About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்
Showing posts with label 1 பாகவதம் அறிமுகம். Show all posts
Showing posts with label 1 பாகவதம் அறிமுகம். Show all posts

Monday, 7 August 2023

ஸ்ரீமத் பாகவதம் - அறிமுகம் 6

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

ஸ்ரீமத் பாகவதம் கிருஷ்ண சொரூபமாகும் என்கிறது. பாகவததத்தின் முதல் மற்றும் இரண்டாவது காண்டம் ஸ்ரீ கிருஷ்ணரின் கால்களாகவும், மூன்றாவது, நான்காவது காண்டங்கள் அவரது தொடையாகவும், ஐந்தாவது காண்டம் அவரது தொப்புள், ஆறாவது காண்டம் அவரது மார்பு, ஏழாம், எட்டாம் காண்டங்கள் அவரது கைகள், ஒன்பதாவது காண்டம் அவரது தொண்டை, பத்தாவது காண்டம், தசம ஸ்கந்தம் கிருஷ்ணனுடைய பிறப்பு, வளர்ப்பு, அவருடைய  லீலைகள் அனைத்துமே பேசி  பாகவதத்தின் சிரசாக விளங்குகிறது. பதினோராம் காண்டம் யாதவ குலத்தின் அழிவு பற்றி சொல்கிறது, அது அவரது நெற்றி, பன்னிரெண்டாம் காண்டம் கிருஷ்ணன் விஷ்ணு லோகம் செல்லுதல் பற்றிய விவரங்கள், அவரது தலையாகவும் உள்ளன என்கிறது. அதற்கும் அடுத்துள்ள ராஜ வம்சக் கதைகள் பாகவதத்தின் புஜப் பகுதி. அஜாமிளனின் கதை, நாமத்தினுடைய மகிமையைச் சொல்வதால் பாகவதத்தில் இதயமாக ஒளிர்கிறது.  இப்படி பாகவத புருஷனை கற்பனை செய்து கொண்டே வந்தோமானால் ஏகாதச ஸ்கந்தம் என்கிற பதினோராவது அத்யாயம், ரத்ன கிரீடமாக பாகவதத்தை தகதகக்க வைக்கிறது. ஏனெனில் அத்தனையும் உபதேச ரத்னங்கள். 

சுகப் பிரும்மரிஷி, ஸ்ரீமத் பாகவதத்தை பரீக்ஷித்துக்கு அவன் மோட்சம் பெறுவதற்காக அவன் உயிரோடு இருக்கும் ஏழு நாட்களுக்குக் கூறினார். பாகவதக் கதைகளை கவனமாகக் கேட்ட பரீட்சித்து பரமபதம் அடைந்தான் என்கிறது புராணம். இந்த நிகழ்வின் காரணமாக ஸ்ரீமத் பாகவதம் சப்தாகமாக, அதாவது ஏழு நாட்களுக்கு உபன்யாசமாகக் கூறப்படும் வழக்கம் உண்டானது. இதுவே சப்தாகம்/சப்தாஹம் எனப்பட்டது. இப்படிப்பட்ட சப்தாகத்தில்  கலந்துகொண்டு கேட்பது மிகவும் புண்ணியம் என்று பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள். பாகவத ஸ்ரவணத்தாலே ஸ்ரீ மகாவிஷ்ணு நம் மனத்தில் ஆவிர்பவிக்கிறார். ஸ்ரீ மகா விஷ்ணுவிற்கும், பாகவதத்திற்கும், வாசுதேவரின் மந்திரத்திற்கும் இடையே எந்த வித்தியாசமும் கிடையாது.

பாகவதம் என்கிற அம்ருதத்தை பருகியவர்களுக்கு மோக்ஷம் கிடைத்து விடுகிறது. நம் ஆச்சார்யனை சேவித்து விட்டு தான் எந்த காரியத்தையும் தொடங்க வேண்டும். பாகவத பாராயணமும் அவ்வணமே செய்ய வேண்டும். பாகவதத்தை கேட்ட கணத்தில் பகவான் இதயத்தில் வந்து அமர்ந்து விடுகிறார். பிரியமான சிஷ்யரிடம் ரொம்ப கஷ்டமான ரகசியத்தை புரிய வைத்து அனுக்கிரகித்து விடுவார் குரு. கண்ணனேதான் பாகவதத்துக்கு செய்தி. கண்ணனுடைய அனைத்து அவதாரங்கள், அவனைப் பற்றிய தர்மம், நாம் கடைபிடிக்க வேண்டிய பக்தி, மோக்ஷத்துக்கு வேண்டிய வழிமுறைகள், இவை அனைத்தும் பாகவத புராணத்தில் உள்ளது. ஆதிசங்கரர் எழுதிய கோவிந்தாஷ்டகத்தில் பாகவதம் பற்றிய குறிப்பு வருகிறது. உயிர்களாகிய ஜீவாத்மா பகவானாகிய பரமாத்மாவுடன் இணைய அதுவே வழிவகுக்கும்’ என்று சூரிய பகவான் உபதேசித்ததாக பாகவத மஹாத்மியம் கூறுகிறது.

ஏக ஸ்லோக பாகவதம்!
ஆதௌ தேவகி தேவ கர்ப்ப ஜனனம்
கோபி க்ருஹே வர்த்தனம்
மாயா பூதன ஜீவிதாபஹரணம்,
கோவர்தன உத்தாரணம்
கம்சச் சேதன கௌரவாதி ஹரணம்
குந்தீ சுதா பாலனம்
சைதத் பாகவதம் புராண கதிதம்
க்ருஷ்ண லீலாம்ருதம்

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவதம் – அறிமுகம் 5

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

ஸ்ரீமத் பாகவதத்தை இயற்றியவர் வேத வியாசர். இயற்பெயர் கிருஷ்ண த்வைபாயனர். வேதங்களை பிரித்து வியாசம் பண்ணியதால் வியாசர் என்றழைக்கப்படுகிறார். 

அர்ஜுனனின் மகன் அபிமன்யு. அபிமன்யுவின் மகன் பரிக்ஷித். பரிக்ஷித் ஒருமுறை காட்டில் வேட்டையாடி விட்டு ஒரு முனிவரின் வீட்டுக்குள் நுழைந்து விட்டான். அங்கு சமீகர் என்கிற முனிவர் தியானத்தில் இருந்தார். அவரிடம் தான் பரிக்ஷித் மன்னன் என்றும் தான் அம்பு எய்த ஒரு மானை தேடி வந்ததாகவும், அந்த மானை பார்த்தீரா என்று பல முறை வினவியும் அவர் மௌன விரதத்தில் இருந்ததால் பதில் கூறவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பரிக்ஷித் அங்கு கிடந்த ஒரு இறந்த பாம்பை தான் வில்லினால் எடுத்து அவர் தோளில் போட்டு விட்டு சென்று விட்டான். ஆனால் அந்த துறவி அதனால் கோபப்படவே இல்லை. அவரது மகன் சிருங்கி, தவத்தில் சிறந்தவன், ஆனால் கோபக்காரன். அவன் நடந்ததை கேள்விப்பட்டு ஆத்திரம் அடைந்தான். தன் தந்தையை அவமானப்படுத்திய அந்த பரிக்ஷித் மன்னன் இன்னும் ஏழு இரவுகளுக்குள் கடும் விஷமுடைய தக்ஷகன் என்ற பாம்பினால் கடிக்கப்பட்டு மரணமடைவனாக என்று கடும் சாபத்தை கொடுத்தான். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட பரிக்ஷித் தான் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்று உடனே உணர்ந்தான். தான் ஏன் அவ்வாறு செய்தோம் என்று யோசித்தான். கலியுகம் தொடங்கியதாலேயே, கலிபுருஷன் தன்னை தீண்டியதாலேயே இப்படியொரு மகாபாவமான செயலை செய்ய நேர்ந்தது என்று உணர்ந்து கண்ணீர் உகுத்தான்.

சுக பிரம்ம ரிஷியிடம் 'எது ஒருவனுக்கு  உயர்ந்த லக்ஷியம்? மரணமடையுமுன்  நான்  என்ன  செய்ய வேண்டும்? மனிதனானவன் எதை கேட்க வேண்டும், செய்ய வேண்டும், ஞாபகம் கொள்ள வேண்டும்? என்று கேட்கிறான். இந்த கேள்வியில் ஆரம்பித்து சுக பிரம்ம ரிஷி மற்றும் பரிக்ஷித் இவர்களுக்குள் நடந்த சம்பாதனை ஏழு நாட்களாக நடந்தது. அதுவே பாகவதம். அதில்  ப்ரம்மாவும்  நாரதரும்,  விதுரரும் மைத்ரேயரும்  யுதிஷ்டிரனும் நாரதரும்,   கிருஷ்ணனும் உத்தவரும்,  பரிமாறிக் கொண்ட  சம்பாஷணைகள் இடம் பெறுகின்றன சம்பாஷனை முடியவும் பரிக்ஷித் அடைய வேண்டியதை அடைந்து விட்டேன். பாக்யவான் நான். சாஸ்வதமான  ஹரியை  எனக்குக்  காட்டி விட்டீர்களே. வேறு என்ன  வேண்டும்? என் அறியாமை, சந்தேகம் சகலமும் நீங்கின. இனி என்னை அந்த  தக்ஷகன் என்கிற சர்ப்பம்  தீண்டி மரணம் அடைந்தாலும் துளியும்  வருத்தமோ, கவலையோ இல்லை என்றான். அந்த சமயத்தில் சூத பௌராணிகரும் உடனிருந்து பாகவதத்தை கேட்டார். அந்த விஷயத்தையே சூத பௌராணிகரும் சனகாதி முனிவர்களும் நைமிஷாரண்யத்தில் வைத்து கேள்வி பதிலாக பகிர்ந்து கொள்வதாய் பாகவதம் ஆரம்பிக்கும்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவதம் – அறிமுகம் 4

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

ஒரு மரத்தின் சிறப்பு அதன் பழத்தின் ருசியில் தெரியும் வரும். அந்த பழம் ஒரு கிளியின் அலகினால் கொத்தப்பட்டிருந்தால் அது மிகவும் தித்திப்பாகவும் சுவையாகவும் இருக்கும்.  ஸ்ரீமத் பாகவதம், வேத சாஸ்திரங்கள் என்னும் கற்பக மரத்தின் கனிந்த பழமாகும். முக்தியடைந்த ஆத்மாக்கள் உட்பட அனைவராலும் சுவைக்கப்படுவதற்கு உகந்த நிலையில் இருந்த இதன் அமிர்த ரஸம், சுக பிரம்ம ரிஷியின் (’சுக என்றால் ’கிளி’ என்று பொருள்) உதடுகளிலிருந்து வெளிப்பட்டதால், மேலும் அதிகமான சுவையுடன் திகழ்கின்றது என்பது பொருள். வியாசர் தன் மகன் சுகருக்கு ஸ்ரீமத் பாகவதத்தை உபதேசித்தார். ஸ்ரீமத் பாகவதம் 12 ஸ்கந்தங்களும், 36,000 பாடல்களும் கொண்டது. இதில் 25 கீதைகளும், பல அவதாரக் கதைகளும் உள்ளன. பெரும்பான்மை அனுஷ்டுப் சந்தத்தில் அமைந்துள்ளன பாடல்கள். இதில் ஒவ்வொரு அத்யாயத்தின் தலைப்பிலும் ஒரு கடவுள் வாழ்த்துப் பாடல் உள்ளது. ஸ்ரீமத் பாகவதம் மோக்ஷத்தை மட்டுமல்ல கேட்ட மாத்திரத்தில் நான்கு புருஷார்த்தங்களையுமே அளிக்க வல்லது. வேத அத்யயனம் செய்வது போல் சந்தை திருவையாக அதாவது ஒவ்வொரு ஸ்லோகத்தையும் ஒரு முறை சொல்லி மூன்று முறை வாங்கிச் சொல்லி அர்த்தத்தோடு உள்வாங்கிக் கொண்டார் சுகர். பின்னர் சுகமுனிவர் பரீட்சித்து மன்னனுக்குச் சொன்னார். 

ஸ்ரீமத் பாகவத பாராயணம் நடக்கும் இடத்திற்குச் சென்று ஒரு பத்து நிமிடம் உட்கார்ந்தால் ஸம்ஸ்க்ருதம் புரியா விட்டாலும், அர்த்தம் தெரியாவிட்டாலும் பாராயண ஒலி கேட்பதற்கே மகிழ்ச்சியாக இருக்கும். இவ்வளவு கர்ம வாசனைகளோடு ஸம்சாரத்தில் உழன்றுகொண்டிருக்கும் நமக்கே பாகவத சப்தம் மகிழ்ச்சி தருகிறதென்றால், ப்ரும்ம ஸ்வரூபாக விளங்கும் ஸ்ரீ சுகருக்கு எப்படி இருந்திருக்கும்? பாகவதம் தந்த பேரானந்ததில் திளைத்துக் கொண்டிருந்த சுகர் அதை யாருக்காவது சொல்ல வேண்டுமே என்று தவித்தார். ஏழு நாட்களில் மரணம் என்ற சாபத்தோடு தனக்கு யாராவது உய்யும் வழி காட்ட மாட்டார்களா என்று வருந்திக் கொண்டிருந்த பரீக்ஷித்தும் சுகரும் கங்கைக் கரையில் ஒன்று சேர்ந்தனர்.

பாகவதத்தில் கூறப்பட்டுள்ளவை: 

சிருஷ்டியின் தொடக்கம், அண்டச்சராசரங்களும், பஞ்ச பூதங்களும், உலகம் தோன்றியதும் அனைத்தும் பாகவதத்தில் உள்ளது. இதில் சொல்லப்படாத வேத வேதாந்த கருத்துக்களே இல்லை. பகவத் அவதாரங்கள், பகவானின் லீலைகள், புராண கதைகள் அனைத்தும் நடந்ததை நடந்த படி சொல்லி நமக்கு உள்ளங்கை நெல்லிக் கனியாக சனாதன தர்மத்தையும், பக்தியையும், பகவானை அடையும் மார்கத்தையும் போதிக்கிறது. பதினெட்டாயிரம் ஸ்லோகங்களில் சொல்லப்பட்டு இருப்பவை ஏராளம். அந்த ரசானுபாவத்தில் மூழ்கி முழு பாகவதத்தையும் படித்தும் கேட்டும் அனுபவிக்க ஸ்ரீ கிருஷ்ண பகவான் அருள் புரிவான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

Sunday, 6 August 2023

ஸ்ரீமத் பாகவதம் – அறிமுகம் 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

வேதம் முழுவதையும் கிரகித்த வியாஸ பகவான், கலியுகத்தில் இருக்கும் மனிதர்களைக் கருத்தில் கொண்டு முழு வேதத்தையும் ஒருவர் ஒரு வாழ்நாளுக்குள் கற்றுக் கொள்வது கடினம் என்று உணர்ந்து அதை நான்காகப் பிரித்தார். பின்னர்

  • 1. ரிக் வேதத்தை பைலர் என்ற ரிஷியிடமும்,
  • 2. யஜுர் வேதத்தை வைசம்பாயனர் என்ற ரிஷியிடமும்,
  • 3. ஸாம வேதத்தை ஜைமினியிடமும்,
  • 4. அதர்வண வேதத்தை சுமந்து என்ற ரிஷியிடமும் கொடுத்தார்.
  • 5. பதினேழு புராணங்களை ரோம ஹர்ஷணர் என்ற பௌராணிகரிடம் கொடுத்தார். கடைசியாக 
  • 6. பதினெட்டாவதாக எழுதிய ஸ்ரீமத் பாகவத புராணத்தைக் கொடுக்க தகுந்த ஒருவரை எதிர் பார்த்துக் கொண்டிருந்தார்.

ஒரு தந்தை சொத்தைப் பிரித்துக் கொடுப்பது போல கொடுத்து விட்டு, தனக்குப் பிரியமான சொத்தை சரியாக நிர்வகிக்கத் தகுந்த ஆளை எதிர்பார்ப்பது போல் அவர் காத்திருந்தார். ஸ்ரீ வியாஸ பகவான் ஒரு சமயம் யாகம் செய்யும் போது, யாக குண்டத்தில் இருந்து தோன்றியவர் ஸ்ரீ சுகாசார்யார். இவரிடம் தான் பாகவதத்தை ஒப்படைக்க வேண்டும் என்று உடனே வியாசருக்குத் தெரிந்தது. தோன்றும் போதே பதினாறு வயது நிரம்பிய இளம் பாலகனாக, அழகு சொட்டும் உருவத்தோடு விளங்கினார் சுகாசார்யார். ஞான ஸ்வரூபமான சுகர், யாக குண்டத்தில் இருந்து வெளி வந்ததும், எதையும் கவனிக்காமல் கிடுகிடுவென்று ஓடத் துவங்கினார். எங்கும் நிரம்பி இருக்கும் ஆத்மாவில் ஆழ்ந்திருப்பவர் என்பதால் ஆடைகளின்றி, திக்குகளையே ஆடையாகக் கொண்டு திகம்பரராக சங்கல்பமின்றி சஞ்சரித்தார். தான் இவ்வளவு காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த புத்திரன் கிடைத்து விட்டான் என்று மகிழ்ந்து போன வியாஸரோ, சுகரைத் துரத்திக் கொண்டு ஓடினார். மகனே மகனே, என்று குத்திக் கொண்டு தந்தை துரத்திக் கொண்டு ஓட, சுகர் தன்னைத் தான் அழைக்கிறார் என்று நினைக்கவில்லை. ஏனெனில் ப்ரபஞ்சம் முழுவதும் நிரம்பி இருக்கும் ஆத்மாவே தானென்று உணர்ந்திருந்தார். ஆனால், வழியிலிருந்த மரம் செடி கொடிகளெல்லாம் ஏன் ஏன் என்று வியாஸருக்கு பதில் கூறின. இதிலிருந்து அவருடைய ப்ரும்மானுபவம் எத்தகையது என்று நாம் புரிந்து கொள்ளலாம். ஓடிக் கொண்டிருந்த சுகர் ஒரு குளத்தின் வழிச் செல்ல, அங்கு ஆடையின்றி குளித்துக் கொண்டிருந்த பெண்கள் அவரைப் பார்த்து விட்டு எந்த சஞ்சலமும் இல்லாமல் குளியலைத் தொடர்ந்தனர். சற்று நேரத்தில் பின்னாலேயே துரத்தக் கொண்டு வந்த வியாஸரைப் பார்த்ததும் ஓடிச் சென்று ஆடைகளை அணிய முற்பட்டனர். இதைக் கண்ட வியாஸர், அந்தப் பெண்களைப் பார்த்து பதினாறு வயதுடைய என் மகன் ஆடையின்றி செல்கிறான். அவனைப் பார்த்து நீங்கள் வெட்கமடையாமல் கிழவனும், ரிஷியுமான என்னைக் கண்டதும் வெட்கப் படுகிறீர்களே இது நியாயமா என்று கேட்டார். அதற்கு அந்தப் பெண்கள், மன்னித்து விடுங்கள் மஹரிஷி. தங்கள் மகன் இளவயது உடையவராய் இருந்த போதும், அவரைக் கண்டதும் வெட்கம் ஏற்படவில்லை, காரணம் அவர் தன்னை ஆணா, பெண்ணா என்று கூட உணராமல் ப்ரும்ம வஸ்துவாகவே இருக்கிறார். அவரைக் கண்டதும் எங்கள் மனத்தில் எந்த விகாரமும் ஏற்படவில்லை. ஆனால், நீங்கள் வயதானவர் என்றாலும் நீங்கள் ஆண், நாங்கள் பெண்ணினம் என்ற பேதம் தெரிவதால் வெட்கம் வந்து ஆடைகளை அணிந்தோம் என்றனர். இந்த நிகழ்வு வியாஸரைக் குறைத்துச் சொல்லப் பட்டதல்ல. தந்தையான அவர் தன்னைக் குறைத்துக் கொண்டு தனயனின் பெருமையை உணர்த்துகிறார். மேலும், இதயத்தில் துளியும் காம வாசனையற்ற, ப்ரும்ம ஸ்வரூபமான ஸ்ரீ சுகர் தான் பாகவதத்தின் தசம (10) ஸ்கந்தத்தில் ராஸ லீலையை வர்ணிக்கிறார் என்றால் ரஸம் எவ்வளவு உயர்ந்தது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவதம் – அறிமுகம் 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

இந்த ஸ்ரீமத் பாகவதமும் ஸ்ரீமத் பகவத் கீதையைப் போன்றே கேள்வி பதிலின் வடிவில் அமைந்துள்ளது. கலி யுகத்தின் தீய விளைவுகளிலிருந்து விடுபடுவதற்கான மார்கத்தை அறிய நைமிசாரண்யத்தில் கூடிய முனிவர்கள், ஸ்ரீல சூத கோஸ்வாமியிடம் கேட்ட கேள்விகளுக்கு அவரளித்த பதில்களின் வடிவில் இஃது அமைந்துள்ளது. ஸ்ரீல சூத கோஸ்வாமியோ, பரிக்ஷித் மன்னரின் கேள்விகளுக்கு ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமி எவ்வாறு பதிலளித்தாரோ, அதை அப்படியே நைமிசாரண்யத்தின் முனிவர்களிடம் விவரித்தார்.

  • திருவண்ணாமலையில் இறைவன் மலையாய் இருக்கிறார் என்று கேள்வியுற்றிருப்போம்.
  • நைமிஷாரண்யத்தில் இறைவன் காடாக இருக்கிறார்.
  • புஷ்கரம் என்னும் புண்ணிய தல த்தில் இறைவனே ஏரியாக இருந்து அனைவரின் ஸம்ஸார தாகத்தையும் தணிக்கிறார்.
  • மரங்களில் அரசமரமாக வீற்றிருக்கிறார்.
  • அது போல், புத்தகங்களில் ஸ்ரீமத் பாகவதமாக இறைவன் இருக்கிறார். 

ஸ்ரீமத் பாகவதாக்யேயாம் ப்ரத்யக்ஷ: க்ருஷ்ண ஏவ ஹி" 
என்பது பாகவத மாஹாத்ம்யத்தில் இருக்கும் ஒரு ஸ்லோகம்.

ஸ்ரீமத் பாகவதத்தின் உருவில் ப்ரத்யக்ஷமாக பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே இருக்கிறார்.

இந்த பாகவதத்திற்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு.

புராணம் என்றால் படிப்பார்கள், சொல்லுவார்கள், பிறர் சொல்லக் கேட்பார்கள். யாரவது பருகினார்கள், அருந்தினார்கள், சுவைத்தார்கள் என்றெல்லாம் எண்ணிப் பார்க்க முடியுமா? ஆனால் இந்த புராணத்தைப் பருக முடியும், அதுவும் காது வழியாக. தேனினும் இனிய பகவானின் குணங்களை, லீலைகளைக் சொல்லும் நூல், சொல்பவர்களுக்கு, கேட்பவர்களுக்கு, படிப்பவர்களுக்கு, என அனைவருக்கும் இனிமையை வாரி வழங்கும்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவதம் – அறிமுகம் 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

"ஸ்ரீமத் பாகவதம்", பகவானது குணானுபவங்களை வெளியெடுத்துச் சொல்லும் நூலாம். அப்பரம்பொருள் அளவிட முடியாத ஐஸ்வர்யம், வீர்யம், கீர்த்தி, அழகு ஞானம், வைராக்கியம் ஆகிய ஆறு குணங்களின் நிலமாய் இருப்பதால் அவருக்குப் பகவான் என்று பெயர். அவரது ஸ்வரூபத்தின் மென்மையும், அவர் செய்த அவதாரங்களின் சரித்திரத்தையும் சொல்லுவதால், இதற்குப் பாகவதம் என்ற பெயர் வந்தது. இது ஸ்ரீ வேத வியாசரால் அவர் செய்த புராணாதிகளின் இறுதியில் பதினெட்டாவது புராணமாகச் செய்யப்பட்டது. இது கங்கைக் கரையில் பிராயோபவேசம் {அன்ன ஆகாரம் இன்றிப் பட்டினிக் கிடத்தல்} செய்து கொண்டு ஏழாம் நாள் தனக்கு வரப்போகிற மரணத்தை எதிர்பார்த்திருந்த அர்ச்சுனனது பேரனாகிய பரீட்சித்துக்கு வியாசருடைய பிள்ளையும், முற்றுந்துறந்த முழு ஞானியுமான சுகப்ரஹ்மத்தால் சொல்லப்பட்டது. இந்த புராணத்தில் 12 ஸ்கந்தங்களும், 18,000 ஸ்லோகங்களும் உள்ளன. 


ஸ்ரீமத் என்றால் மிக அழகானது, அல்லது மிகச் சிறந்தது, அல்லது புகழ் வாய்ந்தது என்று பொருள். பாகவதம் என்றால் பகவானிடம் இருந்து வருவது அல்லது பகவானுடன் தொடர்புடையது என்று பொருள். எனவே, ஸ்ரீமத் பாகவதம் என்பது “பகவானைப் பற்றிய அழகான புத்தகம்” என்று பொருள்படும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், அவரது பல்வேறு அவதாரங்கள், மற்றும் அவரது பக்தர்களைப் பற்றிய வரலாற்று நிகழ்ச்சிகள் இதில் அடங்கியுள்ளன. ஸ்ரீமத் பாகவதமானது வேத மெய்யறிவை நல்கும் கற்பக மரம்.

ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரமே ஸ்ரீமத் பாகவதம்
ஒரு கல்லிலோ பளிங்கிலோ பகவான் அவதரிக்கும் போது, அவரை விக்ரஹம் என்கிறோம். அவர் மீனாகத் தோன்றினால் மத்சயர் என்றும், ஆமையாகத் தோன்றினால் கூர்மர் என்றும், பாதி மனிதனாகவும் பாதி சிங்கமாகவும் தோன்றினால் நரசிம்மர் என்றும் அழைக்கின்றோம். அது போலவே, புத்தகத்தின் வடிவில் கிருஷ்ணர் தோன்றினால், அவர் ஸ்ரீமத் பாகவதம் என்று அறியப்படுகிறார்.


ஸ்ரீமத் பாகவதம் தோன்றிய விதம்
நான்கு வேதங்கள், வேதாந்த சூத்திரம், புராணங்கள், மகாபாரதம் போன்றவற்றை தொகுத்து வழங்கிய மாமுனிவரான ஸ்ரீல வியாச தேவரின் மனம், அவ்வாறு தொகுத்த பின்னும் திருப்தி அடையவில்லை. அந்நிலைக்கான காரணத்தை அவர் தனது ஆன்மீக குருவான ஸ்ரீல நாரதரிடம் கேட்டார். அதற்கு நாரதர், “உண்மையில், முழுமுதற் கடவுளின் களங்கமற்ற புகழை நீ வர்ணிக்கவில்லை. பகவானின் தெய்வீகப் புலன்களைத் திருப்தி செய்யாத தத்துவங்கள் பயனற்றவை. அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றை விவரமாக விளக்கியுள்ள போதிலும், முழுமுதற் கடவுளான வாசுதேவரின் (கிருஷ்ணரின்) புகழை நீ விளக்கவில்லை. அந்த முழுமுதற் கடவுளின் சேவையில் நமது எல்லா செயல்களையும் அர்ப்பணிப்பதால் மட்டுமே நமது அனைத்து துயரங்களையும் போக்க முடியும். ஆகையால் தயவுசெய்து நீ பகவானின் லீலைகளைப் பற்றி நேரடியாக வர்ணிப்பாயாக. அதுவே கற்றறிந்தவர்களின் ஏக்கத்தை திருப்தி செய்ய வல்லது” என்று வியாசருக்கு உபதேசித்தார். இவ்வாறாக, ஞானத்தின் முதிர்ந்த நிலையில், தனது குருவான நாரதரின் கட்டளைப்படி, வியாச தேவர், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் லீலைகளை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவில் நமக்கு அருளினார். நாரத முனிவர் ருக்மணி பிராட்டியாருக்கு வியாசர் அருளிய பாகவதத்தை சொன்னார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்