About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்
Showing posts with label 019 திருநாகை. Show all posts
Showing posts with label 019 திருநாகை. Show all posts

Tuesday, 2 January 2024

108 திவ்ய தேசங்கள் - 019 - திருநாகை 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||019. திருநாகை||
||நாகப்பட்டினம்||
||பத்தொண்பதாவது திவ்ய க்ஷேத்ரம்||

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 10

திருமங்கையாழ்வார்
001. திவ்ய ப்ரபந்தம் - 1758 - பெரிய திருமொழி - 9.2.1
பொன் இவர் மேனி மரகதத்தின்* பொங்கு இளஞ் சோதி அகலத்து ஆரம்மின்* 
இவர் வாயில் நல் வேதம் ஓதும்* வேதியர் வானவர் ஆவர் தோழீ*
என்னையும் நோக்கி என் அல்குலும் நோக்கி*
ஏந்து இளங் கொங்கையும் நோககுகின்றார்*
அன்னை என் நோக்கும் என்று அஞ்சுகின்றேன்* அச்சோ ஒருவர் அழகியவா|

002. திவ்ய ப்ரபந்தம் - 1759 - பெரிய திருமொழி - 9.2.2
தோடு அவிழ் நீலம் மணம் கொடுக்கும்* சூழ் புனல் சூழ் குடந்தைக் கிடந்த*
சேடர்கொல் என்று தெரிக்கமாட்டேன்* செஞ் சுடர் ஆழியும் சங்கும் ஏந்தி*
பாடக மெல் அடியார் வணங்கப்* பல் மணி முத்தொடு இலங்கு சோதி*
ஆடகம் பூண்டு ஒரு நான்கு தோளும்* அச்சோ ஒருவர் அழகியவா|

003. திவ்ய ப்ரபந்தம் - 1760 - பெரிய திருமொழி - 9.2.3
வேய் இருஞ் சோலை விலங்கல் சூழ்ந்த* 
மெய்ய மணாளர் இவ் வையம் எல்லாம்*
தாயின நாயகர் ஆவர் தோழீ* தாமரைக் கண்கள் இருந்த ஆறு*
சேய் இருங் குன்றம் திகழ்ந்தது ஒப்பச்* செவ்விய ஆகி மலர்ந்த சோதி*
ஆயிரம் தோளொடு இலங்கு பூணும்* அச்சோ ஒருவர் அழகியவா|

004. திவ்ய ப்ரபந்தம் - 1761 - பெரிய திருமொழி - 9.2.4
வம்பு அவிழும் துழாய் மாலை தோள் மேல்* கையன ஆழியும் சங்கும் ஏந்தி*
நம்பர் நம் இல்லம் புகுந்து நின்றார்* நாகரிகர் பெரிதும் இளையர்*
செம் பவளம் இவர் வாயின் வண்ணம்* தேவர் இவரது உருவம் சொலலில்*
அம் பவளத் திரளேயும் ஒப்பர்* அச்சோ ஒருவர் அழகியவா|

005. திவ்ய ப்ரபந்தம் - 1762 - பெரிய திருமொழி - 9.2.5
கோழியும் கூடலும் கோயில் கொண்ட* கோவலரே ஒப்பர் குன்றம் அன்ன*
பாழி அம் தோளும் ஓர் நான்கு உடையர்* 
பண்டு இவர்தம்மையும் கண்டறியோம்*
வாழியரோ இவர் வண்ணம் எண்ணில்* 
மா கடல் போன்று உளர் கையில் வெய்ய*
ஆழி ஒன்று ஏந்தி ஓர் சங்கு பற்றி* அச்சோ ஒருவர் அழகியவா|

006. திவ்ய ப்ரபந்தம் - 1763 - பெரிய திருமொழி - 9.2.6
வெம் சின வேழ மருப்பு ஒசித்த* வேந்தர்கொல்? ஏந்திழையார் மனத்தை*
தஞ்சு உடையாளர்கொல்? யான் அறியேன்* தாமரைக் கண்கள் இருந்த ஆறு*
கஞ்சனை அஞ்ச முன் கால் விசைத்த* காளையர் ஆவர் கண்டார் வணங்கும்*
அஞ்சன மா மலையேயும் ஒப்பர்* அச்சோ ஒருவர் அழகியவா|

007. திவ்ய ப்ரபந்தம் - 1764 - பெரிய திருமொழி - 9.2.7
பிணி அவிழ் தாமரை மொட்டு அலர்த்தும்*
பேர் அருளாளர்கொல்? யான் அறியேன்*
பணியும் என் நெஞ்சம் இது என்கொல்? தோழீ*
பண்டு இவர்தம்மையும் கண்டறியோம்*
அணி கெழு தாமரை அன்ன கண்ணும்*
அம் கையும் பங்கயம் மேனி வானத்து*
அணி கெழு மா முகிலேயும் ஒப்பர்* அச்சோ ஒருவர் அழகியவா|

008. திவ்ய ப்ரபந்தம் - 1765 - பெரிய திருமொழி - 9.2.8
மஞ்சு உயர் மா மதி தீண்ட நீண்ட* மாலிருஞ்சோலை மணாளர் வந்து* என்
நெஞ்சுள்ளும் கண்ணுள்ளும் நின்று நீங்கார்*
நீர்மலையார்கொல்? நினைக்கமாட்டேன்*
மஞ்சு உயர் பொன்மலைமேல் எழுந்த*
மா முகில் போன்று உளர் வந்து காணீர்*
அம் சிறைப் புள்ளும் ஒன்று ஏறி வந்தார்* அச்சோ ஒருவர் அழகியவா|

009. திவ்ய ப்ரபந்தம் - 1766 - பெரிய திருமொழி - 9.2.9
எண் திசையும் எறி நீர்க் கடலும்* ஏழ் உலகும் உடனே விழுங்கி*
மண்டி ஓர் ஆல் இலைப் பள்ளி கொள்ளும்* 
மாயர்கொல்? மாயம் அறிய மாட்டேன்*
கொண்டல் நல் மால்வரையேயும் ஒப்பர்*
கொங்கு அலர் தாமரைக் கண்ணும் வாயும்*
அண்டத்து அமரர் பணிய நின்றார்* அச்சோ ஒருவர் அழகியவா|

010. திவ்ய ப்ரபந்தம் - 1767 - பெரிய திருமொழி - 9.2.10
அன்னமும் கேழலும் மீனும் ஆய* ஆதியை நாகை அழகியாரை*
கன்னி நல் மா மதிள் மங்கை வேந்தன்* காமரு சீர்க் கலிகன்றி* 
குன்றா இன் இசையால் சொன்ன செஞ்சொல் மாலை*
ஏழும் இரண்டும் ஓர் ஒன்றும் வல்லார்*
மன்னவர் ஆய் உலகு ஆண்டு* மீண்டும் வானவர் ஆய் மகிழ்வு எய்துவரே|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

Thursday, 28 December 2023

108 திவ்ய தேசங்கள் - 019 - திருநாகை 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||019. திருநாகை||
||நாகப்பட்டினம்||
||பத்தொண்பதாவது திவ்ய க்ஷேத்ரம்||

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார் - 10 பாசுரங்கள்

001. திருமங்கையாழ்வார் - 10 பாசுரங்கள் 
1. பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்) 

  • திவ்ய ப்ரபந்தம் - 1758 - 1767 - ஒண்பதாம் பத்து - இரண்டாம் திருமொழி

--------------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி

தனியன்
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ|

அந்தாதி
சேர்ந்து உனக்குக் குற்றேவல் செய்திலன் என் சிந்தையில் நீ*
ஆர்ந்ததற்கு ஓர் கைம்மாறு அறிகிலேன் பூந்துவரை*
மன்னா கை ஆழி வலவா வலம் புரியாய்*
தென் நாகாய் அருளிச் செய்|

  • பூ துவரை மன்னா - அழகிய துவாரகாபுரிக்கு அரசனே!
  • கை ஆழி வலவா வலம் கை ஆழியாய் - வலத்திருக்கையில் சுதர்சநம் என்னும் சக்கரத்தை உடையவனே!
  • வலம் புரியாய் - இடத்திருக்கையில் பாஞ்ச ஜந்யம் என்னும் வலம்புரிச் சங்கத்தை உடையவனே!
  • தென் நாகையாய் - அழகிய திருநாகை என்னும் தலத்தில் எழுந்தருளி இருப்பவனே!
  • சேர்ந்து உனக்கு குறு ஏவல் செய்திலன் - அடியேன் இது வரையில் உன்னைச் சரணமாக அடைந்து உனக்குச்
  • சிறிய கைங்கரியத்தையும் செய்தேன் இல்லை. அவ்வாறு இருக்கவும்
  • என் சிந்தையில் - அடியேனது மனத்தில்
  • நீ ஆர்ந்ததற்கு - காரணமின்றி எழுந்த பெருங்கருணையோடு நீ நன்றாக எழுந்தருளி இருப்பதற்கு
  • ஓர் கைம்மாறு அறிகிலேன் - ஒரு பிரதி உபகாரத்தையும் அறியேன்
  • அருளிச்செய் - ஏதேனும் இருப்பின் அதனை இன்னதென்று நீ அடியேனுக்குக் கூறி அருள்வாயாக

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

Wednesday, 27 December 2023

108 திவ்ய தேசங்கள் - 019 - திருநாகை 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||019. திருநாகை||
||நாகப்பட்டினம்||
||பத்தொண்பதாவது திவ்ய க்ஷேத்ரம்||

||ஸ்ரீ ஸௌந்தர்ய ராஜப் பெருமாள் திருக்கோயில்||

||ஸ்ரீ ஸௌந்தர்யவல்லி தாயார் ஸமேத ஸ்ரீ ஸௌந்தர்ய ராஜன் பெருமாள்|| 
||திருவடிகளே சரணம்||

  • பெருமாள் மூலவர் - ஸௌந்தர்ய ராஜன்
  • பெருமாள் உற்சவர் - நீலமேகம்
  • தாயார் மூலவர் - ஸௌந்தர்ய வல்லி
  • தாயார் உற்சவர் - கஜலட்சுமி
  • திருமுக மண்டலம் திசை - கிழக்கு 
  • திருக்கோலம் - நின்ற 
  • புஷ்கரிணி/தீர்த்தம் - ஸார
  • விமானம் - ஸௌந்தர்ய
  • ஸ்தல விருக்ஷம் - மாமரம்
  • ப்ரத்யக்ஷம் - நாகராஜன், கலியன், ப்ரம்ஹாதிகள்
  • ஆகமம் - பாஞ்சராத்ரம்
  • ஸம்ப்ரதாயம் - தென் கலை
  • மங்களாஸாஸநம் - 1 ஆழ்வார்
  • பாசுரங்கள் - 10

--------------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி


ஸ்தல புராணம்

தசாவதாரங்களை விளக்கக்கூடிய செம்பு தகட்டாலான மாலை பெருமாளின் இடையை அலங்கரிப்பதை பார்க்க புண்ணியம் செய்திருக்க வேண்டும். ஆதிசேஷனால் உண்டாக்கப்பட்ட சார புஷ்கரிணியில் நீராடி பெருமாளை வழிபட்டால் அவர்கள் சூரிய மண்டலத்தை அடைவார்கள் என்பது ஐதீகம். இங்குள்ள அஷ்டபுஜ துர்க்கையும் சக்தி வாய்ந்தவள். திருமங்கை ஆழ்வார் இத்தல பெருமாளின் அழகில் மயங்கிய நிலையில் ஒண்பது பாசுரங்களை பாடி விட்டு பத்தாவது பாடலில் தான் இத்தலத்தின் பெயரை குறிப்பிடுகிறார். கண்டன், சுகண்டன் என்ற இரு அந்தண சகோதரர்கள் நிறைய கொடும் செயல் புரிந்து வந்தார்கள். ஒரு நாள் இவர்கள் சார புஷ்கரிணியில் நீராடினார்கள். உடனே அவர்கள் பாவம் நீங்கி வைகுண்டம் சென்றார்கள்.  இவர்களது சிற்பங்களை பெருமாள் சன்னதியில் வைத்துள்ளார்கள்.

உத்தான பாத மகாராஜனின் குமாரன் துருவன். சிறுவனான இவன் நாரதர் மூலம் இத்தலத்தின் பெருமையை அறிந்தான். உலகம் முழுவதும் தனக்கே அடிமையாக வேண்டும் என்று பெருமாளை குறித்து தவம் செய்தான். இவனது தவத்தை கலைக்க தேவர்கள் இடைஞ்சல் செய்தனர். இருப்பினும் தவத்தை வெற்றிகரமாக முடித்த துருவன் முன்பு பெருமாள் கருடன் மீது அமர்ந்து பேரழகு பொருந்தியவராக தரிசனம் தந்தார். பெருமாளின் பேரழகில் மயங்கிய துருவன் தான் கேட்க வந்த வரத்தை மறந்தான். இறைவனது பேரழகே போதும். இதில் தான் உண்மையான சுகம் இருக்கிறது. அந்த பேரழகை எப்போதும் தரிசிக்கும் பாக்கியத்தை தர வேண்டும் என பெருமாளிடம் கேட்டான். பெருமாளும் தனது ஸௌந்தர்யமான திருக்கோலத்தை துருவனுக்கு காட்டி அவன் தவமிருந்த தலத்திலேயே தங்கினார். அழகான இவர் "ஸௌந்தர்ய ராஜப் பெருமாள்' என்று அழைக்கப்படுகிறார். 

நரசிம்மர் இங்கு எட்டு கரத்துடன் அஷ்டபுஜ நரசிம்மராக அருள்பாலிக்கிறார். ஒரு கை பிரகலாதனை ஆசிர்வதிப்பது போலவும், ஒரு கை அபய முத்திரையையும் காட்டுகிறது. மற்ற கைகள் இரண்யனை வதம் செய்கின்றன. பிள்ளைப் பெருமாள் ஐயங்கார், திருக்குருகைப் பெருமான் கவிராயர், முத்துச்சாமி தீட்சிதர் ஆகியோரின் பாடல்கள் இப்பெருமாளின் பேரழகைப் பாடுகின்றன. நாகங்களுக்கெல்லாம் தலைவனான ஆதிசேஷன் இத்தலத்தில் ஒரு தீர்த்தம் உண்டாக்கி அதற்கு "சார புஷ்கரணி' என்று பெயரிட்டு அதன் கரையில் அமர்ந்து பெருமாள் குறித்து தவமிருந்தார். பெருமாளும் மகிழ்ந்து தனது படுக்கையாக ஏற்றுக்கொள்வதாக இத்தலத்தில் அருள்புரிந்தார். நாகம் (ஆதிசேஷன்) பெருமாளை ஆராதித்ததால் அவரது பெயராலேயே இவ்வூர் நாகப்பட்டினம் ஆனது.  

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்