புகழ் மங்கை எங்கும் திகழ* 
புகழ் சேர் சேமம் கொள் பைம் பூம் பொழில் சூழ்ந்த* 
தில்லைத் திருச்சித்ர கூடம் சென்று சேர்மின்களே|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

108 திவ்ய தேசங்கள் - 040 - திருச்சித்திரகூடம் - 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||040. திருச்சித்திரகூடம்||
||சிதம்பரம்||
||நாற்பதாவது திவ்ய க்ஷேத்ரம்||

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
2 ஆழ்வார்கள் - 32 பாசுரங்கள்

001. குலசேகராழ்வார் - 11 பாசுரங்கள்
1. பெருமாள் திருமொழி (முதலாம் ஆயிரம்)

  • திவ்ய ப்ரபந்தம் - 741 - 751 - பத்தாம் திருமொழி 
----------

002. திருமங்கையாழ்வார் - 21 பாசுரங்கள்
1. பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்)

  • திவ்ய ப்ரபந்தம் - 1158 - 1167 - மூன்றாம் பத்து - இரண்டாம் திருமொழி - 10 பாசுரங்கள் 
  • திவ்ய ப்ரபந்தம் - 1168 - 1177 - மூன்றாம் பத்து - மூன்றாம் திருமொழி - 10 பாசுரங்கள் 

2. பெரிய திருமடல் (மூன்றாம் ஆயிரம்) - 1 பாசுரம்

  • திவ்ய ப்ரபந்தம் - 2777 - ஏழாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம் (65) 

--------------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி

தனியன்
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ|

அந்தாதி
அடியால் உலகு எல்லாம் அன்று அளந்து கொண்ட*
நெடியானைக் கூடுதியேல் நெஞ்சே கொடிது ஆய*
குத்திர கூடு அங்கி கொளுந்தா முன் கோவிந்தன்*
சித்திர கூடம் கருதிச் செல்|

  • நெஞ்சே - மனமே! 
  • அடியால் - தனது திருவடிகளினால்
  • உலகு எல்லாம் - எல்லா உலகங்களையும்
  • அன்று - முற்காலத்தில்
  • அளந்து கொண்ட - அளந்து தன்னுடையனவாக்கிக் கொண்ட
  • நெடியானை - திரிவிக்கிரம அவதாரம் செய்த கடவுளை
  • கூடுதி ஏல் - சேர வேண்டுமென்று விரும்பினையானால்
  • கொடிது ஆய - கொடுமை உள்ளதாகிய
  • குத்திரம் - இழி குணத்தைக் கொண்ட
  • கூடு - இந்தச் சரீரத்தை
  • அங்கி - அக்னியானது
  • கொளுந்தா முன் - எரித்து விடுதற்கு முன்னமே
  • கோவிந்தன் - கோவிந்தராஜன் எழுந்தருளி இருக்கின்ற
  • சித்திரகூடம் - திருச்சித்திரகூடம் என்னும் திவ்ய ஸ்தலத்தை
  • கருதி - நினைத்து
  • செல் - செல்வாயாக

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

Wednesday, 19 November 2025

108 திவ்ய தேசங்கள் - 040 - திருச்சித்திரகூடம் - 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||040. திருச்சித்திரகூடம்||
||சிதம்பரம்||
||நாற்பதாவது திவ்ய க்ஷேத்ரம்||

||ஸ்ரீ கோவிந்த ராஜப் பெருமாள் திருக்கோயில்||

||ஸ்ரீ புண்டரீகவல்லி தாயார் ஸமேத ஸ்ரீ கோவிந்தராஜன் பெருமாள்|| 
||திருவடிகளே சரணம்||

  • பெருமாள் மூலவர் - கோவிந்தராஜன், பார்த்தசாரதி, சக்கரவர்த்தி திருமகன்
  • பெருமாள் உற்சவர் - தேவாதி தேவன்
  • தாயார் மூலவர் - புண்டரீகவல்லி 
  • திருமுக மண்டலம் திசை - கிழக்கு
  • திருக்கோலம் - போக ஸயனம்
  • புஷ்கரிணி/தீர்த்தம் - புண்டரீக ஸாஸ்ஸு, 12 தீர்த்தங்கள்
  • விமானம் - ஸாத்வீக
  • ப்ரத்யக்ஷம் - சிவன், தில்லை மூவாயிரவர், வ்யாக்ர பாதர்
  • ஆகமம் - வைகாநஸம் 
  • ஸம்ப்ரதாயம் - தென் கலை
  • மங்களாஸாஸநம் - 2 ஆழ்வார்கள் (குலசேகராழ்வார், திருமங்கையாழ்வார்)
  • பாசுரங்கள் - 32

--------------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி

--------------------
ஸ்தல புராணம்

மகாவிஷ்ணுவின் நாபிக் கமலத்தில் இருக்கும் பிரம்மா நான்கு முகங்களுடன் அமர்ந்த கோலத்தில் தான் இருப்பார். ஆனால், இங்கு வித்தியாசமாக நின்ற கோலத்தில் இருக்கிறார். தன்னைப் படைத்த மகாவிஷ்ணு நடனப் போட்டிக்கு தீர்ப்புச் சொல்வதற்காக சபையில் இருந்த போது, அவருக்கு மரியாதை கொடுப்பதற்காக பிரம்மா நின்ற படியே இருந்தாராம். இதனை உணர்த்தும் விதமாக இங்கு பிரம்மா நின்ற கோலத்தில் இருக்கிறார் என்கின்றனர். பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலமான இங்கு மகாவிஷ்ணு ஆகாயத்தை பார்த்த படி இருப்பது சிறப்பு. உற்சவர் தேவாதி தேவன் தாயார்களுடன் அமர்ந்த கோலத்திலும், மற்றோர் உற்சவர் சித்திரக் கூடத்துள்ளான் ஸ்வாமியின் பாதத்திற்கு அருகில் நின்ற கோலத்திலும் இருக்கின்றனர். சித்ர சபை எனப்படும் இக்கோயிலில் நடராஜர் சன்னதிக்கு அருகிலே கோவிந்தராஜப் பெருமாள் கொடி மரத்துடன் தனிக்கோயில் மூலவராக இருக்கிறார். பெருமாள் சன்னதிக்கு முன் மண்டபத்தில் நின்று பார்த்தால் நடராஜர், கோவிந்தராஜர் மற்றும் அவரது நாபிக் கமலத்தில் இருக்கும் பிரம்மா ஆகிய மூவரையும் ஒரே நேரத்தில் தரிசனம் செய்யலாம். இந்த தரிசனம் மிகவும் விசேஷமானது.

கவேரன் எனும் கலிங்க நாட்டு அரசனுக்கு லோபமுத்திரை எனும் மகள் இருந்தாள். லோப முத்திரையை திருமணம் செய்து கொண்ட அகத்தியர் அவளை காவிரி நதியாக மாற்றினார். அந்நதியில் தினமும் நீராடிய கவேரனும் அவன் மனைவியும் தங்கள் மகளிடம், முக்தியடைய வழி கேட்டனர். அவர்கள் முன் தோன்றிய காவிரி, "தில்லைநகர் சென்று பெருமாளை குறித்து தவம் செய்து வந்தால் அவர் தரிசனத்தால் முக்தி கிடைக்கும்," என்றாள். அதன்படி கவேரனும், அவன் மனைவியும் இத்தலத்திற்கு வந்து தவம் இருந்தனர். அவர்களுக்கு மகாவிஷ்ணு ஸ்ரீதேவி, பூதேவியுடன் பாற்கடலில் பள்ளி கொண்ட கோலத்தில் காட்சி தந்து மோக்ஷம் கொடுத்தார்.

பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பெருமாளை மெத்தையாக (அரவணை) இருந்து தாங்குபவர் ஆதிசேஷன். ஒரு சமயம் அவர் சிவனது திருவிளையாடல்களையும், அவரது தாண்டவங்களையும் கேட்டு தாண்டவ தரிசனம் செய்ய ஆர்வம் கொண்டார். எனவே, மகாவிஷ்ணு அவரை சிவனின் திருநடனம் காண அனுப்பி வைத்தார். பூலோகத்தில் வியாக்ர பாத மகரிஷியுடன் நட்பு கொண்ட அவர் இத்தலத்தில் நடராஜரின் திருநடனக் கோலத்தை தரிசித்தார். பின் கோவிந்த ராஜரை வணங்கி மோக்ஷம் பெற்று மீண்டும் பாற்கடல் திரும்பினாராம். இவர் பிரகாரத்தில் ஸ்வாமியின் பாதத்திற்கு நேரே அவரை வணங்கிய கோலத்தில் தனிச் சன்னதியில் இருக்கிறார். இவரிடம் வேண்டிக் கொண்டால் சிவன், விஷ்ணு இருவரது அருள் கிடைக்கவும் உதவி செய்வார் என்பது நம்பிக்கை.

அசுர குலத்தைச் சேர்ந்த தில்லி என்பவள் பெருமாளிடம், "தான் மரங்கள் நிறைந்த வனமாக இருக்க விரும்புவதாகவும், அவ்விடத்தில் ஸ்வாமி எழுந்தருள வேண்டும்' என்றும் வேண்டினாள். விஷ்ணுவும் அருள் புரிய அவளே சிதம்பரத்தில் தில்லை மரங்களாக வளர்ந்து நிற்க விஷ்ணு இத்தலத்தில் பள்ளி கொண்டார். தலமும் "தில்லை நகர்' எனப்பட்டது. தாயார் புண்டரீகவல்லி தனிச்சன்னதியில் இருக்கிறாள். பிரகாரத்தில் ஸ்வாமியின் பாதத்திற்கு நேரே அவரது திருவடிகள் இருக்கிறது. இதனை வணங்குபவர்களுக்கு மோக்ஷம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. கஜேந்திர வரதரை தூக்கிய கோலத்தில் கருடாழ்வார், நரசிம்மர், வேணு கோபாலர், பதஞ்சலி மகரிஷி, ஆண்டாள், ஆஞ்சநேயர் ஆகியோரும் இருக்கின்றனர்.

கைலாயத்தில் ஒரு சமயம் சிவனும், பார்வதியும் மகிழ்ச்சியாக இருந்த நேரத்தில் ஆனந்தமாக நடனமாடினர். நடனம் முடிந்த போது தங்களில் யார் நன்றாக ஆடியது என அவர்களுக்குள் சந்தேகம் எழுந்தது. பிரம்மாவிடம் தங்களின் சந்தேகத்தைக் கேட்டனர். அவரால் சரியாக தீர்ப்பு சொல்ல முடியவில்லை. எனவே இருவரும் தங்களுக்கு தீர்ப்பு சொல்லும்படி மகாவிஷ்ணுவிடம் கேட்டுக் கொண்டனர். அவர் தேவ சிற்பியான விஸ்வகர்மாவைக் கொண்டு இங்கு ஒரு சித்திரை சபையை அமைத்து, அதில் நடன போட்டியை வைத்துக் கொள்ளும்படி கூறினார். சிவனுக்கும், பார்வதிக்கும் நடனப் போட்டி ஆரம்பமானது. சிவன் தன் தாண்டவங்கள் அனைத்தையும் ஆடிக் காட்டினார். பார்வதி தேவியும் சலிக்காமல் அவருக்கு ஈடு கொடுத்து ஆடினார். ஒருவரை ஒருவர் மிஞ்சும் படி இருவரும் ஆடிக் கொண்டிருக்க இறுதியில் தன் வலக் காலைத் தூக்கி தலைக்கு மேலே நிறுத்தினார் சிவன். பார்வதியால் காலைத் தூக்கி ஆட முடியவில்லை. எனவே, சிவனே வெற்றி பெற்றதாக அறிவித்தார் மகாவிஷ்ணு. பின் சிவன் இங்கு நடராஜராகவே எழுந்தருளி, மகாவிஷ்ணுவையும் இங்கேயே தங்கும்படி கூறினார். விஷ்ணுவும் பள்ளி கொண்ட கோலத்தில் தங்கினார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்